அம்மா எங்கே - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழில் நூற்றுக்கும் அதிகமான படங்களை தயாரித்து புகழ் பெற்ற


நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். எல்லாவிதமான படங்களையும் திட்டமிட்டு தயாரித்து வெற்றி கண்ட இவர்கள் 1964ம் ஆண்டு தயாரித்த படம் அம்மா எங்கே. அன்றைய கால கட்டத்தில் வெளி வந்த ஒரு சில மர்ம படங்களுக்குள் இப்படமும் ஒன்றாகும். செண்டிமெண்டல், சஸ்பென்ஸ் இரண்டையும் கலந்து படத்தை எடுத்திருந்தார்கள்.


கோடீஸ்வரன் ரவியின் ஒரே மகள் குழந்தை அமுதா . காதல்

திருமணம் செய்து கொண்ட ரவியின் மனைவி தேவகி திடீர் என்று ஒருநாள் காணாமல் போய் விடுகிறாள். ஊரார் அவள் எங்கோ ஓடி போய் விட்டதாக புரளி பேசுகிறார்கள். இதனால் அவமானத்தால் துடிக்கும் ரவி அவளை பற்றி பேச்செடுத்தாலே ஆத்திரப்படுகிறான். அது மட்டுமன்றி அமுதா மீதும் வெறுப்பை காட்டுகிறான். ரவியின் முறைப் பெண் சுகுணாவை ரவிக்கு கல்யாணம் செய்து வைக்க அவளின் தாயார் விரும்புகிறாள். ஆனால் ரவிக்கோ அதில் விருப்பம் இல்லை. அமுதாவை பராமரிக்க வரும் ரஞ்சிதம் அவனை கவர்கிறாள். இதனிடையே ரவியின் பங்களாவில் அவ்வப்போது சில திகிலூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன. அமுதாவின் அம்மா எங்கே என்ற சஸ்பென்ஸும் படம் முழுவதும் நீடிக்கிறது.

இப்படி அம்மா, மகள் செண்டிமெண்ட், அம்மா எங்கே என்ற சஸ்பென்ஸ் இரண்டும் கலந்து படம் தயாரானது. ஆங்கிலப் படங்களைத் தழுவி அமைந்த படத்தின் வசனங்களை ஏ எல் நாராயணன் எழுதினார். பாடல்களை கண்ணதாசன் , வாலி, பஞ்சு அருணாசலம், நல்லதம்பி இயற்ற வேதா இசையமைத்தார். சஸ்பென்ஸ் படம் என்றாலே வேதா தான் இசையமைக்க வேண்டும் என்பது போல் இந்தப் படத்தில் தன் இசைத்த திறனை வெளிப்படுத்தியிருந்தார் அவர். பாடல்களுக்கான மெட்டு ஹிந்தி தழுவல் என்றாலும் அதனை தமிழில் இனிமையாக வழங்கியிருந்தார். அதே போல் பின்னணி இசையிலும் வேதாவின் மேதாவிலாசம் வெளிப்பட்டது. S

பாப்பா பாப்பா கதை கேளு, நான் வணங்கும் தெய்வமே, நெஞ்சுக்கு தெரியும், ஆகாய பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் , தொட்டுப் பார் தொடும் போது இன்பம் ஆகிய பாடல்கள் வித விதமான ரசனையில் ஒலித்தன. பி சுசிலாவின் குரலும் , பி பி ஸ்ரீனிவாஸ் , எல் ஆர் ஈஸ்வரி, ஏ எல் ராகவன், எம் எஸ் ராஜேஸ்வரி ஆகியோரின் குரல்களும் பாடல்களுக்கு மெருகூட்டின. மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்றாலே சண்டைக்கு காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். இப் படத்தில் சண்டை உண்டு , ஆனால் விறு விறுப்பு மிஸ்ஸிங்!


முத்துராமன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சந்திரகாந்தா, ராஜஸ்ரீ இருவரும் நடித்தார்கள். சந்திரகாந்தா அடக்கமே உருவாய் காட்சியளிக்க ராஜஸ்ரீ கவர்ச்சியை வழங்கியிருந்தார். ஏ வீரப்பன் , மாதவி இருவரினதும் நகைச்சுவை ஓகே. ஆர் எஸ் மனோகர் சந்தேகத்துக்கு உரியவராக படம் முழுவதும் வருகிறார். இவர்களுடன் பி கே சரஸ்வதி, வைரம் கிருஷ்ணமூர்த்தி, ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்தின் கதை குழந்தை அமுதாவை சுற்றியே பின்பப்பட்டிருந்தது. படம் முழுவதும் குழந்தை அமுதாவாக வரும் பேபி ஷகீலா எல்லார் மனதையும் கவரும் படி நடித்திருந்தார்.

படத்தை எச் எஸ் வேணு ஒளிப்பதிவு செய்ய , படத்தொகுப்பை எல்

பாலு கையாண்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி ஆர் சுந்தரம் மறைந்த பின்னர் அவரின் நிறுவனம் துடுப்பில்லா ஒடம் போல் தத்தளிக்கத் தொடங்கியது. சரியான வழிகாட்டுதல் இன்றி தடுமாறிய நிறுவனம் அதன் தொன்னூற்று ஒன்பதாவது படமாக தயாரித்த படம்தான் அம்மா எங்கே. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போதும் ஜி விஸ்வநாதன் டைரக்ட் செய்த அம்மா எங்கே அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த புதுமை சித்திரம் என்று சொல்லலாம்.

No comments: