நட்சத்திரக்காட்டில் . - கவிதை - காகிதம் அநாமிகா

.


பறந்து செல்லும்
பட்டாம் பூச்சி
சிறகுதனைக் கேட்போமா...?!
வான் விட்டம் தொட்டு
விரைந்து செல்லும்
ஒரு பறவையின்
இறக்கை (இ)ரெண்டைக்
கேட்போமா...?!
அதை இரந்துதான் பார்ப்போமா
இல்லை இரவல் தரக்கேட்போமா...?!

விளங்காத விண்ணின்
விளிம்புக்கோடு தாண்டி
அண்டவெளி சேர்வோமா...?!
ஒளியாண்டுகளில்
விழி சிமிட்டிய
விண்மீன் கூட்டம் தொட்டுத்
தோரணம்கட்டிப் பார்ப்போமா...?!
வால்வெள்ளி கொண்டுள்ள
பரம (இ)ரகசியத்தின்
பல காரணம் கண்டு
பரவசம் ஊட்டுவோமா...?!
நாம் பார்க்கப் பொழியும்
எரிகல் மழையும்- இன்னும்
ஏராளமும் கண்டு...
நிலை குலையாது
நீளவான் கலையினைக்
கண்கொட்டாது காண்போமா...?!

புரியாது புருவம்
உயர்த்திய
புலங்களிலும் நாம்
புகுந்து பார்ப்போமா...?!
தெரியாத மையச்சுழற்சி
விசைக்குள்ளும்
பையப் பாதம் பதித்து
மெய்மறந்து போவோமா - இல்லை
மெய்துறந்து போவோமா...?!
மொழியில்லா வெளிதனில்
தமிழ் மொழி கொண்டு
சேர்ப்போமா...?!
செவ்வாய் வரை
கேட்கும்படி அதில்
செவ்வாய் திறப்போமா...?!

இருக்கின்ற கிரகத்துக்குள்
இல்லாததை நாம் தேடி
இயந்திரத் துணைகொண்டு
இறங்கித்தான் பார்ப்போமா...?!
கொஞ்சம் கிரங்கித்தான்
போவோமா...?!

வியாழனின் விசாலம் கண்டு
வியந்து நாம் நின்று
இருந்திடத் திடமில்லா
நிலநிலை கண்டு
பேச்சுறைந்து போவோமா...?!
மூச்சுத்திணறி நிற்போமா...?!
தன் பெயர் உணரியாய்
சனியின் பெரு வளையத்தில்
சறுக்கி விளையாடுவோமா...?!
சற்றே களி தீர்ப்போமா...?!

சாதி பேதம் இங்கில்லை
சாதிக்கப் பிறந்தோர்
நாமென்று அங்கே
சத்தமிட்டுப் பார்ப்போமா...?!

பரவிக் கிடக்கும்
பால்வெளி எங்கும்
பவனி வந்து பார்ப்போமா...?!
அவனி தாண்டிய
அண்டவெளியினில்
மிதந்து போகும்
உடுத்துகள் எடுத்து
உடுத்தித்தான் பார்ப்போமா...?!

அங்குள்ள சந்திரனில்
சாய்ந்தமர்ந்து பார்ப்போமா...?!
அதிலுள்ள கறைகளை
முகர்ந்துதான் தீர்ப்போமா...?!

களைப்புறும் வேளையிலே
இளைப்பாற - அங்கிருக்கும்
பள்ளங்களில் படுத்துறங்கிப்
பார்ப்போமா...?!
பசித்திடும் பொழுதினில்
புசித்திட வழிதேடி
அதுவரை வடைசுட்ட
அந்த அப்பத்தா முகவரியை
அடைந்திடத்தான் முனைவோமா..?!

இன்னும் அங்குள்ள
அதிசயத்தை ஆராய்ந்து
பார்ப்போமா...?!
அங்கிருந்து கையசைத்து
மெய்சிலிர்த்துப் போவோமா...?!
இதுவரை எமைப்பாராதோர்
பார்க்கும்படி பந்தயம்
செய்வோமா...?!
அந்த சந்திரனில்
வந்தமர்ந்து முதற்குடியாவோமா...?!

~•"காகிதம்" அநாமிகா•~

நன்றி - அனாமிகா முகநூல் 

No comments: