போதைப்பொருள் குற்றங்களை ஒழிக்க தீவிர நடவடிக்ைக தேவை

 Saturday, October 29, 2022 - 6:00amநாட்டில் போதைப்பொருள் கடத்தலையும் பாவனையையும் முடிவுக்குக் கொண்டுவருவதென்பது இலகுவான காரியமல்ல. போதைப்பொருளுக்கு எதிரான சட்டம் இலங்கையில் மிகக் கடுமையாக்கப்பட்டிருக்கின்றது. போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுகின்ற தண்டனையும் மிகக் கடுமையானது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையில் ஈடுபடுவோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு நீதிமன்றங்களினால் ஆயுட்காலச்சிறைத் தண்டனையோ அல்லது மரணதண்டனையோ தீர்ப்பாக வழங்கப்படுவதையும் நாம் அறிகின்றோம்.

தண்டனைகள் கடுமையானதாக இருந்த போதிலும், போதைப்பொருள் சம்பந்தமான குற்றங்கள் இன்னுமே முடிவுக்கு வருவதாக இல்லை. போதைவஸ்து கடத்தல்களும் அதன் பாவனைகளும் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தபடியே உள்ளன. போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுவதும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.

கிழக்கின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் போதைப்பொருள் குற்றங்கள் அடிக்கடி இடம்பெறுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருட்கள் அங்கு அடிக்கடி கைப்பற்றப்படுகின்றன. விற்பனையாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பிரதேசங்களுக்கு போதைப்பொருட்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது.

அங்கு பொலிசார் மிகத்தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு போதைப்பொருள் குற்றவாளிகள் பலரைக் கைது செய்துள்ளனர். ஆனாலும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது கடினமாகவே உள்ளது. பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கினாலேயே போதைப்பொருள் குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென்பதுதான் உண்மை.

இது இவ்வாறிருக்கையில், நாட்டின் வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் சமீப காலமாக போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. போதைப்பொருள் குற்றவாளிகள் சமீப காலமாக பெருமளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவர் கூட போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்த சம்பவமொன்று கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. வியாபார நோக்கத்துக்காகவே அப்பெண் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இந்தியாவிலிருந்து கேரள கஞ்சா வடபகுதிக்கு கடத்தி வரப்படுகின்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்ற நிலையில், தற்போது ஹெரோயின் போன்ற போதைப்பொருள் பாவனையும் வடக்கில் அதிகரித்து வருவது ஆரோக்கியமான நிலைமையல்ல. வடபகுதியில் போதைப்பொருள் பாவனையை அதிகரிப்பதற்கு திட்டமிட்ட முறையில் செயற்பாடுகள் இடம்பெறுவதாக பேச்சுகள் உலவி வருகின்றமை ஒருபுறமிருக்கையில், அவ்வாறான ஊகங்கள் கற்பனையென மற்றொரு தரப்பினர் கூறுவதையும் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கின்றது.

எதுவாக இருந்த போதிலும், வடபகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் சம்பவங்கள் இவ்வாறு அதிகரித்து வருவது அப்பிரதேசத்தின் வளர்ச்சிக்குத் தடையாகவே இருக்கப் போகின்றதென்பதை வடபகுதி நலனில் அக்கறை கொண்டவர்கள் புரிந்து கொள்வது அவசியம். வடபகுதியானது போதைப்பொருள் குற்றங்கள் நிறைந்த பிரதேசமாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

கல்வியிலும் சுயபொருளாதார அபிவிருத்தியிலும் வடபகுதி மக்கள் ஆற்றலுள்ளவர்கள் என்ற பெருமை அக்காலத்தில் நிலவியது. கல்வித்துறையைப் பொறுத்தவரை குறுக்குவழிகளை நாடாமல் சொந்த முயற்சியிலேயே உச்சநிலைமையைத் தொடக் கூடிய ஆற்றலுள்ளவர்களாக அம்மக்கள் திகழ்ந்தனர். அதன் ஊடாக நாட்டின் உயர்பதவிகளையெல்லாம் அங்குள்ளோர் அலங்கரித்தனர்.

ஆனால் உள்நாட்டு யுத்தம் உருவெடுத்த பின்னர் வடபகுதியின் கல்வி மற்றும் சுயபொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது. முப்பது வருட காலமாக அழிவுகள் தொடர்ந்து சென்றமை ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், மறுபுறத்தில் புலம்பெயர்தலும் அதிகரித்துச் சென்றது. கல்வியிலும் பொருளாதாரத்திலும் எமது தாய்நாட்டுக்குப் பங்களிக்க வேண்டிய வடபகுதி மக்கள் பலர் புலம்பெயர் தேசங்களில் கல்வி மற்றும் பொருளாதாரத்துறைகளில் அந்நாடுகளுக்குப் பங்களித்துக் கொண்டிருக்கின்றனர்.

எமது தாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பாகவே இதனைக் கருத முடியும். ஆனாலும் யுத்தம் எப்போதோ முடிவுக்கு வந்து விட்டது. வடபகுதி மக்கள் மீண்டும் தங்களது கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேகமாக முன்னேறிச் செல்ல வேண்டிய வேளையும் திரும்பி விட்டது. எனினும் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் வடபகுதி நிலைமை முன்னேற்றமடையவில்லையென்பதே உண்மை.

தமிழ்த்தரப்பு அரசியல்வாதிகளிடையேயான ஒற்றுமையின்மை மற்றும் நவீன கலாசாரங்களின் ஊடுருவல் காரணமாக வடக்கு நிலைமை பிறழ்வான திசையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது. கல்வித்துறையில் வீழ்ச்சி காணப்படுகின்றது. சுயபொருளாதார அபிவிருத்தியும் குறிப்பிடும்படியாக இல்லை. இந்நிலையில் போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து வருவது ஆபத்தான அறிகுறியாகும்.

வடபகுதியில் பொலிசார் மேற்கொள்கின்ற போதைப்பொருள் வேட்டைக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்குவது அவசியம். அதேவேளை சமூகமட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதும் அவசியம்.

நன்றி தினகரன் 

No comments: