கந்தசஷ்டிப் பிரார்த்தனை

                        [ 1 ம் நாள் ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 





  பேரரக்கர் தனையழித்த பெருமானே போற்றி

  பாருலகில் பேரரக்கர் பெருகுகிறார் நாளும் 

  தீராத தொல்லையினை கொடுக்கின்றார் தினமும்

  சிவன்மைந்தா தீர்வுதந்து காத்துவிடு ஐயா 

 

  ஊர்சிறக்க உழைக்கின்றார் ஒன்றுங் கிடையாமல்


  உளமுடைந்து உணர்விளந்து உழலுகிறார் ஐயா

  பாருலகில் கலியெழுந்து ஆடுகிறான் கந்தா 

  பகையழித்த வேலவனே பொழிந்திடுவாய் கருணை 

 

  ஆலமதை உண்டானின் அழகு திருக்குமரா

  நீலமயில் நீயமர்ந்து எமக்கருள வேண்டும்

  சீலமுடை வாழ்வுதனை தந்திடுவாய் முருகா

  திருவடியே சரணமையா சிவானாரின் மைந்தா 

 

 

                          கந்தசஷ்டிப்  பிரார்த்தனை

                                [ 2 ம் நாள் ]



   வேதநெறி திருமுறைகள் வியந்துவிடும் முருகா 

   நாதனக்கே  ஆசானாய் ஆகிநின்ற முருகா 

   வாதமிடு குணமகல வழிசமைப்பாய் முருகா

   வையகத்தார் மனஞ்சிறக்க வைத்திடுவாய் முருகா 

 

    சோலைமலை எல்லாமே கோயில்கொண்டாய் முருகா

    சுவையான தமிழ்கேட்க துள்ளிவந்தாய் முருகா

    வாலைவள்ளி காதல்கொண்டு லீலைசெய்தாய் முருகா


    வடிவழகா வேலவனே வரமருள்வாய் முருகா 

 

    அருணகிரி தமிழ்பாட அருளிநின்றாய் முருகா

    அமுதத்தமிழ் அனைவரையும் பருகச்செய்தாய் முருகா

    திருமுறைகள் வரிசையிலே அமருகின்ற வகையில்

    திருப்புகழை அருளச்செய்தாய் திருக்குமாரா சரணம் 

         

 

                              கந்தசஷ்டிப்  பிரார்த்தனை

                                [ 3  ம் நாள் ]

 


     வேலேந்தி நிற்கின்ற வேலவனே போற்றி


     விண்ணவர்கள் துயர்தீர்த்த வேலவனே போற்றி 

     மாலயனும் காணவொணா சிவன்மைந்தா போற்றி

     மனவழுக்கைப் போக்கிடுவாய் வடிவழாகா போற்றி 

 

     தேனான திருநாமம் கொண்டவனே போற்றி

     திருக்கையில் வேலேந்தி நிற்பவனே போற்றி 

     வள்ளி தேவயானையுடன் அமர்ந்தவனே போற்றி

     மனமமர்ந்து நிற்கின்ற மால்மருகா போற்றி 

 

     ஈராறு கரமுடைய எழிலழகா போற்றி


     ஈனமுடை எண்ணமதை எரித்திடுவாய் போற்றி

     பாரமுடை பாவமூட்டை அழித்திடுவாய் போற்றி

     பரம்பொருளாம் சிவன்மைந்தா முருகையா போற்றி 

     

     

        கந்தசஷ்டிப்  பிரார்த்தனை

                                [ 4 ம் நாள் ]

                             

ஓமென்னும் பிரணவத்தின் உட்பொருளும் ஆவாய்

உலகுய்ய அவதாரம் எடுத்துவனும் ஆவாய்

தீமையெனும் இருள்சூழா காத்திடுவாய்  முருகா

தினந்தோறும் பரவுகின்றோம் திருவருள்தா முருகா 

 

அறமற்ற அரசியலார் ஆட்சி அமர்கின்றார்

ஆணவத்தை அகமிருத்தி அல்லல் கொடுக்கின்றார்

நீதியொடு நிதிதன்னில் ஊழல் நுழைக்கின்றார்

நெஞ்சுருக வேண்டுகிறோம் எமைக்காப்பாய் முருகா

 

ஆதியந்தம் இல்லாத அருட்சுடரே கந்தா 

அசுரரது செருக்கடக்கி அமரர்துயர் தீர்த்தாய்

பேதலித்து நிற்கின்ற அடியார் துயர்தீர்க்க

பெம்மானின் திருக்குமரா பேரருளைப் பொழிக



           கந்தசஷ்டிப்  பிரார்த்தனை

                                [ 5 ம் நாள் ]

  

பழமான முருகாநீ பழந்தேடி நின்றாய் 

பழனிப் பதியமர்ந்து பக்குவமாய் ஆனாய்

அழகான இருமாதர் அருகணைத்துக் கொண்டாய்

அரனாரின் திருக்குமரா திருவடியே சரணம் 

 

வண்ணமயக் காவடிகள் வருமுந்தன் வாசல் 

வாலைக் குமரியொடு வாலிபரும் வருவார்

எண்ணமெலாம் உன்நினைப்பை இருத்திவைக்கும் அடியார்

எழில்முருகா எனப்பாடி  ஏற்றிநிற்பார் உருகி 

 

கண்களிலே பரவசத்தைக் காட்டிநிற்கும் அடியார்

கைகூப்பி வேல்முருகா எனவுருகி அழைப்பார் 

மண்புரள வீதியிலே வருமடியார் கூட்டம்

மால்மருகா எனவுரைத்து உனைநினைத்து வருவார் 

 

 

                  கந்தசஷ்டிப் பிரார்த்தனை

                                [ 6 ம் நாள் ]

 


ஆறிரு தடந்தோள் ஐயா போற்றி 

அருமறை போற்றும் முருகா போற்றி

கூறுசெய் வடிவேல் குமரா போற்றி 

குன்றுகள் தோறும் அமர்ந்தாய் போற்றி 

 

மாறில்லா வள்ளி மணாளா போற்றி

மஞ்சையில் ஏறி வருவாய் போற்றி 

குக்குடக் கொடியை உடையாய் போற்றி

குவலயம் உய்ந்திட உதித்தவா போற்றி 

  

முருகா போற்றி மால்மருகா போற்றி

உருகிடும் அடியார் உளமுறைவாய் போற்றி

பொருதிடு குணத்தை ஒழிப்பாய் போற்றி

புவனமே போற்றிடும் குமரா போற்றிபோற்றி 

No comments: