கந்தன் துதிபாடு பேதைமனமே!

.
- கவிஞர் க. கணேசலிங்கம்.

மயிலேறி வான மடமாதி னோடும்
மண்மீது வந்த எழிலின்
ஒயிலான கானக் குறமாதி னோடும்
ஒளிர்ஞான வேலும் மிளிர
மயல்கொண்ட வாழ்வு மருள்தீர உள்ளத்
தருள்பெய்து வேலன் வருவான்!
உயர்வான நல்லைப் பதிசென்று கந்தன்
துதிபாடு பேதை மனமே!

பகைகொண்ட சூரர் படைவென்று ஆறு
படைகொண்ட முருகன் மணியின்
நகைகொண்ட மாதின் நகைகண்டு காதல்
நலமுண்ட போதும் அருளின்
குகைகொண்ட நெஞ்சம் குடிகொண்டு வாழும்
குகனாகும,; பக்தி நெறியின்
மிகைகண்ட நல்லைப் பதிசென்று கந்தன்
அருளுண்ண முந்து மனமே!

புவிவாழ்வி லேமெய்ப் பொருள்காண வேண்டின்
புகழ்நல்லை சென்று தொழுவாய்!
அவவாழ்வி லேமெய் அலையுண்டு ஆசை
வலைவீசு மாதர் உடலில்
குவியின்பம் கண்டு தொழுநோய் உழன்றும்
அருள்கொண்ட அருண கிரியைக்
கவிபாட வைத்த தமிழ்த்தெய்வம் தன்னைக்
கனிவோடு பாடு மனமே!

No comments: