இலங்கைச் செய்திகள்

அதிகாலை விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலி

படகை கடத்தி 3 பேர் கொலை; 7 பேருக்கு மரண தண்டனை 

தமிழர்களின் உரிமை, தேசியத்துக்காக ஜனநாயக செயற்பாடுகள் துரிதமாக்கப்படும்

கொழும்பில் இடம்பெற்ற 75ஆவது இந்திய குடியரசு தின விழா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணி


அதிகாலை விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலி 

- முன்னால் சென்ற கொள்கலன் வாகனத்தில் மோதி பாரிய விபத்து

January 25, 2024 8:34 am 

இன்று (25) அதிகாலை 2.00 மணியளவில், இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.01 கிலோமீற்றர் மைல்கல் அருகில், கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் வண்டி ஒன்று, அதே திசையில் அதற்கு முன்னால் சென்ற கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் பாதுகாப்பு வேலியில் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த ஜீப் வண்டியில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது மெய்ப்பாதுகாவலர் பொலிஸ் கான்ஸ்டபிள் (72542) ஜயக்கொடி மற்றும் ஜீப் வண்டியின் சாரதி ஆகியோர் படுகாயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாகனத்தின் சாரதி ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    நன்றி தினகரன் 

 




படகை கடத்தி 3 பேர் கொலை; 7 பேருக்கு மரண தண்டனை 

- 11 பேருக்கு எதிரான வழக்கில் மூவர் மரணம்; ஒருவர் விடுதலை

January 24, 2024 2:12 pm 0 comment

மீன்பிடி படகொன்றை கடத்தி அதிலிருந்த 3 மீனவர்களை கொன்ற வழக்கில் 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2012 ஒக்டேபார் 15ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்ட பெந்திகே இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கைக் கடற்கரையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ எனும் மீன்பிடிப் படகில் இருந்த 3 மீனவர்களைக் கொன்றமை, மேலும் சில மீனவர்களைக் கடுமையாக தாக்கி காயப்படுத்தியமை, படகை கடத்தி அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதவான் குறித்த தீர்ப்பை வழங்கினார்.

இதன்போது வழக்கின் 10ஆவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த நபரை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் பிரதிவாதிகளுக்கு 29 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, தலா ரூபா 20 இலட்சத்து 8 ஆயிரத்து 500 (ரூ. 2,008,500)அபராதத்தை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மரண தண்டனைக்கு மேலதிகமாக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 11 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மூன்று பிரதிவாதிகள் வழக்கு விசாரணையின் போது மற்றும் விசாரணை ஆரம்பிக்கும் முன்னர் இறந்துவிட்டதால், 8 பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் இது தொர்பான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





தமிழர்களின் உரிமை, தேசியத்துக்காக ஜனநாயக செயற்பாடுகள் துரிதமாக்கப்படும்

January 23, 2024 9:00 am 

தமிழர்களின் உரிமை, தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரனுடன் இணைந்து செயற்படவுள்ளதாக

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தரன் சூளுரைத்துள்ளார். கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தரன்எம்பி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

இலங்கை தமிழரசு கட்சியின் வரலாற்றில் ஜனநாயக ரீதியான முறையில் தலைவர் தெரிவு இடம்பெற்றுள்ளது. இத்தெரிவு வரலாற்றில் முக்கிய தடம் பதித்துள்ளது. என்னுடன் போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரன் சீ.யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியின் செயற்பாடுகளை பல வழிகளில் உயர்த்துவேன். எமது மக்களின் உரிமைக்காக, தேசிய இருப்புக்காக,தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம். என்னை தெரிவு செய்வதற்கு காரணமான இறைவனுக்கும் எனக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்தவர்களுக் கும் நன்றிகள்.எனது தெரிவு, பலபேருக்கு பல நம்பிக்கைகளை தந்துள்ளது. இளைஞர்கள் யுவதிகள் தற்போது புதிய அக்கறையுடன் செயற்படத் தொடங்கியுள்ளனர்.நண்பர் சுமந்திரன் கூட பல தடவை தெளிவாக பல இடங்களில் சொல்லியிருந்தார். எங்களுடைய பங்கு என்பது இனம் சார்ந்தது. தமிழ் தேசியத்தினுடைய இருப்பு சார்ந்தது. எங்களுடைய இனத்துக்கான அடிப்படை உரிமைகள் சார்ந்தது. இந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் செயற்பட்டு பலப்படுவோம் என்றார்.   நன்றி தினகரன் 





கொழும்பில் இடம்பெற்ற 75ஆவது இந்திய குடியரசு தின விழா

January 26, 2024 4:28 pm 

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று (26) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டது.

உலகின் மிகப்பாரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி நடைமுறைக்கு வந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளத்தக்கது. இந்த அரசியலமைப்பின் முகவுரையானது இந்தியாவை, இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றைக் கொண்ட ஒரு நாடாகப் பிரகடனப்படுத்துகின்றது.

இத்தினத்தை முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார். இந்திய குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையின் குறிப்புகளும் உயர் ஸ்தானிகரால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து, இலங்கை கடற்படையினரின் இசை குழுவினரால் பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஒழுங்கமைத்திருந்த கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன. இந்தியாவின் செழிப்புமிக்க பன்முகத்தன்மையானது பல்வேறு நாட்டுப்புற நடன வடிவங்களை அரங்கேற்றியிருந்த கலாசார நிகழ்வின் மூலமாக வெளிக்காண்பிக்கப்பட்டிருந்தது. இதில் குஜராத்தின் கர்பா நடனமும் உள்ளடங்குகின்றது. யுனெஸ்கோ மனிதகுலத்தின் அருவமான கலாசார மரபுரிமை பட்டியலில் குஜராத்தின் கர்பா நடனம் மிகவும் அண்மையில் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான இந்திய சமூகத்தினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, உயிர் தியாகம்செய்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத்தூபியில் உயர் ஸ்தானிகர் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இன்று மாலை விசேட வரவேற்பு உபசாரம் ஒன்றும் இந்திய இல்லத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையிலுள்ள பல்வேறு துறைகளையும் சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஜூலையில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது அவராலும் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடியினாலும் இந்திய இலங்கை பொருளாதார பங்குடைமை தொலைநோக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இக்குடியரசு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. பொதுவான மற்றும் ஸ்திரமான பொருளாதார செழுமைக்கான வினையூக்கிகளாக அடையாளம் காணப்பட்டதும் தொடர்புகளை மேம்படுத்துவதற்குமான சகல பரிமாணங்களிலும் இருதரப்பினரும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்களும் கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயமும் பல்வேறு விசேட நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தை அனுஷ்டித்துள்ளன.    நன்றி தினகரன் 





ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணி

சந்திரிகாவை தலைவராக்கவும் தீர்மானம்

January 27, 2024 6:30 am 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அடிப்படையாகக் கொண்டு புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டமைப்பின் தலைவருக்கு தனித்து தீர்மானம் மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட மாட்டாதென்றும் சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க மற்றும் கூட்டமைப்பில் இணையும் ஏனைய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் உள்ளடங்கும் வகையில் தலைமைத்துவ சபையொன்றை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கூட்டமைப்பின் 50% அதிகாரத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டிருப்பதுடன் ஏனைய கட்சிகள் மீதமான 50% அதிகாரத்தைக் கொண்டிருக்கும் வகையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 






No comments: