எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள சிறந்ததொரு சந்தர்ப்பம்
SJBயின் தமிழ் பிரிவின் ஊடக பேச்சாளராக உமா
சீன தூதரக அதிகாரிகள் குழுவினர் விஜயம்
மாவையின் தலைமையை வரவேற்கும் விக்னேஸ்வரன்
இரட்டை பிரஜாவுரிமை பெற பாரிய அளவில் விண்ணப்பம்
‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’ கேப்பாபிலவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
குடும்பத்துடன் அமெரிக்கா பயணமானார் கோட்டாபய ராஜபக்ஷ
எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள சிறந்ததொரு சந்தர்ப்பம்
- ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம்.
முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமை மற்றும் நம்மில் பெரும்பாலானோர் சந்தித்த பின்னடைவு ஆகியவற்றை நான் நன்கு அறிவேன். எனினும், நாம் ஏற்கனவே நெருக்கடியான நிலையைக் கடந்துவிட்டதாக கருதுகின்றேன். 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும்.
பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் இன்னும் அடையத் தவறிவிட்டோம். நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல் முறைமையில் மாற்றம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாது. எதிர்வரும் தசாப்தத்திற்குள் வளமான இலங்கையை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வேலைத்திட்டத்தில் நாட்டை முன்னிலைப்படுத்தி, அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் தீர்க்கமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய நம்பிக்கைகளுடன் நாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
நன்றி தினகரன்
SJBயின் தமிழ் பிரிவின் ஊடக பேச்சாளராக உமா
சஜித் பிரேமதாசவினால் நியமிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், அக்கட்சியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளர் பதவிக்கான நியமனக் கடிதத்தை, கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, உமாச்சந்திரா பிரகாஷிடம் கையளித்தார். நன்றி தினகரன்
சீன தூதரக அதிகாரிகள் குழுவினர் விஜயம்
யாழ்ப்பாண கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர்.
நேற்று முன்தினம்(புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.
இந்த விஜயத்தின் போது, அவர்கள், கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்பட்டாலும் கோட்டைக்கு பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ அங்கு பிரசன்னமாகி இருக்கவில்லை.
யாழ்.விசேட நிருபர்
நன்றி தினகரன்
மாவையின் தலைமையை வரவேற்கும் விக்னேஸ்வரன்
தமிழரசுக் கட்சியில் சில சுயநலவாதிகள் உள்ளதாகவும் குற்றச்சாட்டு
தற்போதைய நிலையில் மாவை சேனாதிராஜாவைத் தலைவராகக் கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள சுயநலவாதிகளே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு எதிராகச் செயற்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தரப்புகளுக்குள் பிரிவினை இருப்பதால்தான் சிங்கள அரசுகளால் எம்மை ஏமாற்ற முடிந்தது. நமக்கு ஒற்றுமை இருக்கின்றது என்பதைக் கண்டால் அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என நம்புகின்றோம்.
இப்போதும் தமிழ்த் தரப்பில் சிலர்தான் தனித்துப் போக வேண்டும் என கூறுகின்றார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகளை இயன்ற வரை ஒன்றிணைத்துச் செயற்படவே நாம் முனைகின்றோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்குழுவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட முடிவுகள் பற்றி செய்திகள் வெளியாகின.
அந்தச் செயற்குழுவில் உள்ள ஒன்பது பேரில் பெரும்பான்மையானவர்கள் மாவை சேனாதிராஜாவுக்கு எதிரானவர்கள். ஆனால் ஜனவரியில் கொழும்பில் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு உள்ளது என்று மாவை சொன்னதாகவும் செய்தி வந்தது. இது முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடும். இந்த முரண்பாடு ஏற்படுவதற்கு சிலரது சுயநல சிந்தனைகள்தான் காரணம்.
மக்களுக்காக நாங்கள் செயற்பட ஆரம்பித்தால் சுயநல சிந்தனைகளை கைவிட்டு மக்கள் சார்பில்தான் சிந்திக்க வேண்டும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
இரட்டை பிரஜாவுரிமை பெற பாரிய அளவில் விண்ணப்பம்
- அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற 1,621 பேரிடமிருந்து கோரிக்கை
கடந்த 2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கை விண்ணப்பங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் எனவும், அந்நாட்டு பிரஜாவுரிமை பெற்றுள்ள 1,621 பேர் இவ்வாறு விண்ணப்பித்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் 885 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேர், கனடாவைச் சேர்ந்த 371 பேர் மற்றும் இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூஸிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அந்தந்த நாடுகளில் குடியுரமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2021ஆம் ஆண்டில் 382,560 கடவுச்சீட்டுகள் விநியோகம்
கடந்த 2021 இல், 382,560 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதில் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் 398 உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இது 2020 ஆம் ஆண்டிலும் பார்க்க அதிகமாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் 209,411 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 175 இராஜதந்திர கடவுச்சீட்டுகள் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நன்றி தினகரன்
‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’ கேப்பாபிலவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
- 2008 இல் வெளியேறியும் காணிகள் இன்னும் கிடைக்கவில்லையென தெரிவிப்பு
தமது பூர்வீக காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமெனக் கோரி, கேப்பாபிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (27) நடத்தினர். கேப்பாபிலவு பகுதியிலமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக நுழைவாயில் முன்னால், இவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்காக தமிழ் கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களும் இதில்,பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது காணி உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
2008 ஆம் ஆண்டு போர் காரணமாக கேப்பா பிலவு பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறினோம். இன்றுவரை எங்களின் வளங்கள் நிறைந்த காணிகளை படையினர் ஒப்படைக்கவில்லை. அந்நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானங்களையும் படையினர் எடுத்துவருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் விவசாயம், கால்நடைவளர்ப்பு, கடற்தொழிலை நம்பியே நாங்கள் வாழ்ந்துவருகிறோம். காணிகள் இல்லாத நிலையில் எங்களால் எதுவும் செய்யமுடியாது. மாறி, மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் காணிவிடுவிப்பு தொடர்பில் பேச்சுக்கள் நடாத்தும்.ஆனால், எதுவும் நடந்ததாக இல்லை. எனவே எங்கள் காணிகளை விட்டு இராணுவத்தினர் வெளியேறவேண்டும். எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தினர். நன்றி தினகரன்
குடும்பத்துடன் அமெரிக்கா பயணமானார் கோட்டாபய ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ அவரது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் நேற்று (26) அதிகாலை 2.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ , அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி. ராஜபக்ஷ, பேத்தி டி.எச். ராஜபக்ஷ ஆகியோரே இவ்வாறு அமெரிக்கா பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று துபாய் நோக்கி பயணித்ததாகவும் அவர்கள் அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment