உலகச் செய்திகள்

 கொவிட்-19: சீனர்கள் மீது பல நாடுகள் கட்டுப்பாடு

அமெரிக்க பனிப்புயல்; பலி 61 ஆக அதிகரிப்பு

ஆங் சான் சூகி மீது மேலும் 7 வருட சிறைத் தண்டனை விதிப்பு

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 11 வருட சிறைத் தண்டனை

ஜப்பான் தூதுவர் நம்பிக்கை

விலை வரம்பு நிர்ணயித்த நாடுகளுக்கு எண்ணெய் விற்பனைக்கு ரஷ்யா தடை

சீனாவுடன் நியூசிலாந்து வர்த்தகத் திட்டம்


கொவிட்-19: சீனர்கள் மீது பல நாடுகள் கட்டுப்பாடு

சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அந்நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

புதிய கொவிட் திரிபு பற்றி அமெரிக்கா தொடக்கம் ஜப்பான் வரை அச்சம் அடைந்துள்ளன. எனினும் இவ்வாறான புதிய திரிபு பற்றி இன்னும் உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை. புதிய தொற்று பரவல் தொடர்பில் சீனா வெளியுலகுக்கு போதிய தகவல்களை வெளியிடவில்லை.

முழுமையாகக் கொரோனா தொற்றை ஒழிக்கும் கொள்கையை சீனா கைவிட்டதை அடுத்து அந்நாட்டில் அதிகரித்து வரும் தொற்றுச் சம்பவங்கள் பற்றி உலக சுகாதார அமைப்பும் கவலை வெளியிட்டுள்ளது.

“சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து விளக்கம் அளிக்க அந்நாடு முன்வர வேண்டும். இது குறித்தான விரிவான தகவல்கள் எங்களுக்குத் தேவை. நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும் தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இத்தாலி, தென் கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 

 




அமெரிக்க பனிப்புயல்; பலி 61 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் பனிப்புயலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கு நியூயோர்க்கில் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயிர்ந்துள்ளது. இதில் 17 பேர் வெளியில் இருந்த நிலையில் உயிரிழந்திருப்பதோடு 11 பேர் வீடுகளிலும் நால்வர் கார்களுக்குள் இருந்த நிலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பனிப்புயலுடன் தொடர்புபட்ட கார் விபத்துகளில் ஒஹியோ மாநிலத்தில் ஒன்பது உயிழப்புகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவில் பாதிக்கும் அதிகமான மாநிலங்களில் பனிப்புயல் மற்றும் கடும் குளிர் தொடர்பில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நியூயோர்க்கில் வெப்பம் உயர்ந்து பனி உருகி வரும் நிலையில் வெள்ளம் ஏற்படும் அபாயம் பற்றியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





ஆங் சான் சூகி மீது மேலும் 7 வருட சிறைத் தண்டனை விதிப்பு

- இது வரை அவர் மீது 33 வருட சிறைத் தண்டனை விதிப்பு

இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சான் சூகிக்கு (Aung San Suu Kyi) இதுவரை 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் பதவி கவிழ்ப்பு செய்து கடந்த 2021 பெப்ரவரியில் ஆங் சான் சூகி உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களை சிறையில் வைத்துள்ள இராணுவம், இதற்கு முன்ன இடம்பெற்ற வழக்குகளில் அவர் மீது தேசத்துரோகம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 இல் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவம் அவரது அரசாங்கத்தை அகற்றியதிலிருந்து நாட்டின் முன்னாள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அப்போதிருந்து, அவர் 18 மாதங்கள் 19 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார் - இது ஒரு போலி குற்றச்சாட்டு என சமூக உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

அவரை விடுதலை செய்யுமாறு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது.

இன்று (30) அவர் எதிர்கொண்ட கடைசி ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அமைச்சர் ஒருவர் ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அவர் பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொவிட் பொது பாதுகாப்பு விதிகளை மீறியமை, வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்தமை, உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 14 வெவ்வேறு குற்றங்களுக்காக அவருக்கு ஏற்கனவே 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட எந்தவொரு நபரும் அனுமதிக்கப்படாமல் இடம்பெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது இடம்பெற்ற விபரங்களை வெளியில் சொல்வதற்கு சூகியின் சட்டத்தரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

77 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி, தலைநகர் நே பை தாவில் (Nay Pyi Taw) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் (பர்மா) கூற்றுப்படி, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600 இற்கும் மேற்பட்டவர்களில் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 13,000 பேர் சிறையில் உள்ளனர்.

கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், மியான்மரில் வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கூறியது. சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் இருந்து விலகியதோடு, தீர்மானத்தின் வார்த்தைகளில் திருத்தங்களைத் தொடர்ந்து அந்நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகி மீதான "இடைவிடாத சட்டரீதியான தாக்குதல்", "எதிரிகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட அல்லது கேலிக்கூத்தான குற்றச்சாட்டுகளை கொண்டு வருவதற்கு இராணுவம் நீதிமன்றங்களை எவ்வாறு ஆயுதமாக்கியுள்ளது" என்பதைக் காட்டுகிறது என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை  தெரிவித்திருந்தது.

கடந்த பெப்ரவரியில் இராணுவத்தால் மியன்மார் அதிகாரத்தை வன்முறையாகக் கைப்பற்றியதை தொடர்ந்து அதற்கு எதிராக பொதுமக்களால் பரவலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் விளையவாக மியன்மர் இராணுவம், ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.

இது இராணுவம் மற்றும் இராணுவ ஆட்சியாளர்களை எதிர்க்கும் சிவிலியன் படையான தனி இன கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே புதிய உள்நாட்டு சண்டையையும் தூண்டியது.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் பொதுமக்கள் தங்கியுள்ள கிராமங்கள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக இராணுவ ஆட்சிக்குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரையில் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்திய அடக்குமுறையில் 2,600 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    நன்றி தினகரன் 





மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 11 வருட சிறைத் தண்டனை

- எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு
- இந்தியாவின் தலையீடு உள்ளதாகவும் அவரது கட்சி குற்றச்சாட்டு

ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமொன்றிடம் இருந்து இலஞ்சம் பெற்றமை தொடர்பான ஊழல் மற்றும் பணதூய்மையாக்கல் மோசடி குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 11 வருட சிறைத் தண்டனையும் 5 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து மாலத்தீவு குற்றவியல் நீதிமன்றம் நேற்று (25) தீர்ப்பளித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த தேர்தலுக்கான மாலைதீவு எதிர்க்கட்சியான மாலைதீவு முற்போக்குக் கட்சி (PPM) வேட்பாளர் யமீன், மாலைதீவு குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாஃபுஷி (Maafushi) தீவில் உள்ள சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் 1 மில்லியன் டொலர் அரச நிதியை மோசடி செய்ததற்காக 2019 இல் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு 5 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுலா விடுதி மேம்பாட்டு அனுமதிப்பத்திர குத்தகை தொடர்பான மோசடி வழக்கிலேயே அவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

தண்டனைக்குப் பிறகு யமீன் 2020 இல் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார் அதன் பின்னர் சில மாதங்களில் விடுவிக்கப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் சர்வாதிகாரி என அறியப்படும் மௌமூன் அப்துல் கையூமின் ஒன்றுவிட்ட சகோதரரான யமீன், மாலைதீவில் இந்திய செல்வாக்கிற்கு எதிரான பிரசாரத்துடன் தீவிர அரசியலுக்கு திரும்பினார். இது இந்தியாவுக்கு பாரிய பிரச்சினையாக அமைந்தது.

எதிர்த்து மேன்முறையீடு
இந்நிலையில் குறித்த தீர்ப்புக்கு எதிராக  கூடிய விரைவில் யமீன் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியான 63 வயதான யமீன், எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறையில் உள்ள விசேட வளாகத்தில் தனது சிறைத்தண்டனையை அனுபவிக்கவுள்ளார். இது முன்னர் ஏனைய உயர்மட்ட அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க பயன்படுத்தப்பட்ட வளாகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

யமீனின் சட்டக் குழுவை வழிநடத்தும் மாலைதீவு முன்னாள் உப ஜனாதிபதி மொஹமட் ஜமீல் அஹமட், குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாமதமின்றி மேல்முறையீடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் அதன் தீர்ப்பையோ அல்லது வழக்கு அறிக்கையையோ சமர்ப்பிக்காமல் குற்றவாளி என்ற தீர்ப்பை வழங்கியிருப்பது மிகவும் அபத்தமானது, என்று ஜெமீல் கூறியுள்ளார், பிரதிவாதி தரப்புக்கு இன்னும் முழுமையான எழுத்துபூர்வமான தீர்ப்பு வழங்கப்படவில்லை யெனவும் அவர குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு பிரதியின் தாமதம் காரணமாக, எமது அரசியலமைப்பின் 56ஆவது பிரிவின் கீழ் ஒரு அடிப்படை உரிமையான மேன்முறையீட்டை தாக்கல் செய்வதில் இருந்து சட்டம் முடங்கியுள்ளதால், ஏற்கனவே சட்டம் மீறல் நடந்துள்ளதே என்பதே எமது கவலையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை யமீனின் தண்டனைக்கு எதிராக PPM கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்ததோடு, இதில் 16 பேரை பொலிசார் கைது செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். கட்சி தனது போராட்டங்களைத் தொடரும் என்று அக்கட்சி அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை மற்றும் தீர்ப்பு எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிரான அரசியல் சூட்சி வேட்டை என நாம் மீண்டும் நம்புகிறோம். அவரை உடனடியாக மற்றும் நிபந்தனையற்ற விடுதலைக்கு அழைப்பு விடுக்கிறோம், என PPM கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2019 இல் ஆட்சியை இழந்த யமீன், மீண்டும் 2023 தேர்தலில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 இல் மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அப்துல்லா யமீன், தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹமது சோலியிடம் தோல்விகண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பெருங்கடலில் மூலோபாய கப்பல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள மாலைதீவானது, பிராந்தியத்தில் செல்வாக்கின் அடிப்படையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியின் மையப் புள்ளியாக கருதப்படுகின்றது.

யமீன் மீதான விசாரணையின் போது நீதித்துறை நடைமுறையில் இந்தியா நேரடியாக தலையிட்டதாகவும் PPM கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இக்கருத்து தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





ஜப்பான் தூதுவர் நம்பிக்கை

ஜப்பான் – இந்திய புல்லட் ரயில் திட்டம் நிறைவடையும்போது அதிவேக ரயில் புரட்சியை ஏற்படுத்தும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் தூதுவர் ஹிரோஷி சுசுக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த அதிவேக ரயில் திட்டத்திற்காக இந்தியா மற்றும் ஜப்பான் ஊழியர்கள் ஓர் அணியாக உற்சாகத்துடன் செயற்படுவதை அவர் வரவேற்றுள்ளார். மும்பை – அஹமதாபாத் அதிவேக ரயில் திட்டத்திற்கு ஜப்பான் அரசு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





விலை வரம்பு நிர்ணயித்த நாடுகளுக்கு எண்ணெய் விற்பனைக்கு ரஷ்யா தடை

மேற்கத்திய நாடுகள் இம்மாத ஆரம்பத்தில் நிர்ணயித்த விலை வரம்பை பின்பற்றும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரஷ்யா எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

ஜி7 நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே இணக்கம் எட்டப்பட்ட இந்த எண்ணெய் விலைவரம்பு கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி அமுலுக்கு வந்தது.

இதன்படி ரஷ்ய எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு தலா 60 டொலருக்கு மேல் செலுத்துவதற்கு இந்த விலைவரம்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விலை வரம்பை செயற்படுத்தும் எந்த ஒரு நாட்டுக்கும் எண்ணெய் மற்றும் எண்ணெய் உற்பத்திகள் விற்கப்படமாட்டாது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

வரும் பெப்ரவரி 1ஆம் திகதி தொடக்கம் ஜூலை 1ஆம் திகதி வரை ஐந்து மாதங்களுக்கு இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தடைக்கு உட்பட்டிருக்கும் நாடுகளுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சிறப்பு அனுமதியுடன் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைக்கும் முயற்சியாகவே இந்த விலைவரம்பு கொண்டுவரப்பட்டது. இதில் ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய டாங்கர்கள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை பயன்படுத்தி ரஷ்ய எண்ணெயை வாங்கும்போதும் இந்த விலை வரம்பு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பதில் நடவடிக்கையாகவே மேற்கத்திய நாடுகளிடையே இது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டது.

எனினும் ஏற்கனவே சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில் புதிய தடை அதில் மேலும் பாதிப்பை செலுத்தக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சவூதி அரேபியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ள ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறு சர்வதேச வலுசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை செலுத்துவதாக அமையும்.   நன்றி தினகரன்  





சீனாவுடன் நியூசிலாந்து வர்த்தகத் திட்டம்


பசுபிக் பிராந்தியத்தில் சீனா அதிக உறுதி நிலையை அடைந்துள்ளது என்று நியூசிலாந்து பிரதமர் ஜசின்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு விஜயம் செய்யவிருப்பதற்கான தமது நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், அடுத்தாண்டு தொடக்கத்தில் வர்த்தக தூதுக்குழுவொன்றின் பயணத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் கலந்துரையாடியுள்ளார். அத்திட்டத்தை சீன ஜனாதிபதி வரவேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அவுஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் ஆகிய ஊடகங்களுடனான கூட்டு நேர்காணலின் போது இவ்வாறு கூறிய அவர், ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் தலைமையில் சமீபத்திய ஆண்டுகளில் சீனா பெரிதும் முன்னேற்றமடைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.   நன்றி தினகரன் 


No comments: