அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் அனைவருக்கும் எனது இனிய ( 2023 ) ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எழுத்தும்
வாழ்க்கையும் என்ற இந்தத்
தொடரை கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டுகள்
கடந்து, மூன்றாவது ஆண்டிலும் இந்தத் தொடர் முற்றுப்பெறாமல் தொடருவதற்கு, பல காரணங்கள் இருக்கின்றன.
இந்தத் தொடரின் முதல் பாகம் நிறைவடைந்து, இரண்டாவது
பாகத்திற்கு வந்தவேளையில், கொவிட் பெருந்தொற்றும் தனது ஆட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தது.
2020 – 2021 – 2022 ஆகிய
வருடங்களில் கொவிட் பெருந்தொற்றால் மறைந்துவிட்ட
எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் பற்றியும்,
இம்மூன்றாண்டு காலத்துள் நோய் உபாதைகள் மற்றும் முதுமையின் காரணத்தினால் விடைபெற்றுவிட்டவர்கள்
பற்றியும் பல பதிவுகளை ஏற்கனவே எழுதிவிட்டேன்.
அவ்வாறு எழுதியதன் மூலம்
அந்தத் துயரங்களிலிருந்து ஓரளவு விடுபட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. நான்
எழுத்துலக பிரவேசம் செய்து அரைநூற்றாண்டு காலம் நெருங்கிய வேளையில் ( 2022 இறுதிப்பகுதியில்
) எனது எழுத்தூழியத்துடன் தொடர்புபட்ட சில
நற்செய்திகள் என்னை வந்தடைந்தன. அச்செய்திகள் அடுத்தடுத்து வந்தமைதான் வியப்பானது.
எதிர்பாராதது.
எதிர்பாராத நிகழ்வுகளின்
சங்கமம்தான் வாழ்க்கை என்று அடிக்கடி நான் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றேன்.
கடந்த டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி காலையில் நான் மெல்பன் விமான நிலையத்திற்கு புறப்படத் தயராகிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
எனக்கு வணக்கமும் வாழ்த்தும்
கூறியவாறு மறுமுனையில் கனடாவிலிருந்து எனக்கு மிகவும் பிரியமான படைப்பிலக்கியவாதி அ.
முத்துலிங்கம் அவர்கள் தொடர்புகொண்டார்.
அவரை நான் இதுவரையில் நேருக்கு
நேர் சந்தித்து பேசியதும் இல்லை. ஆனால், அவுஸ்திரேலியாவுக்கு
நான் புலம்பெயர்ந்த பின்னரே அவரது எழுத்துக்களை படித்தேன். கனடாவுக்கு 2007 ஆம் ஆண்டு இறுதியில் நான்
சென்றபோது, 2008 ஆம் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி அவர், அமெரிக்காவிலிருந்து என்னை தொலைபேசியில்
அழைத்து புத்தாண்டு வாழ்த்துக்கூறியதுடன்,
தன்னால் சந்திக்கமுடியாமல் போனதையிட்டு வருத்தமும் தெரிவித்தார். அன்று என்னுடன் நீண்ட
நேரம் பேசினார்.
அதன்பின்னரும் என்னுடன்
மின்னஞ்சல் தொடர்பிலிருந்தார். கடந்த டிசம்பர்
மாதம் 05 ஆம் திகதி அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
முருகபூபதி இம்முறை உங்களுக்கு எமது கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதினை வழங்கவிருக்கின்றோம். விரைவில் இயல்விருது தொடர்பான கடிதம் வரும் என்றார்.
எனக்கு வியப்பாகவிருந்தது. நான் விமான நிலையம் செல்லும்
அவசரத்திலிருந்தேன்.
எனது மனைவி மாலதி, கடந்த
ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி எனக்கு மூன்று மாத காலம் விடுமுறை தந்துவிட்டு,
தாயகம் சென்றிருந்தார். அவர் அங்கிருந்து டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி திரும்பினார். மாலதியை வரவேற்பதற்குத்தான் அன்றைய தினம் புறப்பட்டுக்கொண்டிருந்தேன்.
இயல்விருது கிடைக்கவிருக்கும்
செய்தியை உங்கள் மனவிக்கு சொல்லி அழைத்துவாருங்கள் எனச்சொன்ன அன்பர் முத்துலிங்கம்
அவர்கள் தொலைபேசி இணைப்பிலிருந்து நீங்கினார்.
கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின்
செயலாளராகவும் நிருவாகியாகவும் பல வருடங்களாக இயங்கிவரும் அவர் அன்று சொன்ன நற்செய்தியையடுத்து, அன்றைய தினமே உத்தியோக பூர்வமான இயல்விருது தொடர்பான மின்னஞ்சல் என்னை வந்தடைந்தது. அதன் பின்னர் ஒரு வாரம் கடந்து தபாலிலும்
அதே செய்தி வந்தது.
எனினும் இச்செய்தியை நான் வெளியே கசிய விடவில்லை. எனக்கு
நெருக்கமான இலக்கிய நண்பர்களிடத்திலும் சொல்லவில்லை.
கனடா இலக்கியத்தோட்டம்
ஊடகங்களுக்கு அறியத்தரும் வரையில் நான் மௌனம்
காத்தேன்.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் கனடா தமிழ்
இலக்கியத் தோட்டம் இந்த இயல் விருதை
வழங்கி வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும்
உலக அளவில் சிறந்த தமிழ் இலக்கிய
சேவையாளர் எனக்கருதும் ஒருவருக்கு, ' இயல் விருது ' எனும் வாழ்நாள் தமிழ்
இலக்கிய சாதனை விருது வழங்கப்படுகிறது.
இந்த வாழ்நாள் விருது ஒரு படைப்பாளிக்கோ, கல்வியாளருக்கோ,
நூல்வெளியீட்டாளருக்கோ, விமர்சகருக்கோ, வேறு ஏதேனும் ஒரு வகையில் சிறந்த தமிழ்
தொண்டாற்றியதாக கருதுபவர்களுக்கோ
அளிக்கப்படுகிறது.
இதுவரையில் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது பெற்றவர்கள்:
தமிழ்நாட்டிலிருந்து
சுந்தரராமசாமி, வெங்கட் சாமிநாதன், அம்பை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்
நாடன், தியோடர் பாஸ்கரன், கோவை ஞானி, ஜெயமோகன், ஐராவதம் மகாதேவன், என். சுகுமாரன்,
வண்ணதாசன், இமையம், சு. வெங்கடேசன், இரா.
வெங்கடாசலபதி,
ஐக்கிய அமெரிக்காவிலிருந்து ஜோர்ஜ் எல். ஹார்ட்,
இலங்கையிலிருந்து கே. கணேஷ், டொமினிக் ஜீவா, இ. மயூரநாதன்,
இங்கிலாந்திலிருந்து தாஸீஸியஸ், பத்மநாப அய்யர், லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் ,
அவுஸ்திரேலியாவிலிருந்து
எஸ். பொன்னுத்துரை.
மேற்குறித்த தகவல்களை குறிப்பிட்ட கனடா தமிழ் இலக்கியத்
தோட்டத்தின் வலைப்பூவலிருந்து அறியமுடிந்தது.
யாழ். ஜீவநதி முருகபூபதி சிறப்பிதழ்
இது இவ்விதமிருக்க, கனடா
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் செய்தி கிடைத்து ஒரு சில நாட்களில் வடக்கில்
அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி சிற்றிதழின் ஆசிரியர் கலமணி பரணீதரன்
தொடர்புகொண்டு, 2023 ஆம் ஆண்டு
தொடக்கத்தில் ஜீவநதி – முருகபூபதி சிறப்பிதழை வெளியிடவிருக்கிறது எனச்சொல்லி
மற்றும் ஒரு இன்ப அதிர்ச்சியை தந்தார். என்னிடமிருந்து சில விபரங்களையும்
ஒளிப்படங்களையும் கேட்டுப்பெற்றார்.
இவருக்கும் இயல்விருது பற்றி நான் மூச்சுக்காட்டவில்லை.
மதுரை உலகத் தமிழ்ச்சங்கம்
மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில் நான் எழுதிய பாரதி தரிசனம் தொடரை தொகுத்து மின்னூலாக வெளியிட்ட போது எனக்கு அறிமுகமான பாரதியாரின் கொள்ளுப்பேத்தி கவிஞர் உமா பாரதி அவர்கள், ஒருநாள் தொடர்புகொண்டு மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இரண்டு நாள் கருத்தரங்கை யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து நடத்தவிருக்கும் தகவலையும் சொல்லி, அக்கருத்தரங்கில், தான் தமிழ் வளர்ச்சியில் இலங்கைத் தமிழரின் பங்களிப்பு என்ற தலைப்பில் இடம்பெறவிருக்கும் அமர்வில், எனது வகிபாகம் பற்றி பேசவிருப்பதாக தெரிவித்தார்.
இச்செய்தியும் நான் எதிர்பார்க்காதது.
கவிஞர் இரா. உமா பாரதி சிறந்த சொற்பொழிவாளர். அத்துடன்
பட்டிமன்றம், கவியரங்கம் முதலானவற்றில் தலைமையாளர். மகாகவி பாரதியாரின் தங்கை தங்கம்மாளின் கொள்ளுப்பேத்தியான கவிஞர் உமா பாரதி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் உதவியாளராய் பணியாற்றுகிறார்.
அன்பு வழி , மின்மாத இதழ் மற்றும் விஜலென்ஸ் என்ற மாத இதழின்
சிறப்பு ஆசிரியர். குறள்வழி ஆளுமை என்ற அமைப்பிலும் இயங்குகிறார்.
சேக்கிழார் உலக சாதனை அமைப்பு
உட்பட , Legal Aid For Hindus – Pride of Bharath Heritage ஆகிய அமைப்புகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். மகாகவி பாரதி விருது,
டாக்டர் அப்துல் கலாம் சாதனையாளர் விருது
, பல்துறை வித்தகர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.
கவிஞர் உமா பாரதி, சென்னையிலிருந்து
மதுரைக்கு ரயிலில் புறப்பட்டபோதும், திரும்பி வந்த பின்னரும் கூட, எனக்கு கனடா இல்விருது கிடைக்கவிருக்கும் செய்தியை நான்
சொல்லவில்லை. ஊடகங்களில் செய்தி வந்ததும், மீண்டும் தொடர்புகொண்டு வாழ்த்தினார்.
முதலிலேயே தெரிந்திருந்தால், மதுரை கருத்தரங்கில்
சொல்லியிருப்பேன் அண்ணா என்றார்.
இயல் விருது பெறவிருக்கும்
இந்திய எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கை, இந்தியா அவுஸ்திரேலியா,
கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய
நாடுகளிலிருந்தும் பலர் தினமும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
எமது இலக்கிய குடும்பத்தைச்சேர்ந்த
எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தமது குடும்பத்தினருடன் வெகு தொலைவிலிருந்து வீட்டிற்கே
வந்து வாழ்த்தினார். இவரது புதல்வி திவானா, எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிச்செயலாளர்.
இந்தத் தன்னார்வத்தொண்டு அமைப்பு உருவாகிய
( 1988 ) காலத்திற்குப்பின்னர் பிறந்தவர். செயலூக்கமுடன் இயங்கிவரும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர். கிருஷ்ணமூர்த்தியும் மயூர் வீடியோ விஷன் மூர்த்தியும்
இணைந்துதான் சில வருடங்களுக்கு முன்னர் எனது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும்
ரஸஞானி ஆவணப்படத்தையும் தயாரித்து வெளியிட்டவர்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி எனக்கு இவ்வாறுதான் கழிந்தது. எழுத்துலக பிரவேசத்தின்
பொன்விழாக்காலம் நிறைவுபெறும் தருணத்தில் இந்தப்பதிவில்
குறிப்பிடப்பட்ட மூன்று செய்திகள் வந்தன.
இச்செய்திகளை காண்பதற்கு
எனது பெற்றோர்கள், எனது ஆசான்கள், என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை
ஜீவா, மற்றும் ஊடகத்துறைக்குள் அழைத்த வீரகேசரி முன்னாள் ஆசிரியர் க. சிவப்பிரகாசம், ரஸஞானி எனப்பெயர் சூட்டி வீரகேசரி வார வெளியீட்டில்
களம் தந்து ஊக்குவித்த பொன். ராஜகோபால், மற்றும்
பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் , இலங்கை
வானொலி ஊடகத்தில் கலைக்கோலம் நிகழ்ச்சியை நடத்துவதற்கு
வழிசமைத்த வி. ஏ. திருஞானசுந்தரம், எனது வாழ்க்கையில்
அக்கறை காண்பித்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்
ஆகியோர் இல்லையே என்ற கவலையுடனேயே இந்தப்பதிவை எழுதுகின்றேன்.
மலர்ந்துள்ள புத்தாண்டில் உலக மக்கள் அனைவருக்கும் எமது கலை, இலக்கிய, ஊடக
குடும்பத்தினருக்கும் அனைத்து நன்மைகளும் கிட்டவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
( தொடரும் )
No comments:
Post a Comment