1973ம் வருடம் தமிழ் திரையில் ஒரு மாற்றத்தைக் கண்டது. அது வரை
காலமும் இல்லாத விதமாக வித்யாசமான கதைகள் படங்களாக உருவாகத் தொடங்கின. குடும்ப வறுமை காரணமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் , சந்தர்ப்ப வசத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொலைகாரியாக மாறும் பெண், கணவன் மூலம் இல்லற இன்பம் அடைய முடியாமல் தவிக்கும் பெண், தீயவனை திருத்துவதாக சவால் விட்டு அவனிடமே கற்பை பறி கொடுக்கும் பெண், இவ்வாறானவர்களின் கதைகள் படமாக்கப்பட்டு இந்த ஆண்டில் திரைக்கு வரத் தொடங்கின.
இப்படியான கதைகளை படமாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டவர்கள்
புதிய இயக்குனர்கள் அல்ல. ஏற்கனவே திரையுலகில் பழம் தின்று கொட்டைப் போட்ட இயக்குனர்களான ஸ்ரீதர், கே பாலசந்தர், ராமண்ணா, எ சி திருலோகசந்தர் போன்றவர்களே இது போன்ற படங்களை உருவாக்கத் தலைப்பட்டார்கள். அவ்வாறு 73ம் ஆண்டு ஆரம்பத்தில் வெளிவந்த படம்தான் அலைகள்.
புதிய இயக்குனர்கள் அல்ல. ஏற்கனவே திரையுலகில் பழம் தின்று கொட்டைப் போட்ட இயக்குனர்களான ஸ்ரீதர், கே பாலசந்தர், ராமண்ணா, எ சி திருலோகசந்தர் போன்றவர்களே இது போன்ற படங்களை உருவாக்கத் தலைப்பட்டார்கள். அவ்வாறு 73ம் ஆண்டு ஆரம்பத்தில் வெளிவந்த படம்தான் அலைகள்.
அலைக்கடலில் சிறிய தோணி கலையுலகில் புதிய பாணி என்ற வாசகத்துடன் உருவான ஸ்ரீதரின் சித்ராலயா பட நிறுவனம் பொருளாதார அலைகளில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த நேரம் அலைகள் படம் தயாரானது. ஹிந்தியில் உருவான அவளுக்கென்றொரு மனம் அடைந்த தோல்வி, சிவாஜியின் ஹீரோ 72 இழுப்பட்டுக் கொண்டிருந்த ஆயாசம், இவற்றுக்கு மத்தியில் சிறிய பஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்கத் தொடங்கினார் ஸ்ரீதர். துளசி என்ற பேரில் ஏவி எம் ராஜன் கதாநாயகனாக நடிக்க தயாரான படம் இடை நிறுத்தப்பட்டு , பின்னர் அலைகள் என்ற பேரில் மீண்டும் உருவாகத் தொடங்கியது.
அனாதை பெண்ணான லஷ்மி வாழ வழி தேடி , டிக்கெட் வாங்காமல் ரயிலில் பிரயாணம் செய்து டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபடுகிறாள். அவள் நிலையை கண்டு பரிதாபப்படும் சக பிரயாணியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜு அவளுக்கான பணத்தை செலுத்தி உதவுகிறான். அத்துடன் முடிய வேண்டிய அவர்களின் உறவு சந்தர்ப்பவசத்தால் தொடர்கிறது. சமூக சேவகி நளினாவால் அவள் சேர்க்கப் படும் இடம் ஒரு விபசார விடுதியாகும். அங்கு கைதாகும் அவள் ராஜு முன் நிறுத்தப்படுகிறாள். பின்னர் உணவு உண்ணப் போகும் டீ கடையில் தன் மீது கைவைத்த முதலாளியை அடித்து விட்டு மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் ராஜு முன் வந்து நிற்கிறாள். பிறகு தெருவில் அவதூறு பேசியவனை அடித்து விட்டு ராஜுவின் சீற்றத்துக்கு ஆளாகிறாள். தொடர்ந்து வீட்டு வேலைக்காரியாக பணியாற்ற போகும் வீட்டின் எஜமான் அவளை பெண்டாள நினைக்கும் போது ஏற்படும் கலாட்டாவில் திருட்டு பழிக்கு ஆளாகி சிறை செல்கிறாள். பின்னர் சிறை மீண்டு வரும் போது வில்லனால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டு அவனை கொலை செய்து விட்டு கொலைகாரியாகிறாள் . அப்பப்பா எத்தனை சோதனைகள், துயரங்கள்!
இப்படி ஒரு கதையை எழுதிய ஸ்ரீதர் நடிகையர் திலகம் சாவித்திரி நடிக்க வேண்டிய கதாநாயகி வேடத்துக்கு , சாவித்திரியால் அறிமுகப்படுத்தப் பட்ட சந்திரகலாவை நடிக்க வைத்தார். அலட்சியம், விரக்தி,ஆவேசம், ஆத்திரம், என்று பலவித குணாம்சங்களைக் கொண்ட பாத்திரத்தின் தன்மை அறிந்து இயல்பாக நடித்திருந்தார் சந்திரகலா. கதாநாயகனாக அறிமுக நாயகனாக விஷ்ணுவர்தன் நடித்திருந்தார். கன்னடத்தில் இருந்து தமிழ்திரைக்கு வந்த அவருக்கு நடிகர் வி கோபாலகிருஷ்ணன் குரல் கொடுத்தார்.
சமூக சேவகி நளினாவாக வரும் மனோரமாவுக்கு பல மொழி பேசும் சாகசக்காரி வேடம். ரசிக்கும் படி இருந்தது அவர் நடிப்பு. அவருக்கு அடங்கிய கணவராக சோ , வழக்கமான வேடம். ஸ்ரீதருடன் சோ இணைந்த ஒரே படமும் இதுதான். தேங்காய் சீனிவாசன், வீரராகவன், சுருளிராஜன், சுந்தரிபாய் ,சீதாலஷ்மி, டைபிஸ்ட் கோபு ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார் ஸ்ரீதர். அபலை பெண் ஒருத்திக்கு வாழ்வு கிடைப்பது போல் அவர் அமைத்த கதையின் முடிவை ரசிகர்கள் ஏற்கவில்லை. இதனால் படம் ஸ்ரீதருக்கு பொருளாதார ரீதியில் மேலும் சரிவை தந்தது. ஆனால் சில மாதங்கள் கழித்து வெளிவந்த கே பாலசந்தரின் அரங்கேற்றம் படத்தில் விபசாரம் செய்த கதாநாயகிக்கு ஒருவன் வாழ்வு தர முன்வந்தும் அவளுக்கு இறுதியில் சித்தப்பிரமை ஏற்படுவதாக பாலசந்தர் முடிவை அமைத்திருந்தார். ரசிகர்கள் அந்த முடிவை ஏற்று படத்தை வெற்றி படமாக்கினார்கள்!
No comments:
Post a Comment