இலங்கைக்கு 1997 ஆம் ஆண்டு சென்றவேளையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு செல்லமுடியாதிருந்தமைக்கு அங்கிருந்த சூழ்நிலைகள்தான் காரணம்.
தலைநகரிலிருந்த இலக்கிய
நண்பர்களையும், கண்டியில் தலாத்து ஓயாவிலிருந்த மூத்த படைப்பாளி கே. கணேஷ் அவர்களையும்
மற்றும் தென்னிலங்கை இலக்கிய நண்பர்களையும் வீரகேசரி, தினகரன், தினக்குரல், இலங்கை
வானொலி, ரூபவாகினி தொலைக்காட்சி ஆகியனவற்றில்
பணியாற்றிய நண்பர்களையும் சந்தித்தேன்.
கணேஷ், கண்டியில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருந்த கவிஞர்
பண்ணாமத்து கவிராயரிடம் அழைத்துச்சென்றார்.
எழுத்தாளர் கணேஷ் ஈழத்தின்
மூத்த எழுத்தாளர். சுவாமி விபுலானந்த அடிகளார், பிரபல சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரம சிங்கா ஆகியோருடன்
இணைந்து அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தவர். கே. ராமநாதனுடன் இணைந்து பாரதி
என்ற இலக்கிய சிற்றிதழையும் வெளியிட்டவர். அத்துடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
எனது மகன் முகுந்தனும்
அந்தப் பயணத்தில் இணைந்திருந்தமையால், அவனுக்கு
எனது நண்பர்கள் யார் என்பதும் தெரிந்திருந்தது.
கணேஷுடன் கண்டி தலதா மாளிகையை
சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தபோது, மகன் திடீரெனச்சொன்னான்.
“ அப்பா… உங்களுக்கு செல்லுமிடங்கள் எங்கும் நண்பர்கள்
இருக்கிறார்கள். அவ்வாறு நீங்கள் நண்பர்களை
தேடிக்கொள்வதற்கு என்ன காரணம்..? என்று யோசித்தேன். அதற்குக் காரணம் உங்கள் பொக்கட்டில் எப்போதும் இருக்கும் பேனைதான் என்று
புரிந்துகொண்டேன் “ மகனது இந்தப்பேச்சைக்கேட்ட நண்பர் கணேஷ் சிரித்தார்.
அவனது தலையுச்சியை முகர்ந்து முத்தமிட்டார்.
“ தம்பி… நீ சரியாகத்தான் சொல்கிறாய். பேனையால் எது எதுவெல்லாமோ செய்ய முடியும். பேனை நண்பர்களை உருவாக்கும். தேடியும் தரும்… இல்லாமலும் செய்துவிடும்
“ என்று அவனது கருத்தை ஆமோதித்த கணேஷ், “ தம்பி … நீ…. என்னவாக வருவதற்கு விரும்புகிறாய்..? “ எனக்கேட்டார்.
“ அங்கிள்…
நான் பைலட்டாக விரும்புகின்றேன். இரண்டு மூன்று
தடவைகள் விமானத்தில் பறந்துவிட்டேன். விமான நிலையங்களில் பைலட்களை பார்க்கும் போது எனக்கும்
அவர்களைப்போன்று வரவேண்டும் என்று ஆசை. “ என்றான்
மகன்.
“பைலட்டுக்குப் பயிற்சி பெறுவதற்கு நிறைய செலவாகுமே… “ என்றார் கணேஷ்.
“ அதனால் என்ன…? ஶ்ரீலங்காவில் அப்பாவின் அப்பாவால், இவரை, ஒரு எழுத்தாளனாக்க
மாத்திரம்தானே முடிந்தது. நான் அவுஸ்திரேலியாவில்
அப்பாவுடன் இருக்கிறேன். என்னை அப்பாவால் பைலட்டாக்க
முடியும்தானே…?! “
எனக்கும் கணேஷுக்கும் சிரிப்புக்கு மேல் சிரிப்பு வந்தது.
பைலட் கனவோடு வாழ்ந்த எனது மகன், பின்னாளில் அவுஸ்திரேலியா பாதுகாப்புத்துறையில் ( இராணுவத்தில் ) பணியாற்றினான். !
கண்டி தலாத்து ஓயாவில்
கணேஷின் இல்லத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். கணேஷ் தம்பதியர் எம்மை அன்போடு உபசரித்தனர்.
நாம் ஊர் திரும்பும்போது
அவர் மிளகு பொட்டலம் தந்துவிட்டார். அவரது தோட்டத்தில் விளைந்த பயிர்.
வத்தளையில் நண்பர் தௌிவத்தை
ஜோசப்பை பார்க்கச்சென்றிருந்தேன். மகனும் உடன் வந்தான். நான் வரவிருக்கும் தகவலை அவர் முக்கியமான ஒரு அன்பருக்கு எனக்குத் தெரியாமலேயே
அறிவித்திருக்கிறார்.
அந்த அன்பரும் தலாத்து
ஓயா கணேஷின் நண்பர். தெளிவத்தையிடம் நான் வருவதை
அறிந்த அந்த அன்பர், எனக்கு இன்ப அதிர்ச்சியூட்டுவதற்காக, என்னிடம் முதலிலேயே சொல்லவேண்டாம்
என்றிருக்கிறார்.
அக்காலப்பகுதியில் நண்பர் தெளிவத்தை கொழும்பு பிரதான வீதியில் நடந்துசென்றபோது,
ஒரு வாகனம் அவரை மோதிவிட்டது. அந்த வாகனத்தின் சில்லு அவரது காலை நசித்துவிட்டதனால், கட்டுப்போட்டுக்கொண்டு வீட்டில் ஓய்வாக இருந்தார்.
நானும் மகனும் தெளிவத்தையை
பார்க்கச்சென்றோம். அவ்வேளையில் அவரது சுக
நலன் விசாரிப்பதற்காக அவர் முன்னர் பணியாற்றிய
Modern Confectionary Works Ltd நிறுவனத்தின்
இயக்குநர் சபையைச் சேர்ந்த ஒருவரும் வந்துவிட்டார்.
அப்போது தெளிவத்தைக்கு
அந்த நிறுவனம் மீது சற்று ஏமாற்றமிருந்தது.
1983 கலவரத்துடன் அந்த நிறுவனம் செயல் இழந்திருந்தது. அத்துடன் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்குத் தரப்படவேண்டிய
சேமலாப நிதியும் வழங்கப்படாமல் இழுபறியிலிருந்தது.
தெளிவத்தை அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக
உழைத்தவர். அத்துடன் நிருவாக இயக்குநர்களுடன் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை பேசுபவராகவும் இருந்தார். சுருக்கமாகச் சொல்வதாயின் ஊழியர்களுக்கும் நிருவாகத்திற்கும் இடையில் தெளிவத்தை ஒரு பாலமாகவே இயங்கியவர்.
தெளிவத்தை தனது இலக்கிய,
ஊடக நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது,
அங்கிருக்கும் குழந்தைகளுக்கு தமது நிறுவனத்தின்
உற்பத்தியான ஸ்டார் பிராண்ட் டொபி பக்கட்டுகள்
எடுத்துச்செல்வதும் வழக்கம். நான் இலங்கையில்
வாழ்ந்த காலப்பகுதியில் எங்கள் வீட்டுக்கு அவர் வரும்போதும் குறிப்பிட்ட ஸ்டார் டொபி
பக்கட்டுகளுடன்தான் வருவார்.
அதனால், அவருக்கு எனது
குழந்தைகளும், பத்திரிகையாளர்
( அமரர் ) கார்மேகம், மற்றும் மாத்தளை செல்வா என்ற நண்பர் விக்கிரமசிங்காவின்
குழந்தைகளும் அவரை டொபி மாமா என்றே பெயர் சூட்டி
மகிழ்ந்தார்கள். இந்த இனிமையான டொபி மாமா, அண்மையில் மறைந்துவிட்டார்.
அன்று நானும் மகனும் தெளிவத்தை
வீட்டுக்குச்சென்ற சமயம் திடீரென வந்து என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் தோழர்
பி. இராமநாதன். இவர் இலங்கையில் மூத்த இடதுசாரி.
இலக்கிய ஆர்வலர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி ஏட்டின் ஆசிரியர்
குழுவிலும் அங்கம் வகித்தார்.
தெளிவத்தையிடமும் ராமநாதனிடமும், மகன் முகுந்தன்
கண்டியில் வைத்து சொன்ன பேனைதான் எனக்கு நண்பர்களைத்
தேடித்தந்தது என்ற செய்தியை கூறினேன்.
ராமநாதன், மகனை அருகே அழைத்து, தம்பி, பேனை மாத்திரம் இருந்தால் போதாது. நல்ல மனமும் இருக்கவேண்டும். இதோ பார், தொலைவிலிருந்து உனது அப்பாவைத் தேடி வந்துள்ளேன்.
ஏன்…? எனக்கேட்டார்.
மகன் எனது முகத்தை ஊடுறுவிப்பார்த்தான். தோழர் ராமநாதனின் மனைவி சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவில் தட்டச்சாளராக
பணியாற்றியவர்.
அங்கிருந்துதான் சோவியத்
நாடு, சோஷலிஸம் : தத்துவமும் நடைமுறையும் முதலான இதழ்கள் வௌிவந்தன.
இங்குதான் எழுத்தாளர்கள்
பிரேம்ஜி ஞானசுந்தரன், பிரேம்ஜியின் மனைவி கமலி அக்கா, லத்தீஃப் , லத்தீஃபின் மனைவி, யாதவன் என்ற புனைபெயரில்
எழுதிய இராஜகுலேந்திரன், மு. கனகராசன், ராஜஶ்ரீகாந்தன்,
பெரி. சண்முகநாதன், ( லண்டன் தமிழ் ரைம்ஸ்
இராசநாயகத்தின் தம்பி ) சிங்கள எழுத்தாளரும் தொலைக்காட்சி நாடக கதாசிரியரும் இயக்குநருமான
சுமித்ரா ராகுபத்த ஆகியோரும் பணியாற்றினார்கள்.
இவர்களில் சிலரை மாத்திரம்
சந்திக்க முடிந்தது.
ராஜஶ்ரீகாந்தன் , மு. கனகராசன்,
சிவா சுப்பிரமணியம் ஆகியோர் தினகரனிலும், வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய வீ. தனபாலசிங்கம், ஆர். பாரதி, தேவகௌரி ஆகியோர்
தினக்குரலிலும் நண்பர் வன்னியகுலம் ரூபவாகினியிலும், கந்தையா குமாரதாசன் இலங்கை வானொலியிலும்
பணியாற்றினார்கள்.
எங்கள் ஊருக்குச் சமீபமாக
கம்பகா மாவட்டத்தில் உடுகம்பொல – கொரஸ கிராமத்தில் ஶ்ரீசுதர்மானந்த விகாராதிபதி வண.
பண்டிதர் ரத்னவன்ஸ தேரோவையும் சந்தித்தேன். அச்சமயம் அவர் தனது கண்பார்வையை முற்றாக
இழந்திருந்தார்.
அவருடனான அன்றைய சந்திப்பு
பற்றி, தினகரன் வாரமஞ்சரியில் விரிவாக எழுதினேன். எனது மனப்புண்கள் சிறுகதையை சமாந்தரங்கள்
தொகுதியிலிருந்து படித்த இலக்கிய நண்பர்கள் தெனகம ஶ்ரீவர்தனவும் எம். எச். எம். ஷம்ஸும்
இணைந்து சிங்களத்தில் மொழிபெயர்த்து ஏரிக்கரை இல்லத்திலிருந்து வெளியான சிலுமின வார
இதழில் வெளியிட்டனர்.
இலங்கை வானொலி கலையகத்திற்கு என்னை அழைத்த நண்பர்கள் கந்தையா குமாரதாசனும் ,
தம்பிஐயா தேவதாஸும் தனித்தனியாக நேர்கண்டு ஒலிபரப்பினார்கள்.
அக்காலப்பகுதியில் ரூபவாகினி
தமிழ்ச் சேவை பணிப்பாளராக பணியாற்றிய நண்பர் வன்னியகுலம் பண்டாரகமவில் வசித்த இலக்கிய
நண்பர் திக்குவல்லை கமாலை கொழும்புக்கு அழைத்து என்னுடனான நேர்காணலை பதிவு செய்து தொலைக்காட்சியில்
ஒளிபரப்பினார்.
அந்த நிகழ்ச்சியை மாத்தளைக்கு
சென்றவிடத்தில் அங்கிருந்த மற்றும் ஒரு இலக்கிய
நண்பர் மாத்தளை வடிவேலன் இல்லத்திலிருந்து
பார்த்து ரசித்தேன்.
அந்தப்பயணத்தின்போது வெள்ளவத்தை
இராமகிருஷ்ண மண்டபத்தில் கம்பன் விழா நான்கு நாட்கள் நடந்தன. அங்கு சென்று பல கலை, இலக்கிய , ஊடக நண்பர்களை சந்தித்தேன்.
அந்த விழாவுக்கு வருகை
தந்திருந்த நெல்லை கண்ணனுடன் மதிய உணவு இடைவேளைக்குப்பின்னர் சற்று நேரம் உரையாடினேன். கண்ணனுக்கு திருநெல்வேலி பெருமாள்புரத்தில் அச்சமயம்
வசித்த எங்கள் அப்பா வழி உறவினரான தாத்தா-
பாரதி இயல் ஆய்வாளர் தொ. மு. சி. ரகுநாதனையும், அவரது மருமகள் ( எங்கள் அண்ணி ) மாலதி ஹரீந்திரனையும் நன்கு தெரிந்திருந்தது.
மாலதி திருநெல்வேலியில்
ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர்.
அத்துடன் கவிஞர். இவரது கவிதை நூலுக்கு கவியரசு கண்ணதாசன் அணிந்துரை எழுதியிருக்கிறார்.
அன்றைய கம்பன் விழாவில்
நெல்லை கண்ணன் தலைமையில் நிறங்கள் என்ற தலைப்பில் அருமையான கவியரங்கம் நடந்தது.
அமைச்சர் அஷ்ரப் அன்று பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் இராமகிருஷ்ண மண்டபத்திற்கு
வருகை தருவதற்கு முன்னர் அவரது மெய்க்காப்பாளர்கள் சிலர் அங்கே வந்து மேடையிலிருந்த
பூச்சாடிகள் முதல் ஆசனங்கள் எங்கும் துருவித்துருவி ஆராய்ந்தனர்.
நான் எனது பேக்கை ஒரு ஆசனத்தில்
வைத்துவிட்டு வெளியே வந்து மல்லிகை ஜீவாவுடனும், எழுத்தாளர் யோகா பாலச்சந்திரனுடனும்
பேசிக்கொண்டிருந்தேன். அப்போது மாலைப்பொழுது. நிகழ்ச்சி ஆரம்பித்திருக்கவில்லை.
எனது பேக் இருந்த ஆசனத்திற்கு
அருகில் அமர்ந்திருந்த எனது தங்கையிடம் அந்த பேக் யாருடையது என்று அமைச்சர் அஷ்ரப்பின்
மெய்க்காப்பாளர் கேட்டார்.
தங்கை வெளியே ஓடிவந்து
என்னை உள்ளே அழைத்தார்.
நான் வந்து எனது பேக்கை
திறந்து காண்பித்த பின்னர் அந்த முஸ்லிம் மெய்க்காப்பாளர்
சிரித்துவிட்டு அகன்றார்.
பலத்த பாதுகாப்புடன் அன்று
கம்பன் விழாவுக்கு வருகை தந்த அமைச்சர் அஷ்ரப், பின்னாளில் 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உலங்கு வானூர்தியில் பயணிக்கும்போது நிகழ்ந்த விபத்தில்
கொல்லப்பட்டார்.
அவர் கொழும்பு சட்டக்கல்லூரியில்
1970 காலப்பகுதியில் படித்த காலத்திலிருந்து அறிவேன். 1983 தொடக்கத்தில் எமது முற்போக்கு
எழுத்தாளர் சங்கம் கல்முனையிலும், மட்டக்களப்பிலும் நடத்திய பாரதி நூற்றாண்டு விழாக்களிலும்
அவர் கலந்துகொண்டார்.
அவர் முழுநேர அரசியல்வாதியான
காலத்தில் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன்.
1997 ஆம் ஆண்டு நடந்த கம்பன்
விழாவில் மீண்டும் அவரைப் பார்த்ததுதான் இறுதிச்
சந்திப்பு.
விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்
அவருக்கிருந்தது. அதனால் அவர் செல்லுமிடமெங்கும் அவருக்கு முன்பே அவரது மெய்க்காப்பாளர்கள் வந்துவிடுவார்கள்.
காலன் அவரை வானத்தில் வைத்து
கவர்ந்து சென்றான்.
விதி வலியது.
அஷ்ரப் பற்றியும் நீண்ட
நினைவுப்பதிவு எழுதியிருக்கின்றேன்.
---0---
No comments:
Post a Comment