கட்டுரை தேவை துணிகரமான அரசியல் நடவடிக்கைகள்

 October 28, 2023


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை வித்தியாசமான ஜனாதிபதியாக காண்பிக்கும் நோக்கில் பல்வேறு விடயங்களை பேசி வருகின்றார்.
ஒப்பீட்டடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவிடம் இனவாத வேலைத்திட்டம் இல்லைதான்.
தீவிர இனவாத கருத்துக்களை எப்போதுமே ரணில் வெளிப்படுத்தியதில்லை.
இந்த பின்புலத்தில், தென்னிலங்கையின் ஏனைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டால், ரணில், சற்று மாறுபட்டவர்தான்.
ஆனால், இனவாத சக்திகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒரு துணிகரமான அரசியல்வாதியாக அவரால் இதுவரை தன்னை நிரூபிக்க
முடியவில்லை.
இந்த நிலையில் இனவாத நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் துணைபோகக் கூடாது – நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று ரணில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இப்படியாக, நிகழ்வுகளில் பேசுவதனால் மட்டும், இனவாத நிகழ்சிநிரலை தோற்கடிக்க முடியுமா? ரணில் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கின்றபோது, மட்டக்களப்பில், ஒரு பௌத்த பிக்கு, தமிழர்கள் அனைவரையும் வெட்டுவேன் என்று கூறுகின்றார்.
இதற்கு முன்னர் ஓர் அரசியல்வாதியும் அவ்வாறு கூறினார்.
ஆனால், இவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ரணில் அதிகாரத்தில் இருக்கின்றபோது, இடம்பெறும் இவ்வாறான விடயங்களுக்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது?
இலங்கையின் அரசியலில் இனவாதத்தை ஒரு முதலீடாகக் கொண்டிருப்பவர்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகள்தான்.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அல்லர்.
தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள மேலாதிக்க நிகழ்ச்சிநிரலை எதிர்த்து குரல் கொடுக்கின்றனரேயொழிய, சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக பேசவில்லை.
கடந்த காலத்தில் சிங்கள மக்களுக்கு எதிராக சில விடயங்கள் இடம்பெற்றபோது, தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் சாதித்திருந்தமை உண்மையானாலும் கூட, சாதாரண சிங்கள மக்களுக்கு எதிரான இனவாத சிந்தனையை பரப்புவதை, தமிழ் அரசியல்வாதிகள் ஒரு அரசியல் முதலீடாகக் கொண்டிருக்கவில்லை.
தோசே – மசால் வடே அப்பிட்ட எப்பா – என்பதில் தொடங்கி, அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை கூட அமுல்படுத்த விடப்போவதில்லையென்னும் கடும்போக்கு வாதத்தை தொடர்ந்தும் விதைத்துக்கொண்டிருப்பவர்கள் பௌத்த பிக்குகளும், குறிப்பிட்ட சிங்கள கடும்போக்கு அமைப்புக்களும்தான்.
எனவே இனவாதத்தை தோற்கடிக்க வேண்டுமாயின், இனவாதத்தை ஒரு கருவியாக்கொண்டு அரசியலை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் இயங்க முடியாத சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறு நிகழ வேண்டுமென்றால், இனவாதத்தை உயர்த்திப்பிடிக்கும் – அதே வேளை, தமிழ் மக்களுக்கு எதிரான துவேசத்தை பரப்புபவர்களுக்கும் எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதனைச் செய்யும் துணிவுடன் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றாரா? இனவாதமற்ற அரசியலை ரணில் முன்னெடுக்க விரும்பினால், அதற்கான முன்நிபந்தனை ஒன்றுதான், அதாவது, இனவாதத்தை கையிலெடுத்து, அரசியலில் ஆதாயம் தேடலாமென்று எண்ணுபவர்கள் அச்சப்பட்டு, அதனை கைவிடக்கூடிய புறச்சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், இனவாதத்தை ஓரங்கட்ட முடியாது.

நன்றி ஈழநாடு 

No comments: