குருதிக் கொடை நிகழ்வு - 2010

.


அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகமும், செஞ்சிலுவைச்சங்கத்தின் இரத்த வங்கியும் இணைந்து மெல்பேனில் நடாத்திய குருதிக் கொடை நிகழ்வு - 2010

இலங்கையில் 1983ம் ஆண்டு, அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்து வருகிறது.

அந்த வகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் இறுதி நிகழ்வாக மெல்பேர்னில், இப்புனிதமான குருதிக் கொடை நிகழ்வு இன்று நடைபெற்றது.

27வது வருட கறுப்பு ஜுலை நினைவுகளுடன், 83 ஜூலையில் தமிழினம்மீது நடத்தப்பட்ட இன அழிப்பையும், இரத்தகளரியையும் நினைவு கூருவதோடு, அதன் பிற்பாடு ஈழத்தமிழரை அரவணைத்து, அடைக்கலம் தந்த அவுஸ்திரேலிய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக 13வது வருடமாக நடாத்தப்பட்ட இவ் “இரத்ததான நிகழ்வு”, இன்று ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 2.00 மணிவரை மெல்பேர்ன் SOUTHBANK இல் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்தவங்கியில் நடைபெற்றது.

தொடரும் எம் உறவுகளின் அவலநிலையை வெளிப்படுத்தியும், புலம்பெயர்ந்த அவுஸ்திரேலிய மண்ணிற்கு எமது அன்பை வெளிப்படுத்தியும் நடந்தேறிய இப் புனிதக் குருதிக்கொடையில் பெருமளவில் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களும், இளையோரும் உணர்வுடன் பங்களிப்பு வழங்கக் கூடியிருந்தனர். இருந்தும் அன்றைய தினத்தில் இரத்த வங்கியில் இருந்ந நேரவசதி கருதி 40 கொடையாளிகள் மாத்திரம் குருதிக் கொடை வழங்கக்கூடியதாக இருந்தது. நிகழ்வின் இறுதியில் பங்கெடுக்க வந்த அன்பர்களிற்கும், இன்று இப்புனிதக் கொடையில் பங்கு கொள்ள வசதியில்லாதவர்களிற்கும் வேறு ஒரு தினத்தில் குருதிக்கொடை வழங்க தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்களினால் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
“எம் குருதியால் நனைந்ந கறுப்பு ஜுலையை குருதிக்கொடையினால் நினைவு கொள்வோம்”
பா.ரமேஷ் (அவுஸ்திரேலிய த.பு.கழகம் சார்பில்)

No comments: