படித்தோம் சொல்கின்றோம்: நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் முருகபூபதி


நாட்டியக் கலாநிதி  கார்த்திகா கணேசர், நாட்டியம் மாத்திரம் ஆடவில்லை. அதற்கும் அப்பால் சென்று பல கலைஞர்களை உருவாக்கிய ஆளுமை.  கார்த்திகா   ஏனைய  நடன  நர்த்தகிகளிடமிருந்து  வேறுபட்டிருப்பதற்கு  அவரிடமிருக்கும்  ஆற்றலும்தேடலும் மாத்திரம்  காரணம்  அல்ல.   நாட்டியக்கலை தொடர்பாக  அவர் நீண்டகாலம் ஆய்வுசெய்து  நூல்களும் எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார்.   நடன நர்த்தகியாக  மாத்திரமன்றி  தமது ஆய்வின்  வெளிப்பாடாக  நாட்டியக் கலாநிதியாகவும்  மிளிர்ந்தவர்.

  இதுவரையில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலம் தோறும்  நாட்டியக்கலை,  இந்திய  நாட்டியத்தின்  திராவிட  மரபு, நாட்டியக்கடலில் புதிய  அலைகள் முதலான நூல்களை


வரவாக்கியிருப்பவர.  இந்த ஆண்டு  தனது பவளவிழாக்காலத்தில் மற்றும் ஒரு நூலை அவர் வரவாக்கியிருக்கிறார். 

நூலின் பெயர் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்.   

இந்த நூல் என்னிடம் வந்து சேர்ந்தபோது, இதனை எவ்வாறு உள்வாங்கப் போகின்றேன் என்ற தயக்கமும் முதலில் வந்தது.

சமகாலத்தில் இந்த பொன்னியின் செல்வன் திரைக்கு  வந்து நடக்கின்ற அலைப்பறைகளுக்கு மத்தியில், இந்த நூல் எனது வசம் வந்து சேர்ந்தது.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர், அங்கே சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்கள்தான் இருந்தன.  இந்தியாவை பல வருடகாலம் தங்களது ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், சுதந்திரத்தையும் தந்துவிட்டு, மூன்று மதங்களையும் ஒரே குடைக்குள் வைத்து இந்து மதம் என்ற பொதுப்பெயரை வைத்துவிட்டு,  மகாராணியின் மகுடத்தில் பதிப்பதற்காக கோகினூர் வைரத்தையும் எடுத்துச்சென்றுவிட்டார்கள்.

மகாராணி மறைந்தபின்னர்தான் அந்தக்கிரீடத்தில் இருப்பவை எங்கெங்கிருந்து சென்றன என்பதும் தெரியவந்துள்ளது.

கார்த்திகா கணேசரின் இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன்னர் ஒரு குட்டிக்கதையை சொல்லிவிடுகின்றேன்.

கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

சொன்னபிறகும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு குழந்தை தனது அம்மாவிடம் கேட்கிறது.

   அம்மா,  நான் இந்த உலகத்திற்கு எப்படி வந்தேன்...?

அம்மா சொல்கிறார்:

நானும் உனது அப்பாவும் கடவுளிடம் பிரார்த்தித்து எமக்கு குழந்தை வேண்டும் என்றோம்.  உடனே ஒரு  அழகான பூக்கூடை  மேலிருந்து கீழே இறங்கியது.  அதில் நீ இருந்தாய். என்றாள் அம்மா.

குழந்தை மீண்டும் கேட்கிறது.

அவ்வாறாயின் அம்மா,  நீங்கள் எப்படி இந்த உலகத்திற்கு வந்தீர்கள்...?


அதற்கு தாய் சொல்கிறாள்:  “ எனது அம்மாவும்  அப்பாவும் கடவுளிடம்  பிரார்த்தனை செய்து  கேட்டார்கள். உடனே அவர்களிடமும் கடவுள் ஒரு அழகான பூக்கூடைடைய அனுப்பியிருந்தார். அதில் நான் குழந்தையாக இருந்தேன்.  எடுத்து வளர்த்தார்கள்.

மீண்டும் குழந்தை கேட்கிறது.

 “ அப்படியென்றால், எனது அப்பா எப்படி இந்த உலகத்திற்கு வந்தார்...?

 “ உனது அப்பாவும் அப்படித்தான். அவரது பெற்றோர்கள் கடவுளை வணங்கி கேட்டதும், கடவுள் அனுப்பிய அழகான பூக்கூடையில் அப்பா குழந்தையாக இருந்தார். அவர்கள் எடுத்து வளர்த்தார்கள்.

இந்த பூக்கூடை கதைகளை கேட்ட அந்தக் குழந்தை சற்று நேரம் யோசித்துவிட்டு கேட்டது.

 “ அம்மா... நீங்கள், அப்பா....  உங்கள் முன்னோர்கள் எல்லோருமே  அப்படித்தான் மேலேயிருந்து கடவுள் அனுப்பிய பூக்கூடையில்தான் வந்தீர்களா..?  

ஆமாம். அப்படித்தான்  “ என்றாள் தாய்.

குழந்தை சிரித்துவிட்டு கேட்டது,

 “ அப்படியென்றால் உங்கள் பரம்பரையே Sexual intercourse

செய்யாமலே பிறந்தவர்களா..? 

அந்தத் தாய் அதற்கு என்ன பதில் சொல்லியிருப்பாள். எதுவும்


சொல்லியிருக்கமாட்டாள் , அந்தக்குழந்தையின் கன்னத்தில் அடித்திருப்பாள்.

இனி இந்த நூலுக்குள் வருகின்றேன்.

சகோதரி கார்த்திகா, தொடர்ச்சியாக ஆடற்கலைகள் தொடர்பான புத்தகங்களை எழுதிவிட்டு, தற்போது மற்றும் ஒரு ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்த நூல்.

இதிலும் அந்தக்குழந்தை தனது தாயிடம் கேட்டதுபோன்ற கேள்விகளுக்கான விடையாகவே இந்து மதக்கண்ணோட்டத்தில் பேசப்படுகிறது.

கார்த்திகா, நடன நர்த்தகி மட்டுமல்ல, நாட்டியக்கலை பற்றி ஆய்வு செய்தவர் மட்டுமல்ல, சிட்னியிலிருந்து பலவருடங்களாக  24 மணி நேரமும் ஒலிபரப்பாகும்  அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியில் ஊடகவியலாளராகவும் பணியாற்றுபவர்.

1995 ஆம் ஆண்டு முதல் இந்த ஊடகப்பணியிலும் ஈடுபடுகிறார்.

பலரையும் பேட்டிகாண்கிறார்.

அத்துடன், பண்பாட்டுக்கோலங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறார். இதுவரையில் இந்நிகழ்ச்சிக்காக  250 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி பேசியிருக்கிறார்.

அவற்றுள் தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளின் தொகுப்பே இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்.

பிரபல்யமான சென்னை காந்தளகம் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகள் இலங்கையில் ஞானம் இதழிலும் வெளிவந்துள்ளன. ஞானம் ஆசிரியர் தி . ஞானசேகரன் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

காந்தளகம் சச்சிதானந்தன் வாழ்த்துரை தந்திருக்கிறார். இவர்தான் இலங்கையில் சிவசேனை அமைப்பினை தோற்றுவித்திருக்கும் அன்பர். 


அதனால், கார்த்திகாவின் இந்த நூலில் ஏதும் அரசியல் இருக்குமா..?  என்ற சந்தேகம் எவருக்கும் வரவும் வேண்டாம்.

கார்த்திகா,  இலங்கையில் தனது  முதல் குருவான  இயல்,  இசை வாருதி        ஸ்ரீ வீரமணி அய்யரிடம்  கற்றிருப்பவர்.   இந்தியாவில்  பரதநாட்டியக் கலையில் பெருவிருட்சம் என்று   போற்றப்படும்  பத்மபூஷன் – நாட்டிய கலாகேசரி  வழுவூர் இராமையா  பிள்ளையின்  வீட்டிலேயே  தங்கியிருந்து  பரத நாட்டிய  பயிற்சியை  தொடர்ந்த  பாக்கியசாலி.

                 வழுவூராரின்   மாணவிகள்தான்  கமலா  லக்ஷ்மணன்,  பத்மா சுப்பிரமணியம்,   சித்திரா  விஸ்வேஸ்வரன்,  வைஜயந்தி மாலா, பத்மினி, லலிதா,  ஈ.வி. சரோஜா,   எல். விஜயலட்சுமி,   ரமணதிலகம்  ( கவிஞர்  வாலியின்  மனைவி)  உட்பட பலர். இவர்களில்  சிலர் திரையுலகில் நட்சத்திரமானார்கள்.

ஆனால், கார்த்திகா ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும்  மாறினார். இவரது நூல்கள் பரதம் பயிலும் மாணவர்களுக்கும்  பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும்  பாட நூல்களாக விளங்குகின்றன.

கார்த்திகாவின், காலம்தோறும்  நாட்டியக்கலை சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால்   வெளியானபொழுது, 1982 ஆம்  ஆண்டு தமிழக  முதல்வர்  எம். ஜி. ஆரிடமிருந்து  தமிழக  அரசின் விருதைப்பெற்றுக்கொண்டார் கார்த்திகா கணேசர்.

தமிழகத்தில் ஆடற்கலைகளில்  நீடித்திருந்த வடமொழி  ஆதிக்கம் பற்றியெல்லாம் தமது முன்னைய நூல்களில் பதிவுசெய்திருக்கும் கார்த்திகா,

இந்தப்  புதிய நூலில், திருமூலர் திருமந்திரத்திலிருந்து, வாத்ஸ்யாயனர் தொடக்கம், கௌதம புத்தர் வரையில் ஆராய்ந்தறிந்து எழுதியிருக்கிறார்.

அவரது தேடல் பிரமிப்பைத் தருகிறது. பல நூல்களை ஆராய்ந்திருக்கிறார்.  அறிஞர்கள் பலரதும் கருத்துக்களை தொகுத்திருக்கிறார்.

ஆதிமனிதர்களில் இருந்து இன்றைய மனிதர்கள் வரையில், அவர்கள் மத்தியில் உருவாகிய பண்பாட்டுக்கோலங்களையும், அவர்களின் வழிபாட்டு முறைகளையும்,  உணவு நாகரீகத்தையும்  அதன் ஊடாக விவசாயம் முதல் இதர பொருளாதார சிந்தனைகளையும்  சொல்லிக்கொண்டே செல்கிறார்.

தனது குழந்தையிடம், மனிதர்களின் தோற்றத்தின் பின்னணியையும்  தாற்பரியத்தை அந்தத் தாய் சொல்லத்தயங்கியதை,  எனது உரையின் தொடக்கத்தில் கேட்டீர்கள்.

ஆனால், இந்த கார்த்திகா என்ற தாயோ,  எமது வாசகர்களுக்கு “ ஆதிமனிதனின் சிந்தனை அவன் உடலிலிருந்தே தொடங்கியிருக்கிறது என்பதற்கு ஆதாரமான பல செய்திகளை விபரிக்கிறார்.

மனிதனும் தன்னை அறிய முயன்றான். அடுத்தவனும் தன்னைப்போல் இருப்பதைக்கண்டு அவனை நேசித்தான். அத்தோடு நின்றானா, தன்னைச்சுற்றியுள்ள பிரபஞ்சத்தை முடிந்தவரையில் சுற்றிச் சுற்றிப்பார்த்தான்  “ என முதலாவது சிந்தனை வளர்ச்சி என்ற அங்கத்திலிருந்து பேசத்தொடங்கும் கார்த்திகா, ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய அணு ஆய்வுக் கூடத்தில், ஆறடி இரண்டங்குல உயர நடராசர் சிலை வைக்கப்பட்டுள்ள செய்தியையும் கூறி, அந்த சிலையின் அடியில் சிவ நடனத்திற்கும் இன்றைய இயற்பியல் கோட்பாட்டிற்கும் உள்ள தொடர்பு பற்றி கூறிய விளக்கம் எழுதி பொறிக்கப்பட்டுள்ளது என்ற மேலதிக தகவலையும் சொல்கிறார்.

ஆனந்த தாண்டவத்தை தனது ஆராய்ச்சிப் பொருளாகக் கொண்ட ஆய்வறிஞர் கமில் சுவபெல் என்ற செக்கோஸ்லோவாக்கிய நாட்டவர், தனது ஆய்வின் முடிவில் இலங்கையாரான கலாயோகி ஆனந்த குமாரசாமியை கிழக்கு – மேற்கு நாடுகளின் கலாசாரங்களில் துறைபோன சிறந்த அகழ்வாராய்ச்சி அறிஞர் என்று கூறும் தகவலையும் சுட்டிக்காண்பிக்கின்றார் கார்த்திகா.

கலாயோகி ஆனந்த குமாரசாமியின் பெயரில் இலங்கை தலைநகரத்தில் ஒரு பிரபல்யமான வீதியே இருக்கிறது.

அதுபோன்று,  இந்த நூலின் தொடக்கத்தில், மற்றும் ஒரு ஜேர்மன் அறிஞர் பற்றியும் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி பற்றியும் கார்த்திகா நினைவுபடுத்துகிறார்.

அவர்தான் மார்க்ஸ் முல்லர்.

கார்ல் மார்க்ஸ் பற்றி தொடர்ந்து பேசிவருகின்றோம்.  அது     காலத்தின் தேவை.

இந்த மார்க்ஸ் முல்லர், இந்தியாவில் சித்தர்களினால் தோன்றிய உபநிடதங்களை ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்த்தவர். அன்னாரின் அளப்பரிய சேவையை பாராட்டி இந்திய அரசு பிரதான நகரங்கள் தோறும் Max Muller Bhawan என்ற பெயரில் நூல் நிலையங்களை நிறுவி,  தனது நன்றியை தெரிவித்துக்கொண்டிருக்கிறது முதலான அரிய செய்திகளை கார்த்திகா தமது நூலில் பதிவுசெய்துள்ளார்.

இங்குதான், கார்த்திகா ஏனைய நடன நர்த்தகிகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார் என பேராசிரியர் மௌனகுரு முதல்,  ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் வரையில் பலரும் சொல்லியிருக்கும் கருத்துக்களில் பொதிந்திருக்கும் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்கின்றோம்.

கார்த்திகாவும் சிறிய வயதில் நடனம் பயிலத் தொடங்கியவர். 

இலங்கையில் தனது  முதல் குருவான  இயல்,  இசை வாருதி        ஸ்ரீ வீரமணி அய்யரிடம்  இவர் பரதம் பயின்றபோதும், பின்னாளில் தமிழ்நாட்டில் பத்மபூஷன் - நாட்டியகலாகேசரி  வழுவூர் இராமையா  பிள்ளையின்  வீட்டிலேயே  தங்கியிருந்து  பரத நாட்டிய  பயிற்சியை  தொடர்ந்தபோதும் அங்கிருந்த நடராசர் விக்கிரகத்தை தினம் தினம் பார்த்திருப்பார்.

ஆனால், நடனம் பயில்பவர்கள் அவசியம் தாண்டவ நடனமும் ஆடத்தான் வேண்டும் என்ற எண்ணத்தோடு மாத்திரம் நின்றுவிடாமல்,  சமகாலத்தில் அரங்கேற்றம் நடத்திவிட்டு, அவ்வேளையில் எடுக்கப்பட்ட படங்களை வீட்டில் காட்சிக்காகவும்  அலங்காரப்படுத்தியும் அல்பத்திலும் இறுவட்டிலும் பாதுகாத்து வைத்துக்கொண்டு,  கட்டிய சலங்கையை மறந்துவிடும் எண்ணற்றவர்களைப்போல்,  கார்த்திகாவும் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை என்பதற்கும் சிறந்த சான்றாக இந்த நூல் விளங்குகிறது.

இருக்கு வேதம், சிவலிங்கம், தைத்திரேய உபநிடதங்கள் கூறும் ஐந்து கோஷங்கள், உடல் மெய், காம சூத்திரம், கஜறாகோ, யோகம், மௌனம், குரு – சிஷ்ய பாரம்பரியம், இந்து மதச்சிந்தனைகள், இந்திய    பாரம்பரிய அறிவு, சூரிய சித்தாந்தம், சித்திரைப்புத்தாண்டு, கௌதமர், பௌத்தம் எவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியேறியது, நடராசர் தண்டவமும் தத்துவார்த்த பின்னணியும், இயக்கத்தின் வடிவமே நடராச மூர்த்தி முதலான தலைப்புகளில் கார்த்திகா தனது ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

இதிலிருந்து இந்நூலின் உள்ளடக்கம் எத்தகையது என்பதை அறிந்துகொள்ள முடியும்.  அத்துடன் சில பொருத்தமான படங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்த நூலில் சிவலிங்கம் என்ற அங்கத்தை நான் படித்தபோது, எனக்கு ஈழத்தின் மூத்த தலைமுறை எழுத்தாளர் மு. தளையசிங்கம் எழுதிய தொழுகை என்ற சிறுகதை நினைவுக்கு வந்தது.

தொழுகை கதையை சந்தர்ப்பம் வந்தால்  படித்துப்பாருங்கள்.  அத்துடன் கார்த்திகாவின் இந்த நூலையும் அவசியம் படியுங்கள்.

பல உண்மைகளை அவர் ஆராய்ந்தறிந்து எழுதியிருக்கிறார்.

( அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2022 – மெய்நிகர் அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை )

No comments: