கட்டுரை சம்பந்தனை அகற்றுதல்

 October 26, 2023

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பணியாற்ற முடியாத நிலையில் இருப்பதால், அவர் பதவி விலகுவதே சரியானதென்று தமிழரசுக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருக்கின்றார்.

சுமந்திரன், சம்பந்தனின் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தவர்.
அவரே சம்பந்தனின் பதவி விலகலை கோரும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
சம்பந்தனை பதவி விலகி, தனக்கு அடுத்த நிலையில் வாக்குகளை பெற்றவரிடம் பதவியை ஒப்படைக்க வேண்டுமென்று, இதற்கு முன்னரும் கூட, சிலர் அபிப்பிராயங்களை வெளியிட்டிருக்கின்றனர்.
திருகோணமலையை சேர்ந்த ஒரு குழுவினர் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவிடமும், இது தொடர்பில் முறையிட்டிருந்தனர்.
இது தொடர்பில் சம்பந்தனுடன் தமிழரசு கட்சியின் உயர் குழுவொன்று கலந்துரையாடியுமிருந்தது – எனினும் சம்பந்தன் அதனை நிராகரித்துவிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் முதல் முறையாக தமிழரசுக் கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், பொது வெளியில் சம்பந்தனின் பதவி விலகல் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

ஆனால் சம்பந்தன் பதவி விலகும் நிலையிலிருப்பதாக தெரியவில்லை.
சம்பந்தனை பொறுத்தவரையில் திருகோணமலை மக்கள் தனது நிலைமை அறிந்தே, வாக்களித்திருக்கின்றனர் – எனவே தான் பதவி விலகவேண்டிய அவசியமில்லை.
எனினும் சம்பந்தனது பதவி விலகல் விவகாரமானது, சம்பந்தனுடன் முடிந்துவிடக் கூடிய விடயமுமல்ல.
தமிழரசுக் கட்சியை புதியவர்களின் கீழ் கொண்டுவர வேண்டுமென்னும் வாதமுண்டு.
இந்த பின்புலத்தில் மாவை சேனாதிராசா உட்பட முதிய நிலையிலிருப்பவர்கள் பலரும் வெளியேறுவதே கட்சிக்கு நல்லதென்னும் அப்பிராயமும் வெளிவரக்கூடும்.
சுமந்திரன் அதற்கான பிள்ளையார் சுழியையே தற்போது வரைந்திருக்கின்றார்.
சம்பந்தன் தொடர்பில் அதிருப்திகள் நிலவுகின்றன.
ஒரு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரான அவர், குறித்த மாவட்டத்தில் தனக்கு வாக்களித்த மக்களை சந்திப்பதற்கே முடியாத நிலையிலிருக்கின்றார்.
இந்த நிலையில் அவர் பதவி விலக வேண்டுமென்னும் கோரிக்கையை தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக கோர முடியும்.
கட்சியின் மத்திய குழுவில் தீர்மானமொன்றை கொண்டுவந்து, சம்பந்தனை வெளியேற்றலாம் – அதற்கு கட்சி தயாராக இருக்கின்றதா என்னும் கேள்வியுண்டு.
ஆனால் தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்தில் முதுமையினால் இயங்கமுடியாத நிலையிலிருப்பவர்கள், தலைமையிலிருப்பது, புதிய விடயமல்ல.
தமிழரசுக கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், சக்கரநாற்காலியில் இருக்கும் நிலையிலும் கட்சியின் தலைமையை கைவிடவில்லை.
அவரை வெளியேறுமாறும் எவரும் கோரவில்லை – காரணம் கட்சியில் அவர் இயங்க முடியாத நிலையிருந்தாலும், அவரது பெயர் கட்சிக்குத் தேவைப்பட்டது.
அவர் ஒரு அரசியல் அடையாளமாக இருந்தார்.
அதேபோன்று சிவசிதம்பரம் மரணப் படுக்கையில் இருக்கின்றபோது கூட, அவரது பதவியை இராஜினாமா செய்யவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில் சம்பந்தன் எழுந்து நடக்கக் கூடிய நிலையிலிருக்கின்றபோது, பதவியிலிருந்து விலக முன்வருவாரா என்பது சந்தேகமே – அவ்வாறாயின் அவரை பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
தமிழரசுக கட்சியை பொறுத்தவரையில் சம்பந்தன் இனி தேவையிலையென்னும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலையில்தான் சுமந்திரனால் அவரது பதவி விலகலை பகிரங்கமாக கூறமுடிகின்றது.
சம்பந்தன் இயங்கு நிலையிலிருக்கின்றபோது – தனக்கு பின்னரான கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டோ – ஆகக் குறைந்தது, தனது மாவட்டத்தை கருத்தில் கொண்டோ தூரநோக்குடன் செயற்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், இயங்க முடியாத நிலையிலிருக்கும் சம்பந்தனை அவரது கட்சி கூட கருத்தில் கொள்ளக்கூடிய நிலையில்லை.    நன்றி ஈழநாடு 



No comments: