இலங்கைச் செய்திகள்

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண்ணின் உடல் நாட்டுக்கு 

சட்டவிரோத மதுபான விற்பனை; வீட்டின் அழைப்பு மணியை அடித்தால் மதுபானம் - நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் கோரிக்கை

டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ் நாடகத் திருவிழா - முதற் தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு

பிறப்பு, இறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கிய பதிவாளர் - இ.தொ.காவின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் பதிவிட ஒப்புதல்

மானிப்பாயில் வர்த்தக நடவடிக்கைய ஆரம்பித்துள்ள சீன நிறுவனம்


இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண்ணின் உடல் நாட்டுக்கு 

October 28, 2023 10:28 am 

இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையிலான யுத்தத்தில் பலியான அனுலா ரத்நாயக்க எனும் இலங்கை பெண்ணின் சடலம் இன்று (28) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும், இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டிருந்தது.

இன்று காலை இந்தப் பெண்ணின் சடலம் இலங்கையை வந்தடையுமென, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்திருந்தார்.

களனி – ஈரியவெட்டிய பகுதியை சேர்ந்த அனுலா ரத்நாயக்க எனும் 49 வயதான, இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் இஸ்ரேலில் 10 வருடங்களாக பணிபுரிந்துள்ளார்.

அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் பணிபுரிந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அது ஆரம்பத்தில் மறுக்கப்பட்ட போதிலும் பின்னர் அது உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த யுத்தத்தின் போது, காணாமல் போன மற்றைய இலங்கையர் இறந்து விட்டாரா என்பது தொடர்பாக கண்டறியும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இந்நிலையில், அவரது குழந்தைகளின் DNA மாதிரியை பயன்படுத்தி அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 






சட்டவிரோத மதுபான விற்பனை; வீட்டின் அழைப்பு மணியை அடித்தால் மதுபானம் - நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் கோரிக்கை

October 26, 2023 3:40 pm 0 comment

யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (26) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அங்கஜன் இராமநாதனால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான மதுபானசாலை ஒன்று இயங்கி வருகின்றது. அந்த வீட்டுக்கு செல்வோர் வீட்டின் அழைப்பு மணியை (Calling Bell) அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்து செல்கின்றனர். இந்த சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.

அதனை அடுத்து நெல்லியடி பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கையை எடுக்குமாறு இணைத்தலைவர்கள் கூறி இருந்தனர்.

அதேவேளை மதுவரி திணைக்கள உதவி பணிப்பாளரிடம் வடக்கு மாகாண ஆளுநர், சட்டவிரோத மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்த முறை நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விபரத்துடன் வரவேண்டும் எனவும் பணித்தார்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 






டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ் நாடகத் திருவிழா - முதற் தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு

October 25, 2023 2:12 pm 

கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நாடகத் திருவிழா வெள்ளிக்கிழமை (27) வரையில் தொடர்ந்து மூன்று நாட்கள் (25, 26, 27) நடைபெறவுள்ளது.

கலாசார அமைச்சின் நாடக மத்திய நிலையமாக விளங்கும் டவர் மண்டபத்தின் தமிழ்ப் பிரிவுப் பொறுப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயபிரகாஷ் தலைமையில் ஆரம்பமாகிய இந்நாடகத் திருவிழாவி்ல் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல கலந்து கொண்டார்.

கொழும்பில் எல்பிஸ்டன் மற்றும் டவர் அரங்கில் வருடந்தோறும் நடைபெறுகின்ற நாடக திருவிழாவானது டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் முதற்தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மைத்திரி குணரட்ன, கலாநிதி ஆறுதிருமுருகன், யூனியன் கல்லூரி அதிபர் வரதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் உட்பட கல்வி மற்றும் கலாசார அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 







பிறப்பு, இறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கிய பதிவாளர் - இ.தொ.காவின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் பதிவிட ஒப்புதல்

October 25, 2023 11:57 am 

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்றுநிரூபத்த்திற்கு இ.தொ.கா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்திற்கு இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றும் இருந்தனர்.

இ.தொ.காவின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு எழுத்து மூலம் பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.    நன்றி தினகரன் 





மானிப்பாயில் வர்த்தக நடவடிக்கைய ஆரம்பித்துள்ள சீன நிறுவனம்

October 25, 2023 11:50 am 

யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் இந்த மாத ஆரம்பத்தில் பெற்றோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மானிப்பாய் மெமோறியல் வீதியில் சினோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து வைக்கும் விநியோக முகவர் நிலையத்தை அறிமுகம் செய்துள்ளது.

சினோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கைக்கான ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட் லிமிட்டட் நிறுவனம், யாழ்ப்பாணத்துக்கான தனது விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவேட் லிமிட்டட் எனும் நிறுவனத்தை மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்வில் பங்குதாரர்களான பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயசாந்த தொட்டஹேவகே, தேசிய விற்பனை முகாமையாளராக துசிதகுமார, விற்பனை முகாமையாளர் எம்.குகன் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பருத்தித்துறை விசேட, யாழ். விசேட நிருபர்கள் - நன்றி தினகரன் 





No comments: