மூத்த எழுத்தாளர் – பாரதி இயல் ஆய்வாளர் தொ. மு. சி. ரகுநாதன் ! டிசம்பர் 31 நினைவுதினம் அவரது பிறந்த நூற்றாண்டு காலத்தில் ஒரு நினைவுப்பதிவு முருகபூபதி


பெரும்பாலான எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களை எனது எழுத்துலக பிரவேசத்தின் பின்னர்தான் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றேன்.

இந்த சந்திப்புகளுக்கு தற்போது அரைநூற்றாண்டு காலமாகிறது.

மேலதிக தகவல் நான் 1972 இல்தான் எழுத்து துறைக்குள் வந்தேன்.

அதற்கு முன்னர் இரண்டு தமிழக  பிரபல எழுத்தாளர்களை முதல் முதலில் எனது ஐந்து வயதிலும்,  பத்துவயதிலும்தான் பார்த்திருக்கின்றேன்.

அவர்கள்தான் இலக்கிய சகோதரர்கள் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான். தொ.மு. சிதம்பர ரகுநாதன்.

மூத்தவர் தமிழ்நாடு பாளையங்கோட்டையில் மாவட்ட ஆட்சித்


தலைவராகவிருந்த ஐ. ஏ. எஸ். அதிகாரி. கல்கி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் இரசிகமணி டி. கே. சி. ஆகியோரின் நெருங்கிய நண்பர். இவரது பெயரில் திருநெல்வேலியில் ஒரு வீதியும் இருக்கிறது.  இந்த வீதியில் எமது உறவினர்கள் வசிக்கிறார்கள்.

அத்துடன் ஆனந்தவிகடன், கல்கி முதலான இதழ்களில் இந்திய திருத்தலங்கள் பற்றிய தொடர்களை எழுதியவர். இவர் இலங்கை வந்த சமயத்தில் காரைநகர் சிவன்கோயிலுக்கு ஈழத்து சிதம்பரம் என்ற பெயரையும் சூட்டினார். காங்கிரஸ் கட்சியிலிருந்த காந்தீயவாதி.

இவரது தம்பிதான்  தொ.மு. சிதம்பர ரகுநாதன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பில் 1956 ஆம் ஆண்டு நாடெங்கும் நடந்த பாரதி விழாக்களில் கலந்துகொண்ட எழுத்தாளர், பேச்சாளர்.

முதலில் காங்கிரஸ் தொண்டராகவிருந்தவர்.

பின்னர் இடதுசாரிச் சிந்தனையாளராக மாறியதுடன், சோவியத் இலக்கிய மேதை மாக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலையும் தமிழுக்கு மொழிபெயர்த்தார். இதனை பெரும்பாலான முற்போக்கு எழுத்தாளர்கள் படித்துவிட்டே தங்கள் இலக்கியப் பயணத்தை தொடர்ந்திருப்பார்கள்.

தமிழ்நாடு திருநெல்வேலி பிரதேசத்தில் வாழ்ந்த  கைத்தறி நெசவாளர்களின் போராட்ட வாழ்வை சித்திரித்த ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல், செக் மொழியிலும் பெயர்க்கப்பட்டு, அந்த நாட்டில் அக்காலத்திலேயே ஐம்பதினாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது.  பஞ்சும் பசியும் நாவலை, காமிஸ்வலபில் என்ற புகழ்பெற்ற  எழுத்தாளரினால்  செக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

பஞ்சும் பசியும் நாவலை எமது இலங்கைப் பேராசிரியர் க. கைலாசபதி,  தான் எழுதிய தமிழ் நாவல் இலக்கியம் நூலில் சோஷலிஸ யதார்த்தப் பார்வையுள்ள படைப்பு என சிலாகித்துள்ளார்.

இவரது முதல் சிறுகதை 1941 இல் பிரசண்ட விகடன் இதழில் வெளியானது. முதல் புதினமான புயல் 1945 இல் வெளியானது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதனால்  1942 இல் சிறைக்கும்  சென்றார்.  1944 இல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946 இல் முல்லை  இலக்கிய இதழிலும்  பணியாற்றினார்.

திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் கவிதைகள்   எழுதியவர் .  

 தினமணி பத்திரிகையில் ரகுநாதன் பணியாற்றிய காலத்தில்தான்


புதுமைப்பித்தன் இவருக்கு அறிமுகமாகிறார். அன்று முதல் நெருங்கிய நண்பர்களானார்கள். அதனால் இவரிடமிருந்து புதுமைப்பித்தன் வரலாறு  இலக்கிய உலகிற்கு வரவாகியது.

புதுமைப்பித்தனின்  பாதிப்புக்கு தானும் கு.அழகிரிசாமியும் வல்லிக்கண்ணனும் ஜெயகாந்தனும்  ஆளானவர்கள்தான்  என்பதையும் ரகுநாதன் ஒப்புக் கொள்கிறார்.

குடும்பச்சொத்தில் ரகுநாதனுக்கு கிடைத்த பங்குப்பணத்தில் சாந்தி என்ற இலக்கிய இதழையும் நடத்தினார். இதில்தான் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி முதலான பின்னாளில் பிரபலம் பெற்ற எழுத்தாளர்களின் ஆரம்ப காலச் சிறுகதைகள் வெளிவந்தன.

ரகுநாதனை நோக்கி நான் நெருங்கியபோது எனக்கு 31 வயது. அப்போது மகாகவி பாரதி  பிறந்த நூற்றாண்டு ஆரம்பமாகியிருந்தது.

1956 ஆம் ஆண்டு இவர் இலங்கை வந்தபோது எம்மைத்தேடி எமது நீர்கொழும்பூர் வீட்டுக்கு வந்தார். இவர் எனது அப்பா வழியில் நெருங்கிய உறவினர்.  அப்பாவுக்கு மாமா. எனக்குத் தாத்தா. 

சிறுகதை, நாவல், கவிதை என எழுதிக்கொண்டிருந்த ரகுநாதன்,


மொழிபெயர்ப்பாளராகவும், ஆய்வாளராகவும் மாறினார்.  அதனால் எமக்கு ருஷ்ய இலக்கியங்கள் எழுதிய  லியோ ரோல்ஸ் ரோய், மாக்ஸிம் கோர்க்கி , புஷ்கின் ,  விளாதிமிரோவிச் மயக்கோவ்ஸ்கி முதலானோர் தமிழுக்கு அறிமுகமானார்கள்.

ரகுநாதன், பின்னாளில் பாரதி இயல் ஆய்வாளராக மாறினார்.  அதனால் எமக்கு பாரதியும் ஷெல்லியும், கங்கையும் காவிரியும், பாரதி: காலமும் கருத்தும், பாரதியும் புரட்சி இயக்கமும், பாரதியின் பாஞ்சாலி சபதம் : உறைபொருளும் மறைபொருளும் முதலான நூல்கள் வரவாகின. இவற்றுள் பாரதி: காலமும் கருத்தும், இந்திய சாகித்திய அகடமி விருதினைப்பெற்றது.

இத்தகைய ஒப்பீட்டு  ஆய்வு நூல்களே தமிழக பல்கலைக்கழகங்களில் ஒப்பியல் இலக்கியம் என்ற ஆய்வுத்துறையை உருவாக்குவதற்கும்  வழிகோலியது என்ற கருத்தும் நிலவுகிறது.  ரகுநாதனின் புதல்வர் ஹரீந்திரனின் மனைவி மாலதி  ( இவர் எனக்கு அண்ணி முறையானவர் ) தமது பட்ட மேற்படிப்பிற்காக தனது மாமனாரின் படைப்புகளையே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்.

 “ குடும்பத்திற்கு வரும் மருமகளை மாமனார்தான் அக்கறையோடு


அவதானிப்பார், ஆனால், இங்கே மாமனாரின் படைப்புகளையே மருமகள் ஆய்வு செய்துள்ளார்   என்று தமிழக இதழ் ஒன்று கவர் ஸ்ரோரி எழுதியிருந்தது.

எனினும்  கவிஞருமான மாலதியின் கவிதை நூலுக்கு கவியரசர் கண்ணதாசன்தான் அணிந்துரை எழுதினார்.

ரகுநாதனுக்கு சோவியத் லாண்ட் நேரு விருதும் கிடைத்திருக்கிறது.

இளங்கோவடிகள் யார்? என்ற ரகுநாதனின் நூல் எண்ணூறு பக்கங்களை கொண்டது. சிலப்பதிகாரம் தொடர்பாக காலம் காலமாகப் பேசப்பட்டுவந்த கதைகளுக்கு எதிர்வினையாகவும் இந்த நூல் பேசப்பட்டது.

 “ சிலப்பதிகாரம் பற்றி மரபுவழியான கருத்துப் படிமங்களை தகர்த்தெறிந்த நூல்தான் இளங்கோவடிகள் யார் ?  என்ற ஆய்வு நூல்    என்று பேராசிரியர் எஸ். தோதாத்திரி எழுதியுள்ளார்.

1956 ஆம் ஆண்டு ரகுநாதன் இலங்கை வந்தபோது, அவர் எம்மைத்தேடி வந்து,  விடுபட்டுப்போன எமது அப்பா வழி உறவுக்கு உயிர்ப்பளித்தார். 

அவரைத்தொடர்ந்து 1961 இல் இலங்கை வந்த, இவரது அண்ணன் பாஸ்கரத் தொண்டமான், எங்கள் வீட்டுக்கும் வந்து, உறவை மேலும் பலப்படுத்தினார்.

1972 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இலக்கியப்பிரவேசம் செய்து, 1973 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஐக்கியமாகியதையடுத்து, ரகுநாதனுடன் கடிதத் தொடர்புகளை மேற்கொண்டேன்.

1982 இல் பாரதி பிறந்த நூற்றாண்டு தொடங்கியதும், சங்கத்தின்


பாரதி நூற்றாண்டு விழாக் குழுவிலும் அங்கம் வகித்தேன். 1983 தொடக்கத்தில் சங்கம்  பாரதி இயல் ஆய்வாளர் ரகுநாதன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ஆகியோரை இலங்கைக்கு அழைத்திருந்தது. இவர்களுடன் வடக்கிற்கும் கிழக்கிற்கும் இலக்கியப்பயணங்கள் மேற்கொண்டேன்.

 இலங்கையில்  நடந்த பாரதி நூற்றாண்டு விழாக்கள் பற்றி நான் எழுதிய கட்டுரையையும் ரகுநாதன்,  தமிழ்நாடு தாமரை இதழில் வெளியிட்டார். இலங்கையில் பாரதி  ஆய்வு நூலை நான் எழுதுவதற்கு தூண்டுகோளாகவிருந்தவரும் ரகுநாதன்தான்.

1923 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பிறந்த ரகுநாதன், 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மறைந்தார்.

2002 இல் வெளியான எனது பறவைகள் நாவலை ரகுநாதனுக்கே சமர்பித்துள்ளேன்.

ரகுநாதனின் பிறந்த நூற்றாண்டு கடந்த ஒக்டோபர் மாதம்   ஆரம்பமாகியுள்ளது.

---0---

 

 

 

 

 

No comments: