கட்டுரை தலைமைப் பிரச்சினை

 October 27, 2023

சம்பந்தன் பதவி விலக வேண்டுமென்னும் கோரிக்கை பொது
வெளியில் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பிறிதொரு விடயம் முக்கியம் பெறுகின்றது.

சம்பந்தன் தற்போது இயலாத நிலையிலிருந்தாலும், குறிப்பிட்ட காலம், அனைத்து கட்சிகளையும் ஏதோவொரு வகையில் வழிநடத்தும் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார்.
சம்பந்தனதும், அவரது தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சியினதும் செயல்பாடுகளில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கடும் அதிருப்தியை கொண்டிருந்தாலும் கூட, ஏதேவொரு வகையில் சம்பந்தனுடன் ஒத்துழைத்திருந்தனர்.
இதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவாறான உள்முரண்பாடுகளின் மத்தியிலும் உடையாமல் தொடர்ந்தது.
சம்பந்தனை தவிர்த்துச் செல்வது அன்றைய சூழலில் ஒரு விசப் பரீட்சையாகவும் நோக்கப்பட்டது, மறுபுறம், சம்பந்தன்தான் இலங்கை தமிழரசுக் கட்சியின் பலமாகவும் இருந்தார்.
ஆனால் சம்பந்தன் தளர்வடையத் தொடங்கியதை தொடர்ந்து கூட்டமைப்பாக தொடரும் நிலைமையும் வீழ்ச்சியுறத் தொடங்கியது.
சம்பந்தனை மேவியும் தீர்மானங்களை எடுக்கக் கூடிய நிலைமை ஏற்பட்ட சூழலிலேயே, கூட்டமைப்பும் உடைவுற்றது.
உள்ளூராட்சித் தேர்தலை காரணம் காட்டி, தமிழரசுக் கட்சி தனியான போட்டியிடும் முடிவை அறிவித்தது.
ஒருவேளை சம்பந்தன் தீர்மானிக்கக் கூடிய இடத்திலிருந்திருந்தால், அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.
தற்போது நிலைமைகள் முற்றிலும் மாற்றமடைந்திருக்கின்றன.
சம்பந்தனுக்கு பின்னர் யாரென்னும் கேள்வியுடன் தமிழ் தேசிய அரசியல் நகர்கின்றது.
உண்மையில், தமிழ்த் தேசிய அரசியலை ஒரு தனியாளுமைக்குள் கட்டிப்போடும் காலம் முடிவுற்றுவிட்டது.
சம்பந்தன்தான் இறுதி தனிநபர் தலைமை.
இனி அவ்வாறானதொரு தலைமை அண்மைக்காலத்தில் வெளிவருவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை.
ஏனெனில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை, அரசியல் ரீதியில் பிளவின்றி ஒன்றிணைத்து, வழிநடத்தக் கூடிய தனித் தலைமையொன்று தற்போதில்லை.
தற்போதுள்ள எந்தவொரு கட்சியிலும் அவ்வாறான தகுதியுள்ள நபர் இல்லை.
இருக்கும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில், குறிப்பிட்ட மக்கள் மத்தியில் வாக்குகளை பெறக்கூடிய நிலையிலிருப்பவர்கள்தான்.
அவ்வாறானவர்களால் தமிழ் மக்களின் தலைமையாக மேல்வர முடியாது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழ் மக்களின் அரசியல் நிலைமை மேலும் மோசமடையப்போகின்றது.
தமிழ் மக்களின் சார்பில் கொழும்புடன் பேசக்கூடிய முழுத் தகுதிநிலையுடன் எந்தவொரு கட்சியும் இருக்கப்போவதில்லை.
இந்த நிலைமை தென்னிலங்கை அரசியலுக்கு மேலும் சாதகமான அம்சமாகும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சியை மேலும் தட்டிக்கழிக்க நினைத்தால், இதனை தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இது ஒரு தலையாய அரசியல் பிரச்னை.
இதனைக் கருத்தில் கொண்டே, தமிழ் தேசிய கட்சிகள் தங்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை திட்டமிடவேண்டும்.
பெருமளவிற்கு ஓரணியாக தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டும்.
இல்லாவிட்டால் சிதறிய அரசியல் அணிகளே இருக்கும்.
தமிழர் அரசியல் சிதறுவது எப்போதுமே, தென்னிலங்கைக்கே நன்மையானது.      நன்றி ஈழநாடு 


No comments: