இரட்டைக் குடியுரிமையும் இரட்டை வேடமும் ! அவதானி


இந்தப்பதிவை எழுதுவதற்கு முன்னர், ஒரு குட்டிக் கதையை சொல்லிவிடலாம் போலத்தோன்றுகிறது.

இக்கதை முகநூல் சம்பந்தப்பட்டது.  இதனை எழுதும் தருணத்தில் தமிழ்நாடு சன் தெலைக்காட்சிக்காக பேராசிரியர் சலமன் பாப்பையாவின் தலைமையில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

செல்ஃபோனால், நன்மையா தீமையா..? என்பதுதான் தலைப்பு.

அதுபோன்று முகநூலினால் நன்மையா ? தீமையா..? என்றும்


இரட்டைக் குடியுரிமையால் நன்மையா..? தீமையா..? என்றும் பட்டிமன்றங்கள் நடத்தலாம்.

இனி,  சொல்லவேண்டிய குட்டிக்கதைக்கு வருகின்றோம்.

ஒரு  தமிழ் அன்பர், இலங்கையில் நீடித்திருந்த போர் நெருக்கடியினால்,  ஒரு ஏஜன்ஸி மூலம் நாட்டைவிட்டுச்சென்று,  வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்தார். அங்கு அகதியாக விண்ணப்பித்தார்.   அங்கிருந்த குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து, நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர் மனிதாபிமான அடிப்படையில் நிரந்தர வதிவிட அனுமதியை வழங்கியது. அதனை வைத்துக்கொண்டு அவர் கடுமையாக உழைத்து முன்னேறினார். புகலிடம் தந்த  நாட்டுக்கும் வரிசெலுத்தினார்.


சில வருடங்களில் அந்த நாட்டு குடியுரிமையும் பெற்று, அந்த நாட்டு கடவுச்சீட்டும் பெற்றார்.  தன்னால் இனிமேல் எந்த நாட்டில் வாழமுடியாது என்று முதலில் சொன்னாரோ, அதே தாய் நாட்டிற்கும் , அந்த புதிய கடவுச்சீட்டின் மூலம்  வந்து திரும்பினார்.

நீடித்த போர் முடிவுக்கு வந்ததும், இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என கருதியதும், பெருந்தொகை பணத்தையும் அதற்காக செலவிட்டு, இரட்டைக் குடியுரிமையும் பெற்றுக்கொண்டார்.

அதனால் அவருக்கு பல நன்மைகள் விளைந்தன.  வெளிநாட்டு குடியுரிமையுடன் தாயகம் சென்றால் ஒரு மாதம்தான் விசா தருவார்கள். இரட்டைக் குடியுரிமையுடன் சென்றால், கூடுதல் மாதம் நின்று திரும்பலாம். இலங்கை குடிவரவு திணைக்களத்திற்கும் கட்டணம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. 

மற்றும் ஒரு தடவை அந்த இரட்டைக்குடியுரிமை பெற்ற அன்பர் தாயகம் சென்றார். அவரது நண்பர் ஒருவர் ஒரு உல்லாசப்பயணிகள் தங்குமிட விடுதி கட்டி முடித்து, அதன் திறப்புவிழாவுக்கு குறிப்பிட்ட இரட்டைக்குடியுரிமை பெற்ற அன்பரையும் அழைத்தார். அந்த விழாவின்போது எடுத்துக்கொண்ட படங்களை தனது முகநூலில் பதிவேற்றினார் இந்த அன்பர்.

அதனை வெளிநாட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த அன்பரின் நண்பர் ஒருவர், இவ்வாறு தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

 “ வாழ்த்துக்கள். தாய் நாட்டில் வாழ முடியாது என்று வெளிநாட்டுக்கு அகதியாக வந்து, நிரந்தர வதிவிட உரிமையும் பெற்று, அதன் பிறகு குடியுரிமையும் பெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் தாயகம் சென்று திரும்பி, இரட்டைக்குடியுரிமையும் பெற்ற பின்னர், மீண்டும் சென்று வெளிநாட்டில் தேடிய சொத்துக்களின் வருமானத்தின் மூலம் ஊரில் உல்லாசப் பயணிகள் விடுதியும் கட்டிவிட்டு, அதற்கு முன்னால் நின்று போஸ் கொடுக்கிறீரா..? 

இதற்குப்பின்னர் என்ன நடந்திருக்கும்… ? அந்த அன்பர், இவ்வாறு எள்ளி நகையாடிய நண்பரை தனது முகநூலிலிருந்து நீக்கி, முடக்கிவிட்டார்.

இனிச்சொல்லுங்கள்:  முகநூல் நன்மையா..? தீமையா..?

இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட 22 ஆவது அரசியல் திருத்தச்சட்டத்திலும் உறை பொருளாகவும் மறை பொருளாகவும் இருப்பதும் இந்த இரட்டைக் குடியுரிமை விவகாரம்தான்.

ஜனாதிபதியிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்தை குறைப்பதற்கு இதுவழிசெய்யுமா..? இல்லையா..? என்பது ஒரு புறமிருக்க, பஸில் ராஜபக்‌ஷ மீண்டும் இலங்கை அரசியலுக்குள் தீவிரமாக பிரவேசித்துவிடுவாரா..?  இல்லையா…? என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

இது இவ்விதமிருக்க, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  இந்த விவாதத்தில் கலந்துகொள்ளவும் இல்லை. வாக்களிக்கவும் இல்லை.

மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்‌ஷ அமெரிக்க குடியுரிமையை துறக்க தீர்மானித்திருப்பதாக செய்திகள் கசிகின்றன.  அதனை வைத்துக்கொண்டுதான் சில மாதங்களுக்கு முன்னர் அவர் நாடாளுமன்றத்துள் பிரவேசித்து,  நிதியமைச்சரானார்.

பின்னர் “  கபுடா  “ ( காகம் ) என்ற பெயருடன் பறந்து சென்றார். மீண்டும் பறந்து வரப்போகிறார்.

அவரது கட்சி சிங்களவர்களின் கட்சி என எடுத்துக்கொண்டால், தமிழர்களின் கட்சி மாத்திரம் என்னவாம்..? என்று ஶ்ரீமான் பொதுஜனன் கேட்கிறார்.

பாராளுமன்றில் பிரதிநிதிகளாகவிருக்கும் சில தமிழர்களும் இரட்டைக் குடியுரிமையுடன்தான் இருப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்குத் தெரிந்தவகையில் இரண்டு மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையுடன் இருக்கிறார்கள், தனக்குத் தெரியாதவகையில் மேலும் சிலர் இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தனக்குத் தெரிந்தவர்களின் பெயர் விபரங்களை அவர் சொல்லவில்லை.  சொன்னால், அந்தப் பிரதிநிதிகளின் சிறப்புரிமையை மீறவேண்டி வந்துவிடுமோ..?  என அவர் யோசிப்பது புரிந்துகொள்ளத்தக்கது.

ஆனால், சபாநாயகர் மற்றும் ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார்.

 “ பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் இரட்டைக் குடியுரிமை கொண்டிருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.  

இதே வேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவும் அபாயச் சங்கை ஊதியிருக்கிறது.

 இரட்டைப் பிரஜாவுரிமை வைத்திருக்கும் பிரதிநிதிகள் உடனடியாக பாராளுமன்றிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இனிவரவிருக்கும் தேர்தல்களின்போது வேட்பு மனுக்களை ஏற்கமுன்னர்,  தேர்தலில் போட்டியிடுபவருக்கு இரட்டைக்குடியுரிமை இருக்கிறதா? என்பதும் ஆராயப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரேனும் இருந்தால், சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் தமது பதவிகளிலிருந்து விலகிவிடல் வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த கேரத்தும் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் 22 ஆவது திருத்தச்சட்டம் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

இவர்களைத்  தெரிவு செய்த மக்கள், இனிமேல் வரப்போகும் தேர்தல்களின்போது தங்களிடம் வாக்கு கேட்டுவரும் வேட்பாளர்களிடத்தில்,  “ நாங்கள் ஆதரவு தருவது ஒரு புறம் இருக்கட்டும்,  உங்களுக்கு எத்தனை குடியுரிமை இருக்கிறது..?  என்பதை சத்தியம் செய்து சொல்லிவிடுங்கள்    எனக்கேட்கும் காலம் வரப்போகிறது.

---0---

No comments: