எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 92 நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா..?! முருகபூபதி

    நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா..?  பழகத்  தெரிந்த உயிரே உனக்கு விலகத்  தெரியாதா…?  


1963 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தஜோதி என்ற திரைப்படத்திற்காக  கவியரசு கண்ணதாசன் எழுதிய இந்தப்பாடலை, அவரது ஏனைய பல பாடல்களைப்போன்று  என்னால் மறக்கவே முடியாது. 

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நானும் எனது மாமா மகன் முருகானந்தனும் யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் ( தற்போதைய கனகரத்தினம் மத்திய கல்லூரி ) ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து  படித்த காலத்தில், அந்த விடுதிக்கு முன்னால் அமைந்திருந்த விளையாட்டுத்திடலில் நாம் மாலை வேளைகளில் விளையாடுவோம்.

தாச்சி மறிப்பு ( கிளித்தட்டு ) கிரிக்கட், உதைபந்தாட்டம் என்பன எமது பிரியத்திற்குரிய விளையாட்டுக்கள்.

அந்த மைதானத்திற்கு அருகிலிருந்த ஒரு வீட்டிலிருக்கும் வானொலியிலிருந்து  குறிப்பிட்ட நினைக்கத் தெரிந்த மனமே பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகும். 

அந்தத்திரைப்படத்தில் தோன்றும்   நாயகி தேவிகா                                    ( பின்னணிக் குரல் பி. சுசீலா ) , தனது


காதலனை                                ( எம்.ஜி.ஆர் ) நினைத்துப்பாடும் பாடல் அது.

  கமல்ஹாசன்  இந்தப்படத்தில்  நடிக்கும்போது அவருக்கு  ஒன்பது வயதுதான்!  அந்தக்குழந்தை நட்சத்திரம் தற்போது உலகநாயகனாக பிக்பொஸ் நடத்திக்கொண்டிருக்கிறார் !

அந்தப்பாடல் என்னை அக்காலப்பகுதியிலேயே கவர்ந்தமைக்கு காரணம் இருக்கிறது.

தொலைதூரத்திலிருந்து ( நீர்கொழும்பிலிருந்து ) சொந்த பந்தங்கள் ஏதுமற்ற வடபுலத்திற்கு படிக்க வந்திருந்தமையால்,  எனக்கும் மாமா மகன் முருகானந்தனுக்கும் எப்போதும் வீட்டு யோசனைதான். அதனை Homesick என அழைக்கத் தெரியாத பருவம் அது.

அடிக்கடி எங்கள் பூர்வீக ஊரும்,  குடும்பமும்,  பழைய நண்பர்களும் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.  எமது வீட்டுக்கவலையை கடிதங்களில் எழுதி எழுதி,   அடுத்து வந்த வருடங்களில்  ஊர்போய்ச்சேர்ந்துவிட்டோம்.

குறிப்பிட்ட பாடல் பற்றி இந்த 92 ஆவது அங்கத்தில் நினைவூட்டுவதற்கும் காரணம் இருக்கிறது.

கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை  கன்பரா மாநிலத்தில் தினகரன் முன்னாள் ஆசிரியர் ( அமரர் ) ஆர். சிவகுருநாதன் அவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வும் அவரது நினைவுகளை பதிவேற்றிய இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகமும் நடைபெற்றது.

இந்த நூலை தொகுத்திருக்கும் எழுத்தாளர் ஐங்கரன் விக்னேஸ்வராவும், அமரர் சிவகுருநாதனின் மருமகன்  மயூரன் சின்னத்துரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு என்னையும் அழைத்திருந்தார்கள்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கன்பராவில், அமரர் சிவகுருநாதனின் அன்புத்துணைவியார், சகோதரன்,  மகள், மகன், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் அன்னாரின் உறவினர்களையெல்லாம் இந்த நிகழ்வில் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

கன்பரா மாநிலத்திற்கு சிட்னி, பேர்த், மெல்பன் மாநகரங்களிலிருந்தெல்லாம் அன்பர்கள் வந்திருந்தனர். கன்பரா தமிழ் மூத்த பிஜைகள் மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்தது.

கொவிட் பெருந்தொற்றுக்குப்பின்னர், எனது நீண்டகால நண்பர்கள் சிலரையும் கன்பராவில் சந்தித்தேன். அவர்களுடன் பசுமையான பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

கலை, இலக்கிய ஆர்வலரும் சமூகப்பணியாளருமான நண்பர் நித்தி துரைராஜா,  என்னை தனது இல்லத்தில் தங்கவைத்து நன்கு உபசரித்தார்.  அவரது சகோதர வாஞ்சையான உபசரிப்பினால் நெகிழ்ந்துபோனேன்.


சுவாரசியமாகப்  பேசி, சிரிப்பை வரவழைப்பார்.   மக்கள் திலகம் எம். ஜி. ஆர், நடிகை சரோஜா தேவியுடன் 1965 இல் இலங்கை வந்திருந்த காலத்தில், காலிமுக ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அவரைப்பார்க்க தனது தந்தையாருடன் சென்ற  நித்திக்கு அப்போது  பதினொரு வயதுதான்!

எம்.ஜி. ஆரின் தோளிலிருந்த சால்வை குழந்தை நித்தியின்மீது விழுந்திருக்கும் காட்சியை காண்பிக்கும்  ஒரு ஒளிப்படத்தை நித்தியின் வீட்டில் பார்த்திருக்கின்றேன்.

இந்த கன்பரா நித்தி, எங்கள் மெல்பன் நித்தியின் ( மாவை


நித்தியானந்தனின் ) கொழும்பு மெயில் இசையும் கதையும் பாடலும் இணைந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருப்பவர்.

கன்பராவில் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியன நடத்திய சில நிகழ்ச்சிகளின்போதும் தனது ஆதரவையும் ஒத்துழைப்பினையும் வழங்கியவர்.

இவரது இல்லத்திற்கு நண்பர்கள் மயூரன் சின்னத்துரை,  கலாநிதி திவ்வியநாதன்,  கப்ரியேல் ஜோசப், என்னுடன் நீர்கொழும்பில் படித்த நண்பர் சிவனடியான் பிரியதர்ஷன், எழுத்தாளர் ஆழியாள் மதுபாஷினி, அவரது கணவர் ரகுபதி ஆகியோரெல்லாம் வருகை தந்து உரையாடினார்கள்.

ஆழியாள் – ரகுபதி  தம்பதியர் தங்கள் வீட்டுக்கும் அழைத்து உபசரித்தனர்.


மற்றும் ஒரு நண்பரான பல்மருத்துவர் ரவீந்திரராஜா, அச்சமயம் குவின்ஸ்லாந்து மாநிலம் சென்றிருந்தமையால், அங்கிருந்து தொலைபேசி ஊடாக என்னுடன் உரையாடினார்.

இவர்களை இந்தப்பதிவில் நான் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணமே இதுதான்:  இவர்கள் அனைவரும் தன்னார்வத் தொண்டர்கள்.  எமது தமிழ் சமூகத்திற்காக தொடர்ந்தும்  பல வழிகளில் உதவி வருபவர்கள்.

குறிப்பாக நான் அங்கம் வகிக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு இவர்கள் வழங்கியிருக்கும் ஆதரவு குறித்து விரிவாக ஒரு தனி அத்தியாயமே எழுத முடியும்.

கன்பரா தமிழ்ச்சங்கத்தில் ரவீந்திரன் என்ற நண்பர் தலைவராக


இருந்த காலப்பகுதியில்,  எமது கல்வி நிதியத்திற்கு வழங்கிய கணிசமான நன்கொடையை மூலதனமாக வைத்து நிதியம்,  கிழக்கிலங்கையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் சில தொண்டர் ஆசிரியர்களுக்கு பல மாதங்கள் வேதனம் வழங்கியது. நண்பர் ரவீந்திரனையும் அமரர் சிவகுருநாதன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சந்தித்தேன்.

நண்பர் கப்ரியேல் ஜோசப்,  தாங்கள் நடத்திய தமிழ்ப் பாடசாலை ஒன்றின் ஊடாக  வழங்கிய கணிசமான நன்கொடையை எமது கல்வி நிதியத்தின் நிரந்தர வைப்பு நிதியில் சேர்த்துக்கொண்டோம். அதனால்,  இலங்கையில்  பல மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.


நித்தி துரைராஜா, திவ்வியநாதன், ரவீந்திர ராஜா ஆகியோர் முன்னர் மெல்பனில் வசித்தவர்கள். கன்பராவுக்கு இவர்கள் இடம்பெயர்ந்த பின்னரும்  என்னுடன் தொடர்பிலிருப்பவர்கள்.

   நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்.   என்று நான் அடிக்கடி எழுதியும் பேசியும் வந்திருக்கின்றேன்.  அத்தகைய  உறவை பலரால்  தக்கவைத்துக்கொள்ள இயலாதிருப்பது கவலைக்குரியது.  

தன்முனைப்பு ஆணவம்,  நாட்டான்மைக்  குணம் என்பனவே சிலர்,  தங்கள் நீண்டகால நண்பர்களை இழப்பதற்கான அடிப்படைக் காரணம். அத்தகைய   இயல்புகள் கொண்ட சிலரிடமிருந்து நானும்  ஒதுங்கியிருக்கின்றேன்.

மனிதநேயத்துடன்  சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களிடத்தில் நெருங்கியிருக்கின்றேன்.  இத்தகைய நண்பர்களும்  எனக்கு கன்பரா


மாநிலத்தில் கிடைத்திருக்கிறார்கள்.

அதனால்தான் எனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல், கன்பராவுக்கு அழைத்தவுடன் புறப்பட்டேன்.

இலங்கையின் மூத்த அறிஞர் சிவகருணாலய பாண்டியனார் அவர்களின் புதல்வர் சட்டத்தரணி திருவருள் வள்ளல் அவர்களின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் இலங்கை அரசின் உயர் ஸ்தானிகர் திருமதி சித்திராங்கனி வாகீஸ்வராவும்  உரையாற்றினார்.


இலங்கை இதழியலில்
சிவகுருநாதன்  நூலை அறிமுகப்படுத்தி தமிழில் பேசவேண்டியிருந்தது.  சபையினருக்காக தமிழில் பேசிய அதேசமயம் ,  உயர் ஸ்தானிகருக்காகவும் அவருடன்  வருகை தந்திருந்தவர்களுக்காகவும்  நான் சிங்கள மொழியிலும் உரையாற்றினேன்.

உயர்ஸ்தானிகர், தம்மால் தமிழில் உரையாட இயலவில்லையே என்று கவலை தெரிவித்ததுடன், தமிழ் மக்கள்  மும்மொழியிலும் பேசக்கூடியவர்களாகத்திகழுகிறார்கள் என்றும் புகழாரம் சூட்டினார்.

இந்த நிலைக்கு யார் காரணம்..? என்று நான் எனது மனதிற்குள்


நினைத்துக்கொண்டேன்.  அதனால்தான் இந்தப்பதிவின் தொடக்கத்தில்,  “ நினைக்கத் தெரிந்த மனமே ,  உனக்கு மறக்கத் தெரியாதா..?  “ என்ற பாடலை நினைவு படுத்தினேன்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, நான் எடுத்துச்சென்றிருந்த எனது தமிழ்ச்சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூலையும், நண்பர் நடேசனின்  வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் அவரது சிறுகதைத் தொகுதியின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல்களையும் பரிசாக  உயர் ஸ்தானிகருக்கு  வழங்கினேன். அவருடன் வருகை தந்திருந்த துணை ஸ்தானிகருக்கும்  பிரதிகளை வழங்கினேன்.

 “ அவுஸ்திரேலியாவில் வதியும் ஈழத்தமிழர்கள் சிங்களமும் பேசுவார்கள், அத்துடன் அவர்களால்  தமிழில் எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகள் சிங்களத்திலும் வரவாகியிருக்கின்றன!    என்ற செய்தியுடன்,   “ வணக்கம்,  அஸ்லாமு அலைக்கும்,  ஆயுபோவன்,  Good evening  எனச்சொல்லி,  தனது உரையை ஆரம்பித்த  உயர் ஸ்தானிகர் தமது வாசஸ்தலத்திற்கு திரும்பியிருப்பார்.


இந்நிகழ்வில் எனக்குத்தரப்பட்ட நேரம் 15 நிமிடங்கள்தான்.  அதற்குள் நான் தயாரித்திருந்த உரையை நிகழ்த்த முடியாது. எனவே உயர் ஸ்தானிகரையும் கவனத்தில்கொண்டு உரையை சுருக்கிவிட்டேன்.

அமரர் ஆர். சிவகுருநாதன்,  தினகரன் பத்திரிகையை தமிழ் மக்கள் விரும்பிப்படிக்கும் ஜனரஞ்சகப்பத்திரிகையாகவே வெளியிட்டார். தினகரன் அரசு  சார்பு பத்திரிகை என்பதனால், தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் வீரகேசரி வாசகர்களாக இருந்தனர்.

தமிழ் நாட்டில் தினத்தந்தி பத்திரிகை,  அக்காலத்தில்  படித்தவர் முதல் பாமரர்கள் வரையில் படிக்கும் வகையில் வெளியாகவேண்டும் என விரும்பியவர் அதன் நிறுவனர் ஆதித்தனார்.

ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட செய்தியை,  “ சதக் சதக்கென குத்தினான், ஆள் செத்தான் “ என்ற தலைப்புடன் வௌியிட்டது தினந்தந்தி.

அவ்வாறு இலங்கை தினகரனில் மட்டுமல்ல,  ஏனைய தமிழ் தினசரிகளிலும் ( வீரகேசரி – தினபதி – தினக்குரல் )  செய்திகள் வரவில்லை.

இலங்கைப்  பிரதமர் எஸ். டபிள்யூ, ஆர். டி. பண்டாரநாயக்கா 1959 ஆம் ஆண்டு ஒரு பௌத்த துறவியால் ( சோமராம தேரோ ) சுட்டுக்கொல்லப்பட்டபோது, தமிழ்நாட்டு பத்திரிகை ஒன்று,                 “ பூசாரி சுட்டான், பண்டாரி செத்தான்  என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.

                “ தமிழ் வாசகருக்கு செய்திகளை எளிமையான வசனங்களில் தரவேண்டும் என்பதற்காக அவ்வாறெல்லாம் எழுத முடியாது.     எனச் சொன்னவர் தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன்.

இந்தத் தகவலை,  இந்த நூலில் ஒருவர் வெகு சுவாரசியமாக  எழுதியிருக்கிறார்.  அதனை கன்பரா நிகழ்வில் நான் எப்படிச்  சொல்ல முடியும்!?  சொல்லியிருந்தால் அவையோர் பலத்த சிரிப்பொலி எழுப்பியிருப்பர்.

உயர் ஸ்தானிகர்,   இவர்கள் ஏன் இப்படிச்சிரிக்கிறார்கள்..?  “ என்று யோசித்திருக்கக்கூடும்.

அதனால், அன்று சொல்லவில்லை. இன்று எழுதுகின்றேன்.

இதனைப்படிக்கும் வாசகர்கள், குறிப்பிட்ட இலங்கை இதழியலில் சிவகுருநாதன்  நூலை பெற்று வாசிக்கவும்.

இலங்கை தமிழ் இதழியல் வரலாற்றை தெரிந்துகொள்வீர்கள்.

( தொடரும் )

No comments: