வட இலங்கையில் சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவை
பூர்வீகமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர், அவ்வூரின் மற்றும் ஒரு பெயரையே தனது புனைபெயராக்கியும்கொண்டார்.
அவர்தான் “ ஆவூரான். “ சந்திரன்
.
நெடுந்தீவு பல விடயங்களில் புகழ்பெற்றது. உலகத் தமிழராய்ச்சிக்கு வித்திட்ட அருட்திரு. தணிநாயகம் அடிகளார் பிறந்த மண். அத்துடன் பல கலை, இலக்கியவாதிகளும் கல்விமான்களும்
சமூகப்பணியாளர்களும் தோன்றிய பிரதேசம்.
இங்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி சண்முகம் – பொன்னம்மா தம்பதியருக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்திருக்கும்
சந்திரன், இலக்கியப் பிரவேசம் செய்தபோது, ஊரின்மீதிருந்த அளவுகடந்த நேசத்தினால், உள்ளுருக்கு மட்டுமன்றி வெளியூருக்கெல்லாம் பசுவின் பாலை வழங்கிய தீவின் மற்றும் ஒரு பெயரையே புனைபெயராக்கிக்கொண்டவர்.
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும், நெடுந்தீவையும் அங்கு வாழும் மக்களையும் மறந்துவிடாமல், தன்னால் முடிந்த உதவிகளையும் அம்மக்களுக்கு – குறிப்பாக
மாணவர் சமூகத்திற்கு வழங்கி வரும் ஒரு தன்னார்வத் தொண்டர்.
சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு படைப்பாளியின்
பிரதான நோக்கமாகவிருக்கும். அந்த நோக்கத்துடனேயே
எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் அயர்ச்சியின்றி இயங்கி வருகின்றார். அதனால் எமது
நெஞ்சத்துக்கும் நெருக்கமானார்.
நெடுந்தீவு ஆரம்ப பாடசாலையில் தனது தொடக்க கால கல்வியை ஆரம்பித்த
சந்திரன், பின்னர் பெற்றவர்கள் கிளிநொச்சி குமரபுரத்திற்கு இடம்பெயர்ந்தமையால், அங்கே
குமரபுரம் மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்தார்.
தொழில் வாய்ப்பு பெற்று
1989 இல் மத்திய கிழக்கில் குவைத்துக்குச் சென்றவர்,
வாசிப்பு ஆர்வத்தையும் வளர்த்துக்கொண்டு இலக்கியப்பிரதிகளும்
எழுதத் தொடங்கினார்.
இவரது தொடக்க கால படைப்புகள் வீரகேசரியில் வெளிவந்துள்ளன. கவிதை,
கட்டுரை, சிறுகதை என்பன இவர் தேர்ந்தெடுத்த
துறைகள். தற்பொழுது தனது மணிவிழாக்காலத்தில் சின்னான் என்ற குறுநாவலையும் தனது
பூர்வீக ஊரைப் பின்னணியாகக்கொண்டு எழுதியிருக்கிறார்.
விரைவில் இந்த நூல் யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வரவுள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து 1995 ஆம் ஆண்டு தாயகம் திரும்பியிருக்கும் ஆவூரான், 1997 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு புலம்பெயர்ந்தார்.
இவரது மனைவி உஷா கௌரி யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில்
படித்தவர். இவரும் கலை, இலக்கியம் மற்றும் சமூகத்தொண்டுகளில் ஆர்வம் மிக்கவர்.
2001 ஆம்
ஆண்டு ஜனவரி மாதம் நாம் மெல்பனில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தியபோது எமக்கு
மிகவும் பக்கபலமாக விளங்கிய சந்திரன், அவ்விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
விழா செலவுகளுக்கு கணிசமான தொகையையும் தந்து உதவினார்.
அந்த விழா மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் அன்று தொடங்கியபோது
சந்திரன் – உஷா தம்பதியரின் செல்வப்புதல்வன் துவாரகன் பாலகனாக இருந்தார்.
இவர்கள் மூவரையும் எங்கள் கலைவளன் சிசு. நாகேந்திரன் மண்டப
வாயிலில் கண்டதும் தனது கெமராவினால் எடுத்த ஒளிப்படத்தைத்தான் இங்கே காண்கிறீர்கள்.
இந்தப்படத்தை சந்திரனின் இல்லத்தின் வரவேற்பறையில் நான் காணும்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நாம் நடத்திய எழுத்தாளர்
விழா காட்சிகளுடன் அமரத்துவம் எய்திவிட்ட கலைவளன்
சிசுநாகேந்திரனும் நினைவுப்பெருவெளியில் நீந்துவார்.
ஜனவரி மாதம் 01 ஆம் திகதிதான் சந்திரனின் பிறந்த தினம் என்பது
அண்மையில்தான் எனக்குத் தெரியவந்தது. ஒவ்வோர்
ஆண்டும் பிறக்கும்போதும் வழக்கமாக ஒருவரை ஒருவர்
வாழ்த்துவார்கள். அவ்வாறு 1963 ஆம் ஆண்டின் பிறப்பின்போது அதனை வாழ்த்தி வரவேற்றவர்கள், அன்று பிறந்த குழந்தை சந்திரனையும் வாழ்த்தியிருப்பார்கள்.
ஆனால், அதன்பிறகு சந்திரன் கடந்து வந்த பாதையில், அந்த ஆவூரின் கடல் காற்றும், குமரபுரத்தின் காடுறைந்த காற்றும் அவரைத் தழுவிச்சென்றிருந்தாலும்,
பின்னர் தொடர்ந்த பாதையில் சூறாவளியும் குறுக்கிட்டுள்ளன.
தான்பெற்ற வாழ்வியல் அனுபவங்களையெல்லாம், புத்திக்கொள்முதலாக்கிக்கொண்டு கலை, இலக்கிய , பொதுவெளியில் இயங்கினார்.
2005 ஆம்
ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம்
திகதி, தற்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த நாளுக்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதிதான் சுனாமி கடற்கோள் அநர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான
மனித உயிர்கள் ஜலசமாதியடைந்தன.
மெல்பனிலிருந்து இரக்கமுள்ள அன்பர்கள் பலர் இலங்கையில் சுனாமியால்
பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை திரட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பிட்ட 2005 ஜனவரி மாதம் 01 ஆம் திகதியன்று மெல்பன் ஶ்ரீ சிவா – விஷ்ணு ஆலயத்திற்கு வந்த
ஏராளமான பக்தர்கள் ஒருவரை ஒருவர் அணைத்தும் கைகுலுக்கி வணங்கியும் நல்வாழ்த்துக்களை தெரிவித்து புன்னகை பூத்துக்கொண்டிருந்தபோது ஒருவர் மாத்திரம் உணர்ச்சிப்பெருக்கோடு, உரத்துக்குரல் எழுப்பியவாறு உண்டியல் குலுக்கி நிதியுதவி
சேகரித்துக்கொண்டிருந்தார். அன்று அவரது பிறந்த தினம். தனது மனைவி பிள்ளைகளுடன் பிறந்த தினத்தை கொண்டாடுவதை
விடுத்து, எங்கோ பாதிக்கப்பட்ட மக்களுக்காக
ஆலய வீதிகளில் சுட்டெரிக்கும் வெய்யிலில் உண்டியலுடன் அலைந்துகொண்டிருந்தார்.
அவர்தான் இந்தப் பதிவில் நான் குறிப்பிடும் எழுத்தாளர் ஆவூரான் சந்திரன்.
சமூகப்பிரக்ஞையுடன் செயற்படும் எழுத்தாளர்கள், கலைஞர்களை சம
காலத்தில் காண்பது அரிது.
சந்திரனின் மனித நேய இயல்புகளை 17 ஆண்டுகளுக்கு முன்பே இனம்கண்டுகொண்டேன். அந்தப் பண்புகளினால், பின்னாளில் எமது இலங்கை மாணவர்
கல்வி நிதியத்தின் பணிகளிலும் இணைந்தார். சிறிது காலம் நிதியத்தின் தலைவராகவும் இயங்கினார்.
கலை, இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களில் பெரும்பாலானோர், சமூகப்பணிகளிலும்
தன்னார்வத் தொண்டுகளிலும் தங்கள் கவனத்தைச் செலுத்துவது குறைவு.
அவர்கள் வாசிப்போடும், எழுத்தோடும் பேச்சோடும் நின்றுவிடுகிறார்கள்.
இதேவேளை, இவை மூன்றிலும் இணைந்து பொதுத் தொண்டிலும், மனித நேய தன்னார்ப் பணிகளிலும் ஈடுபட்டவாறு, இயங்கிவருபவர்களையும்
நாம் அவதானித்து வருகின்றோம்.
அத்தகைய ஒருவராக எம்மத்தியில் அயராமல் இயங்கி வருபவர்தான் எழுத்தாளர்
ஆவூரான் சந்திரன்.
சில வருடங்களுக்கு முன்னர் இவரது ஆத்மாவைத் தொலைத்தவர்கள்
கதைத் தொகுதி, அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய
கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்தது. அதனை கொழும்பில்
ஞானம் இலக்கியப்பண்ணை அச்சில் பதிவேற்றி வழங்கியிருந்தது.
குறிப்பிட்ட நூல் அவுஸ்திரேலியா
மெல்பனிலும், சிட்னியிலும் அறிமுகம் கண்டது.
ஆவூரான், இலங்கையில் ஞானம், வீரகேசரி, தினக்குரல் இதழ்களிலும்
மற்றும் தமிழ் அவுஸ்திரேலியன் உட்பட சில புகலிட
இதழ்களிலும் எழுதி வந்திருப்பவர்.
கடந்த 25 வருடங்களுக்கும்
மேலாக அவுஸ்திரேலியா மெல்பனில் தமது குடும்பத்தினருடன் வாழ்ந்துவரும் ஆவூரான் சந்திரன்,
விக்ரோரியா இலங்கை தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்
குழு, தமிழ் அகதிகள் கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், கேசி
தமிழ் மன்றம் முதலான அமைப்புகளிலும் அர்ப்பணிப்போடு
இயங்கிவந்திருப்பவர்.
கேசி தமிழ் மன்றத்தின் சிறுவர் இலக்கிய இதழான இளவேனில்
ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தவர். இந்த
மன்றத்தின் தமிழ் முதியோர் அமைப்பிற்காக கொவிட் பெருந்தொற்று காலத்தில் மெய்நிகர் ஊடாக வானொலி நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்திருந்தார்.
ஆவூரானின் கதைகள், பிறந்த மண்ணின் வாசத்தையும்
புகலிட வாழ்வின் கோலங்களையும் சித்திரித்தவை. இன்றும் இவரது எழுத்துக்களில் இத்தகைய விட்டு விலகமுடியாத
உணர்வுகளையே காணமுடிகிறது.
அதனால்தான் புலம்பெயர்ந்து இருபத்தியைந்து வருடகாலமாகிய பின்னரும்,
பிறந்த ஊரின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றுதலின்
வெளிப்பாடாக அங்கு வாழும் ஏழைக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கு சில சீரிய திட்டங்களை
அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திவருகின்றார்.
ஆவூரான் சந்திரன் – உஷா கௌரி தம்பதியரின் பிள்ளைகள், துவாரகனும்
அபிதாரிணியும் மெல்பனில் பிறந்தவர்கள், தமிழ்ப்பாடசாலைக்குச்சென்று தமிழையும் ஒரு பாடமாகக்
கற்றவர்கள். அத்துடன் கலை நிகழ்ச்சிகளிலும் நாவன்மைப்போட்டிகளிலும் பங்கேற்று தங்கப்பதக்கம்
முதல் பல பரிசில்களும் பெற்றவர்கள்.
தனக்கிருக்கும் கலை, இலக்கிய ஆர்வம் தன்னோடு போய்விடக்கூடாது
என்பதில் மிகுந்த கவனமெடுத்திருக்கும் சந்திரன், தனது பிள்ளைகளையும் இந்தத் துறைகளில் ஆர்வத்துடன்
ஈடுபடவைத்து ஊக்கம் தருகின்றார்.
அவர்கள் இருவரும் மெல்பன் மிருதங்க கலைஞர் யோகன் கந்தசாமியின்
மாணவர்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு மிருதங்க அரங்கேற்றம் கண்டவர்கள்.
தமிழ் எழுத்தாளர் விழா மாணவர் அரங்குகளில் பங்கேற்றவர்கள். தவிர ஏனைய தமிழ் அமைப்புகளின் விழா நிகழ்ச்சிகளிலும்
இடம்பெறுபவர்கள்.
இவ்வாறு புதிய தலைமுறையினர்
ஆவூரானின் குடும்பத்திலிருந்து உருவாகி வருகிறார்கள்.
மணிவிழாக்காணும் படைப்பாளி ஆவூரான் சந்திரனுக்கு எமது மனமார்ந்த
வாழ்த்துக்கள். மலரும் 2023 புத்தாண்டின் தொடக்கத்தில் ஆவூரானின் புத்தம் புதிய
இலக்கியப்பிரதி மெல்பனில் வெளியீடு காணவிருக்கிறது.
---0----
No comments:
Post a Comment