“ புதுவருஷ வாழ்த்துக்கள்” கார்த்திகா கணேசர்.

 


வாண வேடிக்கைகள், கோடி நட்சத்திரங்களை அள்ளி அள்ளிக் கொழிக்க; பட்டாசு பட படக்க; புத்தாடை மினு மினுக்க; கண்ணாடி டம்லர்கள் டிங் டிங் எனச் சிணுங்க; மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரிக்க Happy New year வாழ்த்துக்கள்; கட்டித் தழுவல்கள்; ஆசை முத்தங்களோடு Happy New Year!

  ...2023 பிறந்து விட்டது.

 Happy New Year!

 பிறக்கும் புதிய ஆண்டு மகிழ்ச்சியாக அமைய வேண்டும். வருடம் பூரா மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்பது தான் எம் எல்லோரது ஆசையும். அப்போ மகிழ்ச்சி தானே வந்து விடுமா? அல்லது நாமாக அதை அடைய உழைக்க வேண்டுமா? சந்தேகம் எழ, மனோதத்துவ நிபுணர் தான் என்ன சொல்லுகிறார் எனப் பார்த்தேன்.

 Happiness - A Psychiatric Education என Journal of medical Ethics கூறுகிறது. மகிழ்வு ஒரு மனோ நிலை. அதனால், எமக்கு அது வரவேண்டும் என வாழ்த்துகிறோம்.

 மக்களை , நீங்கள் எப்போது சந்தோஷமாக இருப்பீர்கள் எனக் கேட்டால், நான் பணக்காரனானதும் சந்தோஷமாக இருப்பேன், ’எனக்கு நல்ல வேலை கிடைத்ததும் சந்தோஷமாக இருப்பேன், ’எனது பிள்ளை படித்து நல்லாக வந்தால் எனக்கு சந்தோஷம்இவைதான் பெரும்பாலான பதில்களாக இருக்கும்.

அப்போ நாங்கள் இந்தக் கணம் சந்தோஷமாக இல்லையா? எல்லோரும் ஆரவாரித்து வாழ்த்துத் தெரிவித்த போது சந்தோஷம் வரவில்லையா? ... இப்போ தெரிகிறது எமக்கு மேலே கூறிய அத்தனையையும் பற்றிய எண்ணம். இப்போ ஒத்துக் கொள்ள முடிகிறது எமக்கு சந்தோஷம் வர மேற்கூறியவைகள் எமக்குத் தேவை இல்லை. மாறாக நாமே தான் அவ்வாறு ஒரு கற்பனையைப் பண்ணிக் கொள்ளுகிறோம். சந்தோஷத்திற்கும் கையிருப்புக்கும் சம்பந்தம் கிடையாது. சந்தோஷம் ஒரு மன நிலை தான். நமக்குப் பிடித்ததை முழு மனதுடம் அனுபவித்துச் செய்யும் போது சந்தோஷம் தானே வரும்.

 சந்தோஷத்திற்குக் குந்தகமாக இருப்பது கவலை. இதுவும் ஒரு மனோ நிலை தான். இந்த மனோ நிலை எப்போ எற்படுகிறது? ‘ஐயோ நான் கஸ்ரப்படுகிறேன் என தன்னிலே தான் பச்சாதாபப் படும் போதுஇந்தக் கவலை என்ற உணர்ச்சியை நாம் உணர்கிறோம். அதற்குத் தான் மகான்கள் எல்லோருமேசேவை செய்யுங்கள்; உங்களிலும் அதிகம் கஸ்ரப்படுபவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்என்று கூறியுள்ளார்கள். அதன் மூலம் ஓர் ஏகாந்த; விபரிக்கவொண்ணா அமைதியை  அறிவீர்கள் என்கிறார்கள்.

 கூடவே புது வருஷ சங்கல்பம் - Resolution -  எடுப்பது இந் நாளில் சகஜம். அது காற்றுடன் பறப்பதும் சகஜம். இவ்வருடம் நான் 4 கிலோ எடை குறைப்பேன்; புகைப்பிடிப்பதை நிறுத்தி விடுவேன்; இவ்வாறாக அது தொடரும். ஆனால் இந்த சங்கல்பங்கள் எல்லாவற்றுக்கும் எடுக்கப்படும் சங்கற்பம் மட்டும் போதாது. அதற்கு உழைக்கவும் வேண்டும். உழைப்பதற்குத் திட்டம் வேண்டும்; திட்டத்தை அமுல் படுத்த, அதை நெறிப்படுத்த, அதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதனை செயற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

 மேலும், நாம் எல்லோரும் செய்யும் இன்னொரு விடயம் திட்டங்கள் எல்லாம் போட்டு வருட இறுதி  வரும் போது, ‘... இந்த வருடம் எத்தனை வேகமாகப் போய் விட்டது!’ என்கிறோம். பூமி வெகு வேகமாக உருள அது என்ன கிறிக்கெற் பந்தா? எல்லோருக்குமே 24 மணி நேரங்கள் மட்டுமே தான் உண்டு. சாதனையாளர்கள் அவற்றைத் திட்டமிட்டு பயன் படுத்துகிறார்கள். மற்ற வேதனையாளர்கள் நேரத்துடன் இணைந்து அதனைப் பயன்படுத்துகிறார்கள்.

 2023 எவ்வாறு அமைய வேண்டும் என்பது எம் கையில் தான். வாழ்த்துக்கள் எல்லாம் வருட ஆரம்பத்தில் தான். அதன் பின் எவ்வாறு வருடத்தைக் கொண்டுநடத்த வேண்டும்? அவை எல்லாம் நம் கையில் தான். ... மறந்து விட்டேன்.

 "HAPPY NEW YEAR TO YOU"

 பழக்க தோஷத்தால் வாயிலே ஆங்கில மொழியிலே வாழ்த்தும் சம்பிருதாயம் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. இப்போது தமிழிலே சொல்கிறேன்.

 புதுவருஷ வாழ்த்துக்கள்

 நண்பர்களே! உங்களிலே எனக்கு அக்கறை உண்டு. அதனாலே புது வருட வாழ்த்தைக் கூறி விடைபெற விரும்பவில்லை. வருடம் பூரா சிறப்பாக அமைய உழைப்போம் எனக்கூறி விடைபெறுவது கார்த்திகா கணேசர்.

No comments: