உலகச் செய்திகள்

வெள்ளையர் அல்லாத, இந்து மதத்தை சேர்ந்த முதல் இங்கிலாந்துப் பிரதமராக ரிஷி சுனக்

இத்தாலியின் முதல் பெண் பிரதமரானார் மெலோனி

உலகின் மிக அபாயகரமான தசாப்தம்: புட்டின் எச்சரிக்கை

தென் கொரியா Halloween கூட்ட நெரிசலில் சிக்கி மரணித்த 151 பேரில் இலங்கையரும் ஒருவர்

ட்விட்டரை கைப்பற்றினார் மஸ்க்

ஈரான் ஷியா தலத்தில் தாக்குதல்: 15 பேர் பலி


வெள்ளையர் அல்லாத, இந்து மதத்தை சேர்ந்த முதல் இங்கிலாந்துப் பிரதமராக ரிஷி சுனக்

பிரிட்டனில் ஏழு வாரங்களில் மூன்றாவது பிரதமராக நேற்று (25) உத்தியோகபூர்வமாக பதவியேற்ற ரிஷி சுனக், தமக்கு முன்னிருந்தவர்கள் தவறுகளை செய்ததாகவும் நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர பாடுபடுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

பதவியில் இருந்த பிரதமர் லிஸ் டிரஸ் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்ததை தொடர்ந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் மாளிகையில் மூன்றாம் சார்ல்ஸ் மன்னரிடமிருந்து சுனக் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

முதல் வெள்ளையரல்லாத மற்றும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவராக கடந்த திங்கட்கிழமை (24) ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக சுனக் தேர்வு செய்யப்பட்டார். 42 வயதான சுனக் பிரிட்டனில் 200 ஆண்டுகளில் பிரதமராக பதவி ஏற்கும் இளம் வயதானவர் என்றும் சாதனை படைத்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கு மன்னர் அழைப்பை ஏற்ற பின் பிரதமர் அலுவலகத்திற்கு திரும்பிய சுனக் அங்கு உரை ஒன்றை நிகழ்த்தினார். பிரிட்டன் தற்போது சிக்கலான ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக கூறிய அவர், கொவிட் காலக்கட்டத்துக்குப் பிந்திய பாதிப்புகள் நீடிப்பதாக தெரிவித்தார்.

ஒருசில தவறுகள் இழைக்கப்பட்டதாக அவர் கூறினார். அவை வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்றபோதும் தவறு தவறுதான் என்றார் அவர். அந்தத் தவறுகளைச் சரிசெய்யப்போவதாகத் சுனாக் வாக்களித்தார். சுனக், பிரிட்டன் எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி, கன்சர்வேட்டிவ் கட்சியின் உட்பூசல், பிளவுபட்டிருக்கும் பிரிட்டன் என்று பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராக செயற்பட்ட அனுபவம் பெற்றவராக சுனக் உள்ளார்.   நன்றி தினகரன் 





இத்தாலியின் முதல் பெண் பிரதமரானார் மெலோனி

நவ பாசிச பின்புலத்தைக் கொண்ட இத்தாலி சகோரர்கள் கட்சியின் தலைவர் கியோர்கியா மெலோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தாலியின் முதல் தீவிர வலதுசாரி பிரதமராக பதவி ஏற்றார்.

இத்தாலியின் முதல் பெண் பிரதமராகவே அவர் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி செர்கியோ மெட்டரெல்லா முன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஒரு நாளைக்கு முன்னரே அவருக்கு அரசு அமைக்கும்படி ஜனாதிபதி அழைப்புவிடுத்தார்.

2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சகோதரர்கள் கட்சி, வலதுசாரி லிகா கட்சி மற்றும் பழைமைவாத போர்சா இத்தாலி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. எனினும் முக்கிய அமைச்சர்களை பகிர்ந்து கொள்வதில் கூட்டணி கட்சிக்குள் முறுகல் நீடித்து வந்த நிலையிலேயே புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெலோனி தனது தேர்தல் பிரசாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போரினால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வலு சக்தி பிரச்சினை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் புதிய அரசு நாட்டில் அதிரடி மாற்றங்களை செய்வது கடினம் என்று கூறப்படுகிறது. சகோதரர்கள் கட்சி கடந்த செப்டெம்பர் பிற்பகுதியில் நடந்த பொதுத் தேர்தலில் 25 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கைப்பற்றி வெற்றியீட்டி இருந்தது.    நன்றி தினகரன் 






உலகின் மிக அபாயகரமான தசாப்தம்: புட்டின் எச்சரிக்கை

இரண்டாம் உலகப் போர் முடிவுக்குப் பின்னர் உலகம் மிக அபாயகரமான தசாப்தத்தை எதிர்கொண்டிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை விரி வான உரை ஒன்றை நிகழ்த்திய அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நியாயப்படுத்திய தோடு, இதனால் தமது நாடு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் இருந்து விலகிச் செல்ல மேற்குலகம் ரஷ்யாவுக்கு எதிரான அணு ஆயுத அச்சுறுத்தலை விடுப்பதாகவும் புட்டின் குறிப்பிட்டார். “உலக விவகாரங்களில் வரலாற்று ரீதியாக மேற்கின் பிளவுபடாத ஆதிக்க முடிவுக்கு வருகிறது” என்றும் சர்வதேச கொள்கை நிபுணர்களின் மாநாட்டில் உரையாற்றும்போது புட்டின் தெரிவித்தார்.

“நாம் வரலாற்று ரீதியாக எல்லை ஒன்றில் நின்றுகொண்டிருக்கிறோம்: மிக அபாயகரமான, எதிர்வுகூற முடியாத, அதேநேரம் இரண்டாம் உலகப் போர் முடிவின் பின்னராக முக்கியமான தசாப்தத்தை எதிர்கொண்டிருக்கிறோம்” என்று புட்டின் குறிப்பிட்டார்.

எனினும் புட்டினின் கருத்து புதிதல்ல என்றும் இது உக்ரைன் உட்பட அவரது மூலோபாயங்கள் மாறவில்லை என்பதை காட்டுவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.    நன்றி தினகரன் 





தென் கொரியா Halloween கூட்ட நெரிசலில் சிக்கி மரணித்த 151 பேரில் இலங்கையரும் ஒருவர்

- ஒடுக்கமான பாதையில் பாரிய அளவானோர் ஒன்றுகூடியதால் விபரீதம்
- மரணித்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும்

தென் கொரிய தலைநகர் சியோலில் நேற்றிரவு (29) இடம்பெற்ற 'Halloween' (ஹலோவீன்) எனப்படும் நிகழ்வில் பங்கேற்ற பாரிய அளவிலான கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு ஒடுக்கமான பாதையொன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகளவாள மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு யிரிழந்தவர்களில் 19 பேர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக, இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

27 வயதான குறித்த நபர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீனா, நோர்வே, ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மேலும் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்குவதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரியாவில் கொவிட்-19 கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் அந்நாட்டின் தலைநகர் சியோலில் இடம்பெற்ற முதல் நிகழ்வாக இது அமைந்திருந்ததனால், இதில் அதிகளவானோர் பங்குபற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் சுமார் 82 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கட்டுக்கடங்காமல் போனதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ஏற்பட்ட நெருக்கத்தில் கீழே வீழ்ந்த பலர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இரவு 10.20 மணியளவில் இந்நிகழ்வு உச்சத்தை தொட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தோரில் பலர் அங்கிருந்த இரவு நேர மதுபான விற்பனை கேளிக்கை கூடத்திற்கு அருகே இருந்தவர்கள் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதினரும் இளைஞர்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலம் ஒருவர் குறித்த மதுபான விற்பனை கேளிக்கை கூடத்திற்கு வந்ததைத் தொடர்ந்து கூட்டம் சூழ்ந்து கொண்டதால் இச்சம்பவம் ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மரணித்தவர்களை நினைவுகூரும் வகையில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் மீண்டும் திரும்பும் என்று நம்பப்படும் இந்நாளில், அந்த ஆவிகளைத் தடுக்க நெருப்பு மூட்டும் நிகழ்வாக ஹலோவீன் நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. இங்கு வேடிக்கையாக மக்கள் பல்வேறு பயங்கரமான பயமூட்டும் ஆடைகளை அணிந்து வெவ்வேறு வகையில் இந்நிகழ்வை கொண்டாடுவது வழக்கமாகும்.

நன்றி தினகரன் 






ட்விட்டரை கைப்பற்றினார் மஸ்க்

உலகின் பெரும் செல்வந்தரான இலோன் மஸ்க் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டர் சமூகதளத்தை வாங்குவதை பூர்த்தி செய்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் மஸ்க், “பறவை விடுவிக்கப்பட்டது” என்று ட்விட் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் தலைவர் பரக் அக்ரவால் உட்பட பல நிறைவேற்று உறுப்பினர்களும் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ட்விட்டர் மற்றும் மஸ்க்கிற்கு இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. பல பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்க சில மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்த மஸ்க், அதில் இருந்து வெளியேற முயன்ற நிலையில் ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றம் சென்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் நிறுவனத்தை மஸ்க் கையகப்படுத்தியதை ட்விட்டர் இன்னும் உறுதி செய்யாதபோதும், உடன்படிக்கை நிறைவு செய்யப்பட்டது என்று நிறுனத்தின் முதலீட்டாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கருத்துச் சுதந்திர தொடர்பில் தனித்துவ எண்ணத்தை கொண்டவர் என கருதப்படும் மஸ்க், ட்விட்டரின் மிதவாத கொள்கைகளை விமர்சித்து வந்தார். இந்நிலையில் அவர் ட்விட்டரை கைப்பற்றி இருப்பது ட்விட்டர் பயனர்கள் மற்றும் ஊழியர்களிடையே கலவையான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் அமெரிக்க அரசியலில் வலதுசாரிகள் அக்ரவாலின் வெளியேற்றத்தை கொண்டாடுவார்கள். மிதவாதிகளான அக்ரவால் மற்றும் அவருக்கு முன்னர் இருந்த ஜன் டோர்சே பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதாக அவர்கள் கருதுகின்றனர்.

பழைமைவாதக் குரலை ட்விட்டர் ஒடுக்குவதாக வலதுசாரிகள் குற்றம்சாட்டியபோதும் ட்விட்டர் அதனை மறுத்து வருகிறது.

அக்ரவாலுடன் தலைமை நிதி அதிகாரி நெட் செகால் மற்றும் நிறுவனத்தின் சட்டம் மற்றும் கொள்கை நிர்வாகி விஜெய் கட்டே ஆகியோர் தொடர்ந்தும் ட்விட்டரில் இல்லை என்று அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

உடன்படிக்கை பூர்த்தியானதை அடுத்து சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ட்விட்டர் தலைமையகத்தில் இருந்து அக்ரவால் மற்றும் செகால் இருவரும் வெளியேற்றப்பட்டனர் என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்ரவால், செகால் மற்றும் கட்டேவின் பங்களிப்புக்காக ட்விட்டர் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த நவம்பர் தொடக்கம் ட்விட்டர் தலைவராக பணியாற்றிய பிரெட் டெய்லர், தொடர்ந்தும் தான் அந்தப் பதவியில் இல்லை என்று தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை ட்விட்டர் சமூக ஊடகத்தின் பங்குகள் இடைநிறுத்தப்பட்டதாக நியூயோர்க் பங்குச் சந்தை இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

மனிதாபிமானத்திற்கு உதவ தாம் சமூக ஊடகத்தை வாங்கியதாகவும் பொதுவான டிஜிட்டல் மையம் ஒன்றை கொண்டுவர விரும்புவதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களை வழங்கியதற்காக ட்விட்டரில் தடை விதிக்கப்பட்ட பலரும் மீண்டும் அந்த சமூக ஊடகத்திற்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டர் தடையும் தொடர்ந்து நீடிக்கிறது. எனினும் இந்தத் தடை முட்டாள்தனமானது என்றும் மீளப்பெறப்பட வேண்டும் என்றும் மஸ்க் முன்னதாக கூறியிருந்தார்.

ட்விட்டர் பற்றிய தனது திட்டம் குறித்து பதிவிட்டிருந்த மஸ்க், அனைத்துக்குமான செயலியாக ட்விட்டரை மாற்றுவது பற்றி தெரிவித்தார்.

இது பெரும் வெற்றி அளித்திருக்கும் சீனாவின் செயலியான ‘விசாட்’ போக்கில் அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயலி செய்தியிடல், சமூக ஊடகம், கொடுப்பனவுகள் மற்றும் உணவு கோரல்கள் உட்பட பல்வேறு சேவைகளை வழங்குவதாக அமையும்.    நன்றி தினகரன் 




ஈரான் ஷியா தலத்தில் தாக்குதல்: 15 பேர் பலி

தெற்கு ஈரானின் முக்கிய ஷியா மதத் தலம் ஒன்றின் மீது நேற்றுமுன்தினம் புதன்கிழமை (26) நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு குழு பொறுப்பேற்றுள்ளது.

ஷிராஸ் நகரில் இருக்கும் இந்த மதத் தலத்தில் மாலை நேர தொழுகையின்போது ஆயுதம் ஏந்திய பயங்கரவாதி ஒருவர் நடத்திய இந்தத் தாக்குதலில் மேலும் 19 பேர் காயமடைந்ததாக ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மதத் தலத்தில் கூடியவர்கள் மீது தாக்குதல்தாரி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக உள்ளுர் ஆளுநர் முஹமது ஹாதி இமானி தெரிவித்தார்.

இந்த மதத் தலத்தில் எட்டாவது ஷியா இமாமான இமாம் ரோசாவின் சகோதரர் அஹமதின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 



No comments: