கூழாங்கல் 🪨 திரைப் பார்வை

 ஆகச் சிறந்த சிறுகதை ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கும் போதே


அதற்குக் கை, கால், நிலம், புலம் முளைக்க வைத்து மனசுக்குள் ஓட விடுவோமே அப்படி ஒரு உணர்வு பிறந்தது இந்தப் படத்தைப் பார்த்த பின்னர்.

யதார்த்த சினிமா என்பதன் முழு அர்த்தத்தைப் பிரதிபலிக்கும் கதை மாந்தர்களும், மண் படிமங்களும்.

திரைமொழிக்கேற்ற சமரசம் எதுவுமில்லாமல் ஒரு கேமராவை வறண்ட நிலக் காட்டின் ஏதோவொரு புழுதிப்படிமம் கொண்ட மரக்கிளையில் களவாகப் பொருத்தி வைத்து எடுத்தது போல அப்பட்டமான யதார்த்தம் பறைகிறது.

உச்சரிக்கும் வார்த்தைகளில் கிராமத்துக் குழைவு, உரையாடலில் கெட்ட வார்த்தைகள் அப்படியே கொட்டுகின்றன. அப்பழுக்கற்ற கிராமத்து வாழ்வியலுக்கு முகம் கொடுத்தோருக்கு இதெல்லாம் தணிக்கை குழு வைத்துச் செய்யாத சாதாரண மொழி அவ்வளவே.

ஆங்காங்கே நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் காட்சிகளில் ஊடுருவினாலும் அவை மாமூல் திரைப்பட வாசனை அற்ற, கடந்து போதல்கள் மட்டுமே.
பேரூந்துக்குள் நிகழும் மோதலின் சத்தத்தை அமுக்கிக் குழந்தையின் வீறிடலைப் பிரதிபலிக்கும் உத்தி நம் தமிழ் சினிமாவுக்குப் புதிது.

எலிக்கறி வேட்டையில் இருந்து நுணுக்கமான வரண்ட நிலத்தின்

பதிவுகள்.
மூர்க்கன் தந்தையும், பின் தொடரும் பையனும் தான் முக்கிய கதை மாந்தர்கள் எதிரெதிர்த் துருவங்களின் எண்ண அலைகள், கொந்தளிப்பு, தப்ப முடியாத அடைக்கலம் என்று பயணிக்கிறது.

கதையின் முக்கிய பாத்திரங்களைத் தவிர சூழலும், சுற்றியிருப்பவர்களும் ஆங்காங்கே செய்திகளை விட்டுச் செல்கிறார்கள். ஒளிப்பதிவு அந்த மண்ணை அப்படியே ஒற்றியெடுத்திருக்கின்றது.

நியாய தர்மம் பேசுவதா இலக்கியம்?
உள்ளதை உள்ளவாறு அப்படியே கொடுப்பது தானே?
அதைத்தான் இந்தக் கூழாங்கல்லும் செய்கிறது. கூழாங்கல்லைப் பார்த்த பின் இதுவரை வந்த யதார்த்த சினிமா என்று சொல்லப்பட்டவைகளை மீளாய்வு செய்கிறது மனம்.

 நம் தமிழ்ச் சமூகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் நிகழும் குடும்ப வன்முறைகள் அப்படியே அந்தக் கொட்டிலுக்குள் அடங்கிப் போகும் வழமையை எடுத்துக் கதை பண்ணியிருக்கும் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் வெகு நிறைவானதொரு படைப்பை அளித்திருக்கின்றார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தைத் தயாரித்தவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் அவரின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன். சர்வதேச அளவிலும் பல விருதுகளைக் கையகப்படுத்திய இந்தப் படைப்பு தற்போது SonyLIV தளம் வழியாகப் பார்க்கக் கிடைக்கின்றது.


கானா பிரபா



No comments: