வேலு பரி படைத்த “மெளனத் தீவு” நூல் நயப்பு கானா பிரபா


 

இந்த நாவலைப் படித்த போது கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கால
இயந்திரத்தில் என பால்யகாலத்துக்குப் போய் விட்டேன். அந்தக் காலத்தில் தினம் ஒரு புத்தம் என்று வெறி கொண்டு படித்த போது நமக்குப் பெருந்தீனியாக வாய்த்தவர்கள் வாண்டு மாமா என்ற எழுத்தாளரும், குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா போன்றோர்.


அது போல் நம் ஈழ வரலாற்றை நாவல் வடிவில் கொடுத்த வகையில் செங்கை ஆழியான் மிக முக்கியமானதொரு படைப்புலகப் பணியைச் செய்திருக்கிறார்.
அந்த நாட்களில் நாம் படித்த சிறுவர் நவீனங்கள் இன்னமும் பசுமரத்தாணி போல் நம் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
காரணம் அழகு தமிழ் விளையாடும் எழுத்து நடையில் வீர தீரம் நிறைந்த வரலாற்றுப் பின்னணியோடு அவை எழுதப்பட்டிருக்கும்.
இங்கே பரி அவர்களது மெளனத்தீவு நாவலைப் படித்து முடித்த பின்னர் அந்த நாள் இனித்த இலக்கியச்சுவை தான் மனதில் சப்புக் கொட்டியது.

ஈழத்தில் நம் கிராமிய வாழ்வியலை அவர் எழுத்தில் படிக்கும் போது நாம் வாழ்ந்த அந்தக் காலம் பசுமையாக முளைக்கின்றது. அவ்வளவுக்குத் அனுபவித்து எழுதியிருக்கிறார்.
இந்த நூலின் வடிமைப்பே வெகு சிறப்பாக வந்திருக்கிறது. பயன்படுத்தப்பட்ட பெரிய எழுத்துரு, எழுத்துப் பிழைகள் அற்ற வாக்கியங்கள் என்று ஒரு இடறல் இல்லாமல் படிக்க முடிகின்றது.

மெளத்தீவு படிக்க ஆரம்பித்ததுமே அதன் களம் கண்ணுக்குள் விரிகின்றது. வேலு பரி அவர்களின் எழுத்தாழுமையால் சம்பவங்களைக் கொண்டு வரும் பாங்கில் ஒரு சித்திரக் கதை போன்றதொரு பாங்கில் சுவாரஸ்யம் கூட்டுகிறது.
ஓநாய்க் கோட்டை என்ற வாண்டு மாமாவின் சித்திரக் கதை போலவே இந்த மெளனத்தீவையும் கொண்டு வரலாம் இன்னொரு முயற்சியாக.

மெளனத்தீவு வாசிப்பனுபவத்தில் இன்னொரு மிக முக்கியமாகச் சொல்ல வேண்டியது. இந்த நூல் எல்லாத்தரப்பு வயதினரையும் திருப்திப்படுத்துமளவுக்கு எழுத்துப்படுத்தப்பட்டிருக்கிறது.
குறிப்பாகப் புலம்பெயர்ந்த தேசத்தில் வளரும் நம் பிள்ளைகளுக்கும் புரியும் வண்ணம் இலகு நடையிலும், இயல்பு நடையிலும் தமிழ் கையாளப்பட்டுள்ளது.

திருக்கோணேச்சர ஆலயத்தை பற்றியும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் அவர் எழுதிச் செல்லும் பாங்கில் நம் இந்து கலாச்சார விழுமியங்களை அன்னிய சக்திகள் சூறையாடிய அந்தக் காலத்தை நினைவுபடுத்தும் ஏக்கம் தொனிக்கின்றது.

அந்தமானியப் பழங்குடிகளை எடுத்துக் கொண்டால் இவர்கள் ஜாரவா ஒன்கே, செண்டினல்
ஷோம்பென் என்ற பூர்வ இனக்கூறுகளாக உள்ளனர்.
இவர்களில் ஒன்கே மக்களின் மரபணுவை வைத்து நிகழ்த்திய ஆய்வில் ஓன்கே மக்கள் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து 50,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இந்த மெளனத் தீவு நாவல் ஒரு வீரசகாசம் நிறைந்த எழுத்தாக அமைந்தாலும், இதன் பின்னால் உள்ள வரலாற்று நியாயத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

பொதுவாக தமிழரின் தொன்மை நாகரிகத் தேடலை வரலாற்றோடு இணைத்து எழுதும் கதை மரபில் தென்கிழக்காசிய நாடுகளை வைத்துத்தான் அதிகம் எழுதப்படுவதுண்டு. இங்கே அந்தமானை நோக்கிய பயணமாக அது அமைந்துள்ளது.

அவர்களின் மெளனத் தீவின் நாயகர்களை வைத்து இன்னொரு ஒரு தொடர் நாவல் வடிவங்களை வேலு பரி எதிர்காலத்தில் கொடுக்கலாம். அதன் மூலம் நம் வரலாற்றைக் கடத்த முடியும் என்ற ஆழமான சிந்தனையும் எழுகின்றது.
சிட்னியில் வாழ்ந்து வரும் இன்னொரு செழுமையான படைப்பாளியை "மெளனத்தீவு" அறிமுகம் செய்து வைக்கிறது.

No comments: