இலங்கைச் செய்திகள்

வடக்கில் திடீரென அதிகரித்த போதைப் பொருள் பாவனை

தனுஷ்கோடியில் மேலும் 07 இலங்கையர் தஞ்சம்

இலங்கையின் நிலைமை மேலும் மோசமடையலாம்

குருந்தூர் மலை- வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் சுமுக தீர்வு

தமிழ் தரப்புகளை ஒன்றுபட அமைச்சர் டக்ளஸ் அழைப்பு


 வடக்கில் திடீரென அதிகரித்த போதைப் பொருள் பாவனை

தீவிர கவனம் செலுத்தி கடும் நடவடிக்கைக்கு டக்ளஸ் வலியுறுத்து

வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்குமாறும் கோரிக்ைக

வடக்கில் போதைப் பொருள் பாவனை அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதால் அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக அவசரமாக சிந்திக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் அதி தீவிரமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றன. எனவே இது தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளதுடன் அவசியமான சட்ட ஏற்பாடுகள் குறித்தும் அவசரமாக சிந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புனர்வாழ்வு நிலையமொன்று வடமாகாணத்தில் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

போதைப் பொருள் பாவனை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்ற நபர்களை, சிறைச்சாலைக்கு அனுப்பாமல், புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நீதவான் நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் முதலாவது கலந்துரையாடலிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ் விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

யாழ். விசேட, யாழ். குறூப் நிருபர்கள் - நன்றி தினகரன் 

தனுஷ்கோடியில் மேலும் 07 இலங்கையர் தஞ்சம்

இதுவரை தஞ்சமடைந்தோர் தொகை 188 ஆனது

திருகோணமலை, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 07 பேர் 02 குழந்தைகளுடன் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

படகில் அகதிகளை அழைத்து வந்தவர்கள் இராமேஸ்வரம்- தனுஷ்கோடிக்கிடையேயுள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரையில் அவர்களை இறக்கிவிட்டு திரும்பி சென்று விட்டனர்.

இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்ததாக ஜனார்த்தன் மற்றும் அவரது மனைவி தெரிவித்தனர்.

திருகோணமலை திருக்கடலூர் கோவிந்தன் வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜனார்த்தன்(வயது 29), அவரது மனைவி பிரவீனா (26), மகன்கள் சுதர்சன் (9), சுதிசன் (5) ஆகியோருடன் தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

இவர்கள் மன்னார் மாவட்டம் கள்ளப்பாடு என்ற இடத்திலிருந்து மூன்று இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு இராமேசுவரம் சென்றுள்ளனர்.

அதேபோன்று சனிக்கிழமை இந்தியக் கடலோரக் காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பல் தனுஷ்கோடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது மூன்றாம் மணல் திட்டில் 03 பேரையும் மீட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித் தெருவைச் சேர்ந்த ஜெ. சாந்தி (44), அவரது மகன் அஜந்தன் (18), மகள் சுரபி (11) என்பதும், தலைமன்னார் வந்த அவர்களை அங்கிருந்து படகு மூலம் ஆதாம் பாலம் மணல் திட்டு பகுதியில் உள்ள மூன்றாம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்டதும் தெரியவந்தது.

தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரத்துக்கு இதுவரை 188 இலங்கை தமிழர் அகதிகளாக வந்துள்ளனரென்பது குறிப்பிடத்தக்கது.

 திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது  -  நன்றி தினகரன் 

இலங்கையின் நிலைமை மேலும் மோசமடையலாம்

உலக உணவுத்திட்ட அமைப்பு எச்சரிக்கை

இலங்கையில் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 2022 ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரையான பருவத்தில் தொடர்ச்சியான உதவி இல்லாமல் நிலைமை மோசமடையக்கூடும் என்று உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

கொழும்பின் நகர்ப்புறங்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, உணவுப் பணவீக்கம், ஒகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மூன்று மாத காலத்திற்கு 1 மில்லியன் குழந்தைகளுக்கு பாடசாலை உணவை வழங்குவதற்காக, உலக உணவுத்திட்டம் 1,475 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 775 மெற்றிக் தொன் இரும்புச் சத்துள்ள அரிசியை பெற்றுள்ளது.

இந்தநிலையில் அவற்றின் விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படும். அத்துடன் அது அரசாங்கத்தின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு நேரடியாக கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

இதேவேளை ஊட்டசத்து உதவி தொடர்வதை உறுதி செய்வதற்காக, அரசாங்கத்தின் திரிபோஷ திட்டத்துக்கு மூலப்பொருட்களை (சோளம் மற்றும் சோயா) வழங்குவதற்கு அரசு மற்றும் நன்கொடையாளர்களுடன் இணைந்து செயற்படுவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.    நன்றி தினகரன் 

குருந்தூர் மலை- வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் சுமுக தீர்வு

நவம்பர் முதல் வாரத்தில் டக்ளஸ், விஜயதாச நேரில் விஜயம்

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி விவகாரங்களை சுமூகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜயதாஸ ராஜபக்‌ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது வாரத்தில் அந்த பகுதிகளுக்கான நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு நேற்று முன்தினம் (25) நடைபெற்றது.

இதன்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் தமிழ் மக்களின் வரலாற்று தொன்மைமிகு குருந்தூர்மலை, வெடுக்குநாரி ஆலயம் தொடர்பான விவகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இரு அமைச்சர்களும் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே, திருகோணேஸ்வர ஆலயத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் நேரடியாக சென்று, ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினை சம்பந்தப்பட்ட தரப்புக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 

தமிழ் தரப்புகளை ஒன்றுபட அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

அரசியல் சூழலை சரியாக பயன்படுத்தவும் கோரிக்கை

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியுமெனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

"தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோர் அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த அரசியல் சூழலை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறுகிய நலன்களையும், தேர்தல் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அனைத்து தமிழ் தரப்புக்களினதும் முயற்சிகள் மற்றும் தியாகங்களின் பலனாக கிடைத்த மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வரவேண்டும்.

அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் அதனைப் பாதுகாத்துக் கொண்டு, ஒவ்வொரு தரப்பினரும் தாங்கள் எதிர்பார்க்கின்ற அபிலாசைகளை வென்றெடுப்பது பற்றி சிந்திப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும்.

கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டதைப் போன்று, தற்போதைய அரசியல் சூழலையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்" எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 


No comments: