இலங்கையில் வடக்கையும், கிழக்கையும் மற்றும் மலையகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளின் உண்மையான சுயரூபம் தேர்தல் காலங்களில்தான் தெரியவருகிறது.
தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காகத்தான் தொடர்ந்தும் போராடி
வருகின்றோம் எனச்சொல்லும் இக்கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், கட்சிகளை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் எம். பி. க்கள் இதுவரையில் தாங்கள் சாதித்திருப்பது என்ன…? என்பது பற்றி என்றைக்காவது தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்திருக்கிறார்களா..?
ஆலயங்களில் உற்சவங்களுக்காக
கொடியேறிவிட்டால் அதன்பிறகு வரும் திருவிழாக்கள் களை கட்டத் தொடங்கிவிடும்.
அப்போது யார் ( உபயகாரர் )
நடத்திய திருவிழா அதிவிசேடமானது என பக்தர்கள் பேசத் தொடங்கிவிடுவார்கள்.
பக்தி வருமோ இல்லையோ மக்களை
பரவசப்படுத்துவதற்காக அந்தத் திருவிழா உபயகாரர்கள் “ கெத்து “ காட்டத் தொடங்கிவிடுவார்கள்.
இலங்கையில் ஏதேனும் ஒரு
தேர்தல் நடக்கப்போகிறது என்ற அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் அறிவித்துவிட்டாராயின் வேடிக்கைகள்
பலவற்றை நாம் பார்க்க முடியும்.
அதனால், தேர்தல் என்பதும் ஒருவகையில் திருவிழாதான்!.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கா,
தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்திப்புக்கு
அழைப்புவிடுக்கத் தொடங்கியவுடனேயே எங்கள் தமிழ்க்கட்சிகளின் சுயரூபம் தெரியத் தொடங்கிவிட்டது.
இலங்கை அரசியலில் நரி என
வர்ணிக்கப்பட்ட ஜே. ஆர். ஜெயவர்தனாவின் வாரிசாகவே வர்ணிக்கப்படும் இன்றைய ஜனாதிபதி
ரணில், தொடங்கியிருக்கும் பேச்சுவார்த்தையின்
மூலம், “ தமிழ் மக்களே… எனது அழைப்பினை, நீங்கள் ஆதரிக்கும் உங்கள் தமிழ் அரசியல் கட்சிகள்
எவ்வாறு உள்வாங்கியிருக்கின்றன.!? “ என்பதை இதோ பாருங்கள்…! “ என்று ஊடகங்களின் ஊடாகவே காண்பித்துவிட்டார்.
முதலில் நடக்கவிருப்பதாக
பேசப்படும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே தமிழ் அரசியல் கட்சிகளின் உள்குத்து வேலைகள் தொடங்கிவிட்டன.
2023 ஆம் ஆண்டு பிறந்து மேமாதம் வந்துவிட்டால், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருந்த தமிழ் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பதினான்கு வருடங்களாகிவிடும். இக்காலப்பகுதியில் வடக்கில் எத்தனை கட்சிகள்? இருக்கின்றன…? என்று அவற்றுக்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் தமிழ் மக்கள் சிந்தித்து பார்த்திருக்கிறார்களா…? நினைவூட்டுவதற்காக சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றோம். எண்ணிக்கொள்ளுங்கள்:
ஆனந்தசங்கரிக்கு ஒரு கட்சி.
சம்பந்தனுக்கு ஒரு கட்சி.
விக்னேஸ்வரனுக்கு ஒரு கட்சி.
கஜேந்திரகுமாருக்கு ஒரு கட்சி.
சிவாஜிலிங்கத்திற்கு ஒரு கட்சி.
அனந்தி சசிதரனுக்கு ஒரு கட்சி.
டக்ளஸுக்கு ஒரு கட்சி.
அங்கஜனுக்கு ஒரு கட்சி.
வரதராஜப்பெருமாளுக்கு ஒரு கட்சி.
முருகேசு சந்திரகுமாருக்கு ஒரு கட்சி.
தருமலிங்கம் சித்தார்த்தனுக்கு ஒரு
கட்சி.
செல்வம் அடைக்கலநாதனுக்கு ஒரு
கட்சி.
சுரேஷ் பிரேமசந்திரனுக்கு ஒரு கட்சி.
பொ. ஐங்கரநேசனுக்கு ஒரு கட்சி.
இவை தவிர, தேர்தல் திகதி
அறிவிக்கப்பட்டவுடன் தோன்றும் சில தமிழ் சுயேட்சைக்குழுக்களும்
இருக்கின்றன!
இந்த ஈழ அரசியல் சார்ந்த
தமிழ்க் கட்சிகளின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் நன்கு புரிந்துகொண்டிருப்பவர்தான்
இன்றைய ஜனாதிபதி. அதனால், “ தான் எப்போதும் தமிழர் பிரச்சினைக்காக பேசத்தயார் “ என்று
சர்வதேச சமூகத்திற்கு அவர் காண்பித்துக்கொண்டுதானிருக்கப்போகிறார்.
இது இவ்விதமிருக்க வடக்கில்
சில உள்ளுராட்சி மன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்டம் உள்குத்து விளையாட்டுக்களினால்
தோற்கடிக்கப்பட்டுள்ளன.
இந்தப்பின்னணிகளுடன்தான்
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா சொல்லியிருக்கும்
செய்தியை பார்க்கலாம்.
அண்மையில் மெய்நிகர் ஊடாக
( Zoom Meeting ) நடந்த தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில்,
அவர் “ தேய்பிறையாக மாறி, அமாவாசை நோக்கிச்செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு “ என வர்ணித்திருக்கிறார்.
கூட்டமைப்பின் பிரதான பங்காளிக்கட்சியான
தமிழரசுக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதிநிதியான அவர், சிறிய புள்ளி விபரத்தையும்
காண்பித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில்
கூட்டமைப்பின் சார்பில் 22 பேரும், பின்னர் 16 பேரும் தற்போது 10 பேரும் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர் என்பதே அவர்
சுட்டிக்காண்பிக்கும் புள்ளிவிபரம்.
வடமாகாண சபைத் தேர்தல்
முன்னர் அறிவிக்கப்பட்டபோது, கூட்டமைப்பின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டு அதன் தலைவர்
பதவிக்கு வந்தவர்தான் முன்னாள் நீதியரசர் சி.
வி. விக்னேஸ்வரன். பின்னர் என்ன நடந்தது..? என்பதை இங்கே நினைவுபடுத்தவேண்டிய அவசியம்
இல்லை. அவர் வடக்கு மாகாண சபைக்கு “ குட்பை “ போட்டுவிட்டு கொழும்பிலிருக்கும் பாராளுமன்றத்திற்கு
வந்துவிட்டார்.
அவரால்தான் கடந்த தேர்தலில்
தனக்கு கிடைக்கவிருந்த எம்.பி. பதவியை இழக்க நேர்ந்தது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்
சரவணபவன்.
தான்தோற்றதற்கான காரணத்தை
வெளியே சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல்
தத்தளிப்பவர்தான் மாவை சேனாதிராசா.
இதே போன்று கடந்த தேர்தலில்
தனக்கு கிடைக்கவிருந்த ஆசனம், சுமந்திரனால்தான் பறிபோனது என்று சிறிது காலம் புலம்பிக்கொண்டிருந்தார்
சசிகலா ரவிராஜ்.
வடக்கு – கிழக்கில் 89 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது.
ஆனால், தமிழ் அரசியல் கட்சிகளின்
சார்பில் எத்தனை தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்…?
என்பதை இந்த ஆண் தலைவர்கள் என்றைக்காவது தங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுப் பார்த்திருக்கிறார்களா..?
விகிதாசார பிரதிநிதித்துவ
தேர்தல் முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்தனா, பல அரசியல் கட்சிகளின் தோற்றத்திற்கும்
வழிகோலியவர். அதனால்தான் தேசியப்பட்டியல் எம்.பி. உருவாகின்றார்.
அவ்வாறுகூட ஒரு பெண் பிரதிநிதியை
தெரிவுசெய்வதற்கு வக்கற்றுப்போன வங்குரோத்து அரசியலைத்தான் தொடர்ந்தும் இந்த தமிழ்
அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அனைத்துலக பெண்கள் தினம்
வந்துவிட்டால், இந்த ஆண் பிரதிநிதிகளின் வெத்துவேட்டுப்பேச்சுக்களை நாம் மேடைகளில்
பார்க்க முடியும்.
போர்க்காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின்
உறவுகள் தொடர்ச்சியாக நடத்திவரும் அறப்போரட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும்
பெண்கள்தான். அவர்களில் சிலர் ஏங்கி ஏங்கியே
உயிரையும் விட்டுவிட்டனர்.
தேர்தல்களின் மூலம் தெரிவாகுவோர்,
தாம் பிரதிநிதிகளாக செல்லும் இடங்களில் பெறும் ஆசனங்களை சூடாக்குவதைத்தவிர வேறு எதனையும்
உருப்படியாக செய்ததாக சரித்திரம் இல்லை.
இந்த அரசியலை எமது தமிழ்
மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கேற்ப இனிவரவிருக்கும் தேர்தல்களிலாவது தாங்கள்
என்ன செய்யவேண்டும்..? என்ற முடிவுக்கு வரவேண்டும்.
---0---
No comments:
Post a Comment