நெருப்பின் கனல் - கவிதை -செ.பாஸ்கரன்

 .


அவள் விழியோரங்களில் கண்ணீர்த் துளி
நெஞ்சு விம்மி தணியும் சோகம்
ஆண்துணை இல்லாதவள் என்று
அழைக்கும் குரல்கள் அவளை அச்சமூட்டியது
நட்பின் போர்வையில் புகுந்து கொண்டு
நடிக்கும் ஆண்களின் அரக்கத்தனம்
அவளை ஆத்திரமூட்டியது
அவளின் விசும்பும் ஒலிகளுக்குள்
வெட்டருவாள்போல் விழுகின்ற வார்தைகள்
அவன் நட்புடன்
செவிமடுத்துக் கொண்டிருந்தான்
இவனாவது நண்பனாய் இருக்கிறானே என்ற
நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது.

தேனீர்க்கோப்பையை அவனுக்காய் நீட்டினாள்
தளிர் விரல்கள் நர்த்தனமாடின
வாங்கும் தருணத்தில்
அவள் விரல்களையும் தீண்டிக்கொண்டான்
தற்செயல் என்று அவள் சிரித்தாள்
தனக்கான அங்கீகாரம் என அவன் நினைத்தான்
பேசிக் கொண்டிருந்தவளின் சின்ன விரல்களை
பற்றிக்கொண்டவன் பார்வையில்
நட்பிற்கு பதிலாய் காமம் தெரிந்தது
அவள் தலைகவிழ்ந்தாள்
நட்பின் விழுமியங்களும் கவிழ்ந்து கொண்டது
இப்போது அவள் விழிகளில்
தெரிவது கண்ணீரல்ல
நெருப்பின் கனல் ,
அவள் நிமிர்ந்து கொண்டாள்.

4 comments:

karuppy said...

சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களை அழகாக காட்டும் கவிதை. ஒரு ஆண் மகன் இக் கவிதையை எழுதியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி .
கறுப்பி

Ramesh said...

quote ஒரு ஆண் மகன் இக் கவிதையை எழுதியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி .

கவிஞர் நல்லாத்தான் கவி எழதியிருக்கிறார்.
ஆனா வீட்டபோய் பார்த்தால்தானே தெரியும் கவிதயில் எழுதியவாறு நடக்காமல் கவிதை மாரி நடக்கின்றாரா என்று.

quote அவள் தலைகவிழ்ந்தாள்
நட்பின் விழுமியங்களும் கவிழ்ந்து கொண்டது.

நல்ல அருமையான வரிகள். பாராட்டுக்கள்

kirrukan said...

பக்தி என்ற பெயரில் காமத்தை காட்டும் பொழுது(நித்தியானந்திகள்)
நட்பு என்ற பெயரில் காமத்தை காட்டுறது தப்பே இல்ல

எனுங்கோ நான் சொல்லுறதில எதாவது தப்பு இருக்கோ?

கவிஞரே கவிதை கலக்குதே

c.Paskaran said...

உங்கள் மகிழ்ச்சிக்கு நன்றி கறுப்பி. இருந்தாலும் பெண்களே தங்கள் பிரச்சினையை சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் அது சரி நீங்கள் வெள்ளையா கறுப்பா? அத விட ஆணா பெண்ணா? விடை கிடைக்குமா?

ரமேஸ் வாற சனிக்கிழம நேரமிருந்தா வாருங்கோவன் வீட்டுப்பக்கம் . இரவு சாப்பிட்டதாகவும் இருக்கும். கவிதையில எழுதுகிற மாரி நடக்கிறாரா எண்டு பார்த்ததாயும் இருக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி ரமேஸ்

கிறுக்கன் ஒன்று சொன்னாலும் ஆயிரம் சொன்னமாரி இருக்கு அப்பிடியெல்லாம் சொல்ல மாட்டன் மிஸ்டர் கிறுக். பரந்து பார்க்கின்றீர்கள் நன்றி