மனமதில் யாவரும் இருத்திடல் வேண்டும் !

 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


அறமொடு ஆட்சி அமைந்திட வேண்டும் 
அரசியல் தூய்மை ஆகிட வேண்டும்
ஆணவம் ஆட்சியை அணுகிடா வகையில்
அனைவரும் காப்பாய் ஆகிட வேண்டும் 

காத்திடும் தலைமையில் கண்ணியம் வேண்டும்
கைகளைச் சுத்தமாய் வைத்திடல் வேண்டும்
நேர்த்தியாய் அனைத்தும் செய்திடல் வேண்டும்
நீதியை நெஞ்சில் நிறுத்திட வேண்டும்

வேற்றுமை என்பதை விலக்கிட வேண்டும்
ஆற்றலை என்றும் மதித்திட வேண்டும்
தூற்றுவார் தம்மை பார்த்திடா நின்று
துணிவுடன் காரியம் ஆற்றிட வேண்டும்

பணிவுடன் பணிகளைச் செய்திடல் வேண்டும் 
பக்குவம் செய்கையில் நிறைந்திட வேண்டும்
மனமதில் தூய்மை தாங்கியே நின்று
தினமுமே செயல்கள் ஆற்றிட வேண்டும்

கடைநிலை மக்களை நினைத்திட வேண்டும்
கண்ணீர் துடைக்க விரைந்திட வேண்டும்
பசிநிலை போக்குதல் முக்கியம் என்பதை
மனமதில் யாவரும் இருத்திடல் வேண்டும் 

அழிவிலே பெருமை கொள்வது  முறையா
அரக்கராய்  மாறி இயங்குதல் முறையா  
அன்பினை அஹிம்சையை மறப்பது முறையா
அகிலத்தார் அனவரும் உறவென அனைப்போம் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 
யாவரும் மனத்தில் இருத்திடல் வேண்டும்
போதனை அதனை இருத்தியே நின்றால்
வேதனை என்பது விலத்தியே நிற்கும் 
No comments: