தெய்வம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழில் புராணக்க கதைகளையே அடிப்படையாக வைத்து பக்திப்


படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் சமூகக் கதைகளை கருவாகக் கொண்டு பக்திப் படங்களை தயாரித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெறலாம் என்பதை நிரூபித்தவர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர் .1969ம் ஆண்டு இவர் தயாரித்த முதல் சமூக பக்திப் படமான துணைவன் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.அதனை தொடர்ந்து 1972ம் வருடம் தேவர் தயாரித்த பக்தி படம் தான் தெய்வம்.முழு நீள வண்ணப்படமாக இதனை அவர் தயாரித்தார்.


படத்தில் ஏராளமான நடிகர்கள் நடித்திருந்த போதும் படத்தின்

கதாநாயகன் முருகப் பெருமான்தான்.ஆறு படை வீடுகளில் குடிகொண்டிருக்கும் முருகனை சுற்றியே படத்தின் கதை அமைக்கப் ப ட்டிருந்தது.சுவாமிமலை,பழனி,திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,திருத்தணி ஆகிய ஐந்து கோயில்களுடன் தன் மனதுக்கு பிடித்த மருதமலையையும் சேர்த்து ஆறு கோவில்களில் படப்பிடிப்பை நடத்தியிருந்தார் தேவர்.ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை மட்டும் படத்தில் இடம் பெறவில்லை.அதற்கு பதில் மருதமலை இடம் பெற்றது.

படத்தை தயாரித்த தேவரே படத்தின் கதையையும் எழுதி,வசனங்களையும் எழுதியிருந்தார்.தன்னுடைய சொந்த வாழ்வில் இடம்பெற்ற சில சம்பவங்களையும் படத்தின் கதையில் சேர்த்திருந்தார் தேவர்.கோயிலை கொள்ளையடிக்க வந்தவன் முருகன் அருளால் திருந்தி திருப்பணியில் ஈடுபடுவது,பிரிந்த கணவன் மனைவி இருவரும் கந்தன் கருணையால் இணைவது,பண மோசடி செய்த நண்பனை வேல்முருகன் நீதிமன்றத்தில் சிக்க வைப்பது,கொள்ளை போன நகைகளை மால்மருகன் மீட்டுத்தருவது,கடன் தொல்லையில் மாட்டிக் கொண்ட நாஸ்திகனுக்கும் சண்முகப் பெருமான் அருள்வது,திருவிழாவுக்கு வந்த பக்தையை பாலியல் வல்லுறவில் இருந்து வேலவன் காப்பது என்று ஆறு விதமான கதைகளை சுவாரசியமாக அமைத்திருந்தார் தேவர்.

படத்தின் ஆரம்பத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் தோன்றி ஒவ்வொரு கதையாகத் தொடங்க அது படமாக விரிகிறது.படத்தில் ஜெமினி,ஏ வி எம் ராஜன்,சௌகார்ஜானகி,சுந்தரராஜன்,சிவகுமார்,ஜெயா,ஸ்ரீகாந்த்,கே ஆர் விஜயா,நாகேஷ்,தேங்காய் சீனிவாசன்,என்று பலர் நடித்திருந்தார்கள்.இவர்கள் போதாதென்று அசோகன்,மனோகர்,ராமதாஸ்,கே கண்ணன்,என்று வில்லன் நடிகர்களையும் படத்தில் சேர்த்திருந்தார் தேவர்.


உருக்கமாகவும்,உணர்வுபூர்வமாகவும் நடித்திருந்தார் ஏ வி எம் ராஜன்.அதையே தன் பங்கிற்கு செய்தார் சௌகார்.நிஜ வாழ்வில் நாஸ்திகராகத் திகழ்ந்த செந்தாமரை படத்தில் பக்தனாக வருகிறார்.முத்துராமனுடன் அவர் வாதம் செய்யும் காட்சி அருமை.அடாவடித்தனத்தில் ஈடுபடும் அசோகனை மயில் தாக்கும் காட்சி விறுவிறுப்பு..படத்தில் வரும் அனைவருக்கும் முருகப் பெருமானின் வித விதமான பெயர்களே வைக்கப்பட்டிருந்தது.

ஆறுபடை வீடுகளில் நிகழும் காவடி,அபிஷேகம்,சூரன் போர்,என்று

எல்லாவற்றையும் இணைத்து இருப்பது மற்றுமோர் சிறப்பு.அதுமட்டுமன்றி பிரபல பாடகர்களான மதுரை சோமு,பித்துக்குளி முருகதாஸ்,சூலமங்கலம் சகோதரிகள்,டி எம் எஸ்,சீர்காழி,பெங்களூர் ரமணியம்மாள்,ராதா ஜெயலட்சுமி ஆகியோர் படத்தில் தோன்றி பாடுவது மற்றுமொரு போனஸ்!


மருதமலை மாமணியே முருகையா,நாடறியும் நூறு மலை,வருவாண்டி தருவாண்டி மலையாண்டி,திருசெந்தூரில் போர் புரிந்து,குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்,திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் ஆகிய பாடல்கள் வருடம் ஐம்பதை கடந்தும் ஒலிக்கின்றன.படத்துக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.இப் படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு மேலும் பட வாய்ப்புகளை அவருக்கு பெற்று தந்தது.

படத்தை விறுவிறுப்பாக இயக்கியிருந்தார் எம் ஏ திருமுகம்.படத்தை பார்த்து விட்டு வரும் போது கோயிலில் இருந்து வருவது போல் ரசிகர்கள் உணர்ந்தார்கள்.கந்த ஷஷ்டி காலத்தில் முருகன் பெருமையை சொல்கிறது தெய்வம்!

No comments: