மழை இருட்டு - எஸ்.ராமகிருஷ்ணன்

.

முந்தாநாள் மாலை நான்கு மணியிருக்கும். பாலாவின் அவன்இவன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன். வெளியே பாருங்கள். அதற்குள் இருட்டிவிட்டது என்ற குரல் கேட்டது. அறையை விட்டு வெளியே வந்து நின்று பார்த்தேன். சுற்றிலுமிருந்த மரங்கள் தெரியவில்லை. சட்டென பகல் மறைந்து எங்கும் இருண்டிருந்தது. இது அன்றாடம் காணும் இருளில்லை.

சிம்னியை கரிப்புகை மறைத்து கொண்டிருப்பது போல பகல்வெளிச்சத்தை இந்த இருள் மூடிக் கொண்டுவிட்டதோ என்று தோன்றியது. மாலை நான்கு மணிக்கு இப்பிடி இருண்டு போவது அபூர்வம். ஆகாசத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். நிலை கொள்ளாமல் மழைமேகங்கள் திரண்டு குமுறிக் கொண்டிருந்தன. காற்று ஒடுங்கியிருந்தது. கட்டிடங்கள், வாகனங்கள், தொலைவில் நடமாடும் மனிதர்கள் என்று தினசரி காணும் காட்சிகள் யாவும் உருமாறியிருந்தன.

அந்த இருட்டு அபூர்வமானதாகயிருந்தது. மழைவரப்போகிறது என்ற பேச்சு பலரிடமும் வெளிப்பட்டது. வயதை மறந்து வெவ்வேறு ஆட்கள் வானத்தை ஏறிட்டுப் பார்த்தபடியே ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். இப்படி வானம் இருண்டு குமுறி மழை வந்து நெடுங்காலமாகிவிட்டது.

இன்றைக்கு நிச்சயம் நல்ல மழை பெய்யக்கூடும் என்று நினைத்தபடியே ஆகாசத்தைப் பார்த்து கொண்டிருந்தேன். பறவைகளைக் காணவில்லை. எங்கும் மெல்லிய ஈரம் படிந்தது போல குளிர்ச்சியை உணரத் துவங்கினேன். அந்த இடம் திடீரென காணாத உலகின் ஒரு பகுதி போலிருந்தது. தூரத்தில் எங்கோ மழை பெய்கிறது. அதன் மணம் காற்றேறி கமழ்வதை உணர முடிந்தது. இருட்டாகிவிட்டது என்று ஒருவர் கூட விளக்கு வைக்கவில்லை.

எல்லோருக்கும் அந்த மழை இருட்டுப் பிடித்திருந்தது போலும். நிழல்களைப் போலவே நடமாடியபடி இருந்தனர். அவர்கள் முகத்தில் ஒரு சிரிப்பு ஒளிந்து கொண்டிருப்பதை காண முடிந்தது. இருட்டு மெல்ல முறுக்கேறத் துவங்கியது. வானத்திற்கும் பூமிற்கும் இடையில் இருள் ஒரு நீள்பரப்பை உருவாக்கியிருந்தது. தூரத்துவீடுகளின் மாடியில் பெண்கள் ஒடியோடி காயப்போட்டிருந்த உடைகளை எடுத்து கொண்டிருப்பது விசித்திரமான ஒரு நிழல்காட்சி போல தெரிந்தது. காய்ந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று திகைத்து போய் அங்குமிங்கும் பார்த்தபடி இருந்தது.

வெளிச்சம் முழுவதுமாக ஒடுங்கியது. இருள். திரட்சியில்லாத இருள். கடற்கரை மணலைப் போல குறுகுறுப்பாக உள்ள இருள். எங்கும் நீக்கமற நிரம்பியது. மழை பெய்வது என்ற பெரும் நாடகம் துவங்கப்போவதன் முன்னோட்டக்காட்சி போலிருந்தது. ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டேன். அருகாமையில் இருந்த பெரிய கட்டிடம் இப்போது புலப்படவில்லை. அது இருளில் முழ்கியிருந்தது. தட்டானின் சிறகடிப்பு போல வானில் சிறிய அசைவு. ஆனால் மழை பொழிவு கொள்ளவில்லை.

குழந்தையின் கன்னத்தை வருடுவது போல காற்று மிக மெதுவாக நிதானமாக கடந்து போனது. என்ன ஒரு ஆனந்தம். உடல் நீண்டு காகிதம் போல படபடப்பு கொள்கிறது. காற்றை அப்படி சாதாரண நாட்களில் உணர முடிவதேயில்லை. இருளும் காற்றும் மெல்ல ஒன்று கலக்கின்றன.

வீடுகளுக்குள் ஆட்கள் ஒடுங்கிவிட்டார்கள். வீதிகள் காலியாக இருக்கின்றன. ஆனால் சாலையில் இயக்கம் குறையவில்லை. அதன் ஒசை விட்டுவிட்டு கேட்டபடியே இருக்கிறது. இருள் என் மீது ஒரு நீர்பூச்சி போவது போல மிக இயல்பாக ஏறிச் செல்கிறது. மழையை எதிர்ப்பார்த்த மனது விம்முகிறது. தண்ணீரை போல மனிதனை எப்போதும் வியப்பு கொள்ள செய்யும் வேறு பொருள் எதுவும் உலகில் இல்லை. எந்த வடிவத்தில் எவ்வளவு முறை பார்த்தாலும் தண்ணீர் அலுப்பதேயில்லை

ஆகாசம் இப்போது தெரியவில்லை. காலடியில் உள்ள மண் கூட மறைந்து போயிருந்தது. கொட்டுக்காரர்கள் வாசிக்க துவங்கும் முன்பாக தங்களது மேளத்தை துடைத்து கொள்வார்கள். லேசாக தட்டி தட்டி சுதி பார்ப்பார்கள். அப்படியான ஒசை வானில் கேட்டுக் கொண்டிருந்தது.பகல் பாதியில் முடிந்து போவது என்றோ ஒரு முறை தான் சாத்தியமாகிறது. கோடை காலங்களில் நீண்ட பகலை கண்டிருக்கிறேன். குளிர்நாடுகளில் குறுகிய பகலையும் கண்டிருக்கிறேன். ஆனால் இது பாதியில் அறுபட்ட பகல்.

சிறுவயதில் எதற்காக இரவு வருகிறது என்று ஆத்திரமாக இருக்கும்.பாதியில் விளையாட்டை நிறுத்திவிட்டு உறங்க போகவேண்டும் என்பது எரிச்சல் ஊட்டக்கூடிய ஒன்று. சில நாட்கள் பகல். சில நாட்கள் இரவு என்று மாறி மாறி வந்தால் நன்றாக இருக்குமே என்றெல்லாம் கற்பனை செய்திருக்கிறேன்.

பள்ளிவயதில் ஒருமுறை இது போல பாதி பகலில் மழைமேகம் கூடி இருண்டு கொண்டுவந்தது. அவசரமாக மூன்று மணிக்கே பள்ளியை விடுமுறை அறிவித்து வீட்டிற்கு போக சொன்னார்கள். பள்ளி மைதானத்தை கடப்பதற்குள் இருள் கூடிவிட்டது. மாணவர்கள் ஆர்ப்பாட்டத்துடன் கத்தியபடியே ஒரு இடத்தில் நின்று ஆடத்துவங்கினார்கள். மாணவிகளோ பயந்து போய் மழைக்குள் வீடு போய்விட வேண்டும் என்று ஒட ஆரம்பித்தார்கள்.

விடிகாலையில் காண்பது போன்ற மெல்லிய வெளிச்சம் வீதியில் படர்ந்திருந்தது. மழை ஒடிவந்து முதுகை தொட்டுவிடுமோ என்று அஞ்சியது போல மாணவிகள் ஒடிக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீடு இருந்த வளைவில் திரும்பிய போது மழை பெய்ய துவங்கியது. அதை மழை என்ற எளிய சொல்லால் விவரிக்க முடியவில்லை. ஒரு பேரோசை. பெருவெடிப்பு. ஆவேசம். கொந்தளிப்பு. இப்படியான அத்தனை சொற்களையும் அதனுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். அப்படியானதொரு மழை. இதோ தொட்டுவிடலாம் என்ற தூரத்தில் இருந்த வீட்டிற்குள் போக முடியவில்லை. வீதியை பெயர்த்து எடுத்து வீசிவிட முயன்றது போன்ற ஆவேசம் கொண்ட மழை.

மழையின் நூறுகைகள் ஒடமுடியாமல் தடுத்து முகத்தில் , பிடறியில் முதுகில் அடித்து நிறுத்தியது. பள்ளிக்கூட புத்தகம் நோட்டு வைத்திருந்த எனது பை கைபிடி அறுந்து கிழே விழந்தது. குனிந்து எடுப்பதற்குள் அத்தனையும் மழையில் நனைந்துவிட்டது. சொட்ட சொட்ட நனைந்தபடியே ஒடி வீட்டு திண்ணையில் ஏறி நின்று கொண்டேன். அருகாமையில் உள்ள வைக்கோல் படப்பை காற்று பிய்த்து வீசியிருந்தது. எங்கும் வைக்கோல்கள். மழை அதை பிய்த்து விளையாடிக் கொண்டிருந்தது. நாய்கள் கூட பயந்து போய் திண்ணையில் ஏறி நின்றிருந்தன. கைகளை மார்பின் குறுக்காக கட்டியபடியே மழையைப் பார்த்து கொண்டிருந்தேன்.

வேப்பமரத்தை வேரோடு பிடுங்கி வீசி எறிந்துவிட முயற்சிப்பது போல மழை ஆவேசமாகியது. வீட்டின் உள்ளே வந்துவிடும்படியாக என்னை கூப்பிட்டார்கள். எனக்கோ மழையைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.கையைப் பிடித்து உள்ளே இழுத்து கதவைச் சாத்தினார்கள். வீடு இருண்டு போயிருந்தனர். அன்றைக்கும் யாரும் விளக்கு வைக்கவில்லை. மூடிய கதவின் உள்ளே இருந்தபடியே மழையோசையை கேட்டுக் கொண்டிருந்தேன். நீண்ட நேரத்தின் பிறகு மழை வெறித்தது. வீதிக்கு வந்த போது நள்ளிரவு போலாகி இருந்தது. ஆனால் எங்கிருந்தோ மங்கிய ஒளி லேசாக பீறிடுவது போல தெரிந்தது.. பனிமூட்டமான நாட்களில் காணப்படுவது போன்ற வெளிச்சமது. ஈரமான வீதியில் இறங்கி நடந்தேன்

மழைக்குள் பிந்திய மண்ணில் கால்படுவது சுகமாக இருக்கும். அதற்காகவே வெறுங்காலோடு திரிந்தேன். மண் வீடு ஒன்று சரிந்து போயிருந்தது. கோழிகள் அடைக்கும் பஞ்சாரம் ஒன்று தூக்கி எறியப்பட்டு கிடந்தது. சொருகு ஒடுகளை காற்று பிய்த்து வீசியிருந்தது. ஆடுகள் நனைந்து துவட்டிவிட யாருமின்றி நின்று கொண்டிருந்தன. ஊரையே யாரோ சூறையாடிவிட்டு போனது போலிருந்தது. சிறுவர்கள் நாலைந்து பேர் ஒன்றாக ஒவ்வொரு தெருவாகப் போய் பார்த்து வந்தோம். நம்பவேமுடியவில்லை. அந்த மழை குப்பை குளம் என்ற காய்ந்து குப்பைகள் போடும் குளத்தை நிரப்பியிருந்தது.

வேலிச்செடிகளில் மழை தேங்கி நின்றிருந்தது. அதை அசைத்து மழைத்துளிகளை சிதறடித்தபடியே நடந்தோம். எங்கள் பள்ளி மைதானம் எங்கும் தண்ணீர் நிரம்பி போயிருந்தது. இரண்டாவது வகுப்பு நடக்கும் கூரை கட்டிடம் முழுவதுமாக சரிந்து போயிருந்தது. நிச்சயம் நாளைக்கு விடுமுறை தான் என்று என்கூட வந்த செல்வராஜ் சொன்னான். அப்படி சொல்லும் போது அவன் முகத்தில் இருந்த சிரிப்பு என்றும் மறக்கமுடியாத ஒன்று.

நாங்கள் தெருத்தெருவாகச்சுற்றி வழக்கமாக அமரும் கிணற்றடி ஒன்றின் அருகில் வந்த போது ஒரு மண்புழு போன தடமிருப்பதை நண்பன் சுட்டிகாட்டினான். மணி என்னவாக இருக்ககூடும் என்று தெரியவில்லை. அருகாமையில் உள்ள நூற்பாலையில் வேலை முடிந்து ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்படியானால் மணி இன்னும் ஆறு தான் ஆகிறதா. நம்பவேமுடியவில்லை. ஆட்கள் அந்த மழையை பற்றியும் இருளை பற்றியும் பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

நனைந்து போன மனிதர்கள் சூடாக தேநீர் குடிக்க டீக்கடையின் முன் நின்று கொண்டிருந்தார்கள். பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக ரேடியோவில் செய்தி கேட்பதற்காக ஆட்கள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நான் வீடு திரும்பிய போது அம்மா வேர்கடலை வறுத்து கொண்டிருந்தார்கள். மணலோடு கடலை வறுபடும் மணம். காத்திருந்து சூடான கடலையை காகிதத்தில் வாங்கி உடைத்து சாப்பிட்ட ருசி. அந்த மழையும் பகலில் தோன்றிய இருளும் மறக்க முடியாமல் இருந்தது. அதன் பின்பு அது போன்ற இன்னொரு பகலிது.

பகலில் தோன்றிய இருளை பார்க்க பார்க்க மனது உவகை கொள்ள துவங்கியது. உலகில் எந்த இரண்டு நாட்களும் ஒன்று போல இருப்பதேயில்லை. நாம் தான் ஒரே வேலையை ஒரே மாதிரி தினசரி செய்து கொண்டேயிருக்கிறோம். நமது சலிப்பை இப்படியான சில தருணங்கள் போக்கிவிடுகின்றன. அல்லது சுட்டிக்காட்டுகின்றன.

பார்த்து கொண்டிருந்த போதே முதல் மழை விழத்துவங்கியது. வேகமான மழை சில நிமிசங்களில் தணிய துவங்கியது. என்ன விளையாட்டு இது. எதற்காக இந்த பொய் நாடகம். அன்று மழை லேசான தூறலுடன் நின்று போனது. அந்த ஏமாற்றம் அங்கிருந்த ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் பகல் தன்னை மீட்டுக் கொண்டுவிட்டது. ஆனாலும் இயல்பான பகல் வெளிச்சமில்லை. மூடுதிரையின் உள்ளிருந்து உலகை காண்பது போன்ற காட்சியாக இருந்தது. நான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன். ஈரம்படிந்த சுவர்கள். மழை கண்ட தாவரங்கள். பாதி தூக்கத்திலிருந்து எழுந்து கொண்ட குழந்தையை போன்று ஒரு தனித்த அழகு அன்றைய நாளிற்கு இருந்தது. வீடு வந்து சேரும்வரை அன்று மனது களிப்போடு தானிருந்தது.

உலகம் என்றும் வியப்பானதே.அதன் ஒவ்வொரு காட்சிகளும் மயக்கமூட்டக்கூடியவையாகவே இருக்கின்றன. நாம் தான் பார்க்கவும், உணரவும் அதன் உள்ளாக கரைந்து போகவும் முழுமையாக பழகவில்லை, முனையவும் இல்லை.

நன்றி :sramakrishnan.com

No comments: