நயினை ஸ்ரீ நாகபூஷணி ஆடிப்பூர உற்சவம்

.
'உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க் கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எங்கள் விழுத்துணையே'

என அபிராமிப்பட்டர் அன்னையின் அருளொழுகு திருக்கோலத்தை வர்ணிக்கின்றார். அன்பர் என்பவர்க்கு நல்லன எல்லாம் தருபவனாக அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லியாக அன்னை பராசக்தி நயினையம்பதியில் அருளாட்சி நடத்துகின்றாள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புகளைக் கொண்டது நயினையம்பதி. ஆன்ம சாந்தி தரும் சக்தி பீடமாக அமைந்துள்ளதும் இப்பதியாகும்.

நாடி வரும் அடியவர்களுடைய வினைகளையெல்லாம் தீர்ப்பவள் அன்னை நாகபூஷணி. அலைகடலில் மிதந்து, அருட்கடலை நாடி வரும் அடியார்களைத் தாங்கி, அருளமுதை அள்ளி, அள்ளிக் கொடுக்கின்றாள். காலாதி காலமாக முழுமையான நம்பிக்கையோடு அம்பிகையை வழிபட்டு நல்லருளைப் பெற்று நற்பேறு அடைந்த அடியார்கள் அனேகர். பாம்பாகத் தோன்றி அடியார்களைத் தன் வசம் ஈர்க்கின்ற அம்பிகையின் அற்புதங்களைக் காணலாம்.

அம்பிகையானவள் உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் தாயாவாள். அனைத்து உயிர்களையும் தோற்றுவித்த அன்னையல்லவா. அம்பிகையின் அதிசயங்களை விபரிக்க முடியாது. அலைகடலிலே அனுதினமும் அடியார்கள் பிரயாணம் செய்து, அன்னையவளின் ஆலயத்திற்கு வந்து நெக்குருகி நின்று நினைந்து வழிபடும் பக்தியை விபரிக்க முடியாது.

நாகதோஷத்தை நிவர்த்தி செய்து பிள்ளைப் பேரடைந்தோர் பலர். நோய்கள், பிணிகளைத் தங்கள் நேர்த்திக்கடன் மூலம் போக்கியோர் பலர். பலவித இடர்கள், துன்பங்கள், துயரங்கள் எல்லாம் அன்னையின் அருளால் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்திடப் பெற்றோர் பலர். இவ்வாறு அடியார்கள் அம்பிகையின் மீது நம்பிக்கை வைத்து, நாள்தோறும் மட்டுமல்லாது உற்சவ காலங்களிலும் தைப்பூசம், ஆடிப் பூரம் போன்ற விசேட தினங்களிலும் நயினையம்பதிக்குச் செல்கின்றார்கள்.

ஓம் சக்தி, சக்தி என்று கடல் அலைகள் துதி பாட உதய சூரியனின் வெண் பொற்கதிர்கள் அன்னையவளின் கோபுரத்தின் மீது படர்ந்து 'பளிச' என ஒளிவீச தெய்வீகத்தின் திருவருளே இது என அடியார்கள் வியப்புற அன்னை நாகபூஷனி நயினையிலே அருளாட்சி செய்து வருகின்றாள். அடியார்கள் 'அரோகரா' என்று வந்து கால்பதிக்கின்ற இறங்குதுறை நயினையம்பதிக்கு இயற்கையால் கொடுக்கப்பட்ட தோற்றமாகும். இவ்வழகிய தோற்றத்தை வேறெங்கும் காண முடியாது. அம்பிகையின் அருட்கடாட்சமாகும். இவ்வாறு கால்பதிக்கின்ற அடியார்கள் அம்பிகையின் ஆலயத்தைக் கண்டவுடன் அவர்களது மனதிலுள்ள கவலைகள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன. அடியார்களின் கண்ணீரைக் காணிக்கையாக ஏற்று, நெஞ்சக்கனகல்லை உருகச் செய்கின்றாள்.

மண்ணில் நல்லவண்ணம் வாழ வழிகாட்டி நிற்கும் அன்னை நாகபூஷணியைப் பற்றி நயினைப் புலவர் வரகவி நாகமணிப் புலவர் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்.

'பெற்றதாலன்னை பெறுமுயிரனைத்தும்,
பேணலாலன்னை பெற்றிடுவோர்
உற்றதாலன்னை விரும்பிய அனைத்தும்
உதவ லாலன்னை எக்கலையும்
சொற்றதாலன்னை உலகொடுவானும்,
தொழுதலாலன்னை யென்றென்றும்
பற்றதால் கருணை பொழிதலாலன்னை
பராபரை நாகபூஷணியாள்

சரித்திர காலத்திற்கு முற்பட்ட நாக வழிபாட்டை எடுத்துக் காட்டும் சிவ சின்னமாக அம்பிகையின் ஆலயம் அமைந்துள்ளது. இதற்கு எடுத்துக் காட்டாக ஆலயத்தின் வடகடலில் பாம்பு சுற்றிய கல், கருடனிருந்த கல் என இரண்டு கற்கள் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு பூசைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருவிழாக் காலங்களில் குறிப்பாகப் பதினொருந் திருவிழாவன்று இரண்டு கற்களுக்கும் விசேட பூசைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருவது வழக்கம். அச்சந்தர்ப்பத்தில் கருடப் பறவைகள் வானத்தில் வட்டமிட்டுச் சரித்திர சான்றுகளை அடியார்களுக்கு நினைவுபடுத்துகின்றன.

இவ்வருடம் நடைபெற்ற 11 ஆம் திருநாளன்றும், தேர் உற்சவத்தின் போதும் கருடப் பறவைகள் ஆலயத்தைச் சுற்றி வலம் வந்ததை அடியார்கள் நேரில் கண்டுகளித்து, அம்பிகையின் அருளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பிகையின் இவ்வருட ஆடிப்பூர உற்சவம் நாளை வியாழக்கிழமை (11.08.2010) மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

இவ்உற்சவம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்று வருவது அடியார்களுக்கு நினைவிருக்கலாம். இறுதி நாளான நாளை அம்பிகையின் ஆடிப்பூர உற்சவம் பெருந்திரளான அடியார்கள் மத்தியில் நடைபெறுகின்றது. அம்பிகைக்கு அதிகாலையில் இருந்தே விசேட பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அம்பிக்கைக்கு 1008 மகா சங்காபிஷேகம் இலட்சார்ச்சனை என்பன சிறப்புடன் நடைபெறுகின்றன. தொடர்ந்து நடைபெற்று வந்த இலட்சார்ச்சனை ஆடிப் பூரத்திலன்று பூர்த்தியாவது விசேட அம்சமாகும். அம்பிகைக்கு விசேட தீபாராதனைகளும் இடம்பெற்று மின்சார தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட 'தாமரைப் பூ' வாகனத்தில் அடியார்கள் புடை சூழ, மேள வாத்தியங்கள் முழங்க பவனி வருகின்ற அலங்கார காட்சியைக் காணக் கல் நெஞ்சமும், கசிந்துருகத்தான் செய்யும்.

'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' அம்பிகையின் திரு உலாக் காட்சியை கண்டு அடியார்கள் வழிபடுவார்கள். ஆடிப் பூரத்திலன்று பெண்கள் 'பால்குடம்' எடுத்து தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி அம்பிகையின் அருளமுதைப் பெற்றுக் கொள்வார்கள்.

சர்வமத சந்நிதியாக விளங்குகின்ற அன்னையவளின் ஆலயத்தில் நிகழும் ஆடிப்பூர உற்சவத்தைக் கண்டு அன்னையின் அருளமுதைப் பெற்றுக் கொள்வதற்காகப் போக்குவரத்து கஷ்டங்களையும் பொருட்படுத்தாது அடியார்கள் பெருந்திரளாக நற்றவம் மிக்க நயினையம்பதியில் கூடுவார்கள். ஆடிப்பூரத்தில் தன்னை வழிபட வந்த அடியார்களை அரவணைத்து அருளமுதை அள்ளிக்கொடுக்கின்ற அருட்காட்சியை இங்கு காணலாம்.

அம்பிகையின் உயர் திருவிழா உட்பட தைப்பூசம் ஆடிப் பூரம் போன்ற விசேட உற்சவங்களுக்கும் வருகை தருகின்ற அடியவர்களுக்கு 'அமுதசுரபி' அன்னதான சபையினர் அமுது வழங்கும் பெரும்பணியை வருடா வருடம் செய்து வருகின்றார்கள்.

அதுமட்டுமல்லாது நாள்தோறும் அம்பிகையைத் தரிசிக்க வரும் மெய்யடியார்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கும் திருத்தொண்டையும் ஆலய அறங்காவலர் சபையினர் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நன்றியுடன் கூற வேண்டிய நண்பணியாகும்.

அன்னதானப் பணி தொடரவும் நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவும் அம்பிகையைப் பிரார்த்திப்போமாக!

நயினை நாக. குமாரசூரியர்.
நன்றி யாழ் மண்

No comments: