நயப்புரை : அவுஸ்திரேலியா பூமராங் மின்னிதழ் 01 ஞா.டிலோசினி ( சேனையூர் )


வுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காலாண்டு மின்னிதழாக தமிழ்ப் புத்தாண்டு  2024 (தைத்திருநாள்) தினத்தை முன்னிட்டு ‘பூமராங்’ மின்னிதழ் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. 

இவ்விதழானது ஆசிரியத் தலையங்கம் உட்பட கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல் வெளியீடுகள், நூல் நயவுரை, பாராட்டு விழாக்கள், மூத்த எழுத்தாளர்களின் பிறந்த தினம் முதலான விடயங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் ‘பூமராங்’ முதலாவது இதழின் ஆசிரியத்


தலையங்கம், ‘அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்’ பற்றிய தகவலை முன்வைக்கின்றது. ‘கவிஞர் அம்பிக்கு பெப்ரவரி மாதம் 95 வயது’ என்ற பகுதி,  பெப்ரவரி 29ஆம் திகதி பிறந்த தினத்தைக் கொண்டாடவிருக்கும்  கவிஞர் அம்பியை வாழ்த்துவதாக அமைந்துள்ளது. 

எழுத்தாளர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் 70 ஆவது பிறந்த தினம் மெல்பனில் கொண்டாடப்பட்ட தவலும் இடம்பெற்றுள்ளது. முருகபூபதியின் ‘வாசிப்பு அனுபவமும் வாசகர் வட்டங்களும்’ என்ற கட்டுரை, வாசிப்பின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறைகளிடம் அதிகரிக்கும் நோக்கில் வாசகர் வட்டங்களை உருவாக்கி வாசகர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது.  

நூல் வெளியீடு என்ற வகையில் அண்மையில் வெளிவந்த, வெளிவரவிருக்கும் நூல்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் ஜெயராமசர்மாவின் ‘ஆஸ்திரேலிய நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சி’ கலாநிதி லயனல் போப்பகேயின் ‘வாழ்க்கைச்சரிதம் பேசும் ஆங்கில – சிங்கள நூல்கள், ஜேகேயின் ‘வெள்ளி’(நாவல்) ஜங்கரன் விக்கினேஸ்வரா தொகுத்த ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’  நூல், தாமரைச்செல்வியின் இலக்கியப் பணியை பாராட்டி கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாய்வீடு’ சிறப்பிதழ் ஆகியவை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜங்கரன் விக்னேஸ்வராவின் ‘ பாலஸ்தீனப் பெண் கவிஞர்கள்’ என்ற கட்டுரை, முருகபூபதியின் ‘எங்கள் தேசம்’ சிறுகதைத் தொகுப்புப் பற்றி பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா எழுதிய நயவுரை, நொயல் நடேசன் எழுதிய ‘பண்ணையில் ஒரு மிருகம்’ என்ற நாவல் பற்றி கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுதிய வாசிப்பனுபவப் பகிர்வு கட்டுரை, ஞா.டிலோசினியின் ‘வாசி;’ என்ற கவிதை ஆகியனவும் பூமராங்கில் இடம்பெற்றுள்ளன. 

இவ்விதழானது, ‘யாழினி’ என்ற குறுநாவலுக்கு திருமதி தேவகி கருணாகரன் பெற்ற விருது, மெல்பனில் எழுத்தாளர் முருகபூபதிக்கு நடந்த பாராட்டு விழா, ‘கரிகாற்சோழன் விருது’ (இவ்விருது விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் எழுதிய ‘பண்ணையில் ஒரு மிருகம்’ நாவலுக்கும் சிவ.ஆரூரான் எழுதிய ‘ஆதுரசாலை’ என்ற நாவலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.) ஆகிய இலக்கிய செய்திகளையும்  தாங்கி வெளிவந்துள்ளது. 


No comments: