பெருவாழ்வு வாழ்வதற்கு வழிவகுக்கும் கந்தசஷ்டி விரதம்

 Friday, October 28, 2022 - 6:00am

- அகத்தின் அழுக்குகளை அகற்றும்

கந்தசஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை 6 நாள் ஸ்கந்த சஷ்டி திருவிழா எல்லா முருகன் கோயில்களிலும் நடைபெறுகிறது. சஷ்டி திதி ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை தொடங்கி ஒக்டோபர் 31 ஆம் திகதி காலை முடிவடைகிறது.

கந்தசஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் வாழ்வில் நன்மைகள் கைகூடும். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் நோன்பிருந்து கந்தசஷ்டி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும், அவை நீங்கி முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

இதனை உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் என்பார்கள். அதனால் உப்புநீர், எலுமிச்சம்பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக் கூடாது.

கந்தசஷ்டி தொடங்கி சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவை சிறிதளவாக உட்கொண்டு முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும். நண்பகல் ஒரேயொரு முறை மட்டும் பச்சரிசி உணவுடன் தயிர் கொஞ்சம் சேர்த்து உண்ண வேண்டும். காலை, இரவு நேரத்தில் பால், பழங்கள் மட்டும் கொஞ்சம் உண்ணலாம். ஆனால், வயதானவர்கள், நோய் உள்ளவர்கள் விரதத்தின் போது உடல்நிலைக்கு தகுந்தபடி நடந்து கொள்ள விதிவிலக்குகள் உள்ளன.

பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உள்ளனர். ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் உண்ணாமல் இருப்பது நல்லது. செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர்.

முருக பக்தர்கள் இவ்விரதத்தை கடுந்தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசை தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர். இவ்விரத முறைமையை அனுஷ்டிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து, காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்வது வழக்கம்.

பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனித செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணை பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள்பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்தசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம். சூரசங்காரத்தின் முடிவில் முருகன் மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக் கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசங்காரமாகும்.

ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

வி.ரி. சகாதேவராஜா...

(காரைதீவு குறூப் நிருபர்)  -   நன்றி தினகரன் 

No comments: