பிறக்கும் வருடம் சிறக்க மனத்தால் இறையை வேண்டிடுவோம் !

 


        


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

  




           பிறக்கும் வருடம் சிறக்க

   மனத்தால் இறையை வேண்டிடுவோம் 
            அடக்கும் ஆணவம் அகல
அகத்தால்  இறையை வேண்டிடுவோம் 

         தொடக்கும் காரியம் துலங்க

துதித்தே இறையை வேண்டிடுவோம் 
          நலமும் வளமும் பெருக
நாளும் இறையை நாடிடுவோம் 

      உற்றார் உறவின் இணக்கம்

உயர்வாய் இருக்க வேண்டிடுவோம் 
         கற்றார் பெருக நாட்டில்
கருதி இறையை வேண்டிடுவோம் 

           பசியும் பிணியும் அகல

பாங்காய் இறையை வேண்டிடுவோம்  
        அறிவும் தெளிவும் பிறக்க
   அன்பாய்  இறையை வேண்டிடுவோம் 

          போரின் எண்ணம் தொலைய

பொறுப்பாய் இறையை வேண்டிடுவோம் 
          வாதம் புரியும் கூட்டம்
மறைய இறையை வேண்டிடுவோம் 

         ஏழை என்னும் சொல்லை

 இகத்தில் அகற்ற வேண்டிடுவோம்
        கோழை என்னும் சொல்லை
   குவலயம் அகல வேண்டிடுவோம்  

      வேலை இல்லை என்னும்

வேதனை போக்க வேண்டிடுவோம் 
      இருக்கும் தொழிலை நன்றாய்
பெருக்க இறையை வேண்டிடுவோம் 

       நல்ல தலைமை எழுந்து

நாட்டை ஆள வேண்டிடுவோம் 
     சொல்லும் சொல்லை காக்க
தூய தலைமை வேண்டிடுவோம் 

       கொள்ளை அடிக்கும் தலைமை

  குழியுள் விழ  வேண்டிடுவோம் 
      வல்ல தலைமை நாட்டில்
வளர  இறையை வேண்டிடுவோம்  

        பொய்மை உரைக்கும் கூட்டம்

  பொசுங்க   இறையை வேண்டிடுவோம்
        வாய்மை என்னும் வசந்தம்
   வாய்க்க இறையை வேண்டிடுவோம் 

        தாய்மை போற்றும் எண்ணம்

 தளரா  இருக்க வேண்டிடுவோம் 
       காய்தல் உவத்தல் இன்றி
கருணை  பெருக வேண்டிடுவோம் 

            அன்பு அறன்  வாழ்வில்

   அமைய அனைவரும்  வேண்டிடுவோம்
          அதர்மம் அசுத்தம் வாழ்வில் 
  அகல  அனைவரும் வேண்டிடும்  

               துன்பம் துயரம் போக

     என்று மிறையை வேண்டிடுவோம்  
             குன்றா மகிழ்வே நிறைய
      நன்றாய் இறையை வேண்டிடுவோம் 

       

No comments: