தம்மைத்தாமே தகனம் செய்யும் தற்குறிகள் ! அவதானி


ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்..?  என்று கேட்டபோது,   “ ஒரு நூலகம் கட்டுவேன்  “ என்றார்  மகாத்மா காந்தி.

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்..?  என்று ேட்ட போது,  புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்றார்  ஜவஹர்லால் நேரு.

எனது  கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று


வினவப்பட்டபோது,  சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா.


பிறந்த நாளுக்கு என்ன வேண்டும்…?  எனக் கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என தயக்கமின்றி லெனின் கூறியதும்,  குவிந்த புத்தகங்கள் பல இலட்சம்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டொலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை..?  என கேட்கப்பட்டபோது


புத்தகங்கள்தான் என்றார் மார்டின் லூதர்கிங்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே எனது தலைசிறந்த நண்பன்  என்றார்  ஆபிரகாம் லிங்கன்.

இந்தச் செய்திகளை ஆத்திரம் வந்தால், புத்தகங்களை எரிப்பவர்கள் அறிந்திருக்கிறார்களா..? இல்லையாயின் இனிமேலாவது அறிந்துகொள்ளட்டும்.

 “ கோத்தா கோ  “  என ஆரம்பித்த போராட்டம் நூறாவது நாளையும் வெற்றிகரமாக கொண்டாடிவிட்டது.  இப்போராட்டம் ஆரம்பமானது முதல் தலைநகரத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் பல காட்சிகள் அரங்கேறிவிட்டன.

அவற்றில் ராஜபக்‌ஷ சகோதரர்களின் ஆட்சியில் அங்கம் வகித்தவர்கள், மற்றும்  ஆதரவாளர்களின் இல்லங்கள் எரிக்கப்பட்ட காட்சிகளும் அடக்கம்.  பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதி செய்திருந்தால் நட்ட ஈடும் கிடைத்துவிடும்.

ஆனால், அந்த இல்லங்களில் எரியுண்டுபோன புத்தகங்களை மீளப்பெற முடியுமா..?

சர்வாதிகாரி – கொடுங்கோலன் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட  ஹிட்லர், இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில்,  தனது படையினரிடம், மருத்துவ மனைகள், பாடசாலைகள், நூலகங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். அங்கெல்லாம் குண்டுகளை பொழியவேண்டாம் என்றுதான் அறிவுறுத்தியிருப்பதாக படித்திருக்கின்றோம்.

யூதர்களை வேரோடு அழிக்க திடசங்கர்ப்பம் பூண்டிருந்த ஹிட்லரிடம் கூட  புத்தகங்கள் குறித்து அத்தகைய சிந்தனைதான் இருந்திருக்கிறது.

ஆனால், பௌத்த சமயத்தினை பேணிப் பாதுகாக்க வேண்டும். பெளத்த தர்மத்தை பின்பற்றவேண்டும் எனச்சொல்லிச் சொல்லியே சிங்கள பேரினவாதத்தை நாடெங்கும் பரப்பியவர்களின் முன்னிலையில் புத்தகங்கள் எரிக்கப்பட்டுவருகின்றன.

இற்றைக்கு 41  வருடங்களுக்கு முன்னர் 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டபோது இலட்சம் புத்தகங்கள் முற்றாக எரிந்து சாம்பரானதை நன்கு அறிவோம்.  தற்போது சுமார் 2500 புத்தகங்களை கொழும்பில் மூத்த அரசியல்வாதி ரணில்விக்கிரமசிங்காவின் இல்லத்தில் எரித்திருக்கிறார்கள்.

அந்தக்காட்சியைப் பார்த்துவிட்டு அவர் கண்ணீர் மல்க பேசியதை கேட்ட போது, எமக்கு 1981 ஆம் ஆண்டு யாழ். பொது நூலக எரிப்பினையடுத்து யாழ்ப்பாணத்தில் வண. பிதா தாவீது அடிகள் மாரடைப்பு வந்து மரணித்ததுதான் உடனே நினைவுக்கு வந்தது.

இலங்கையில் கலவரங்கள் வந்த காலம் முதல் அதாவது 1958 ஆம் ஆண்டுமுதல் 1977 – 1981 – 1983 எனத் தொடர்ந்து 2022 இலும் எரியூட்டும் செயல்கள் தொடருகின்றதென்றால், இந்த நாட்டில் பௌத்த தர்மம் செத்துவிட்டது என்பதா அர்த்தம்!?

புத்தகங்கள் என்ன குற்றம் செய்தன..? அவற்றை எரிப்பவர்களுக்கு பகுத்தறிவு இல்லையாயினும் தமது வாழ்வில் ஏதாவது ஒரு புத்தகத்தையாவது அல்லது பத்திரிகையாவது படித்திருப்பார்கள்தானே..?

தரையில் கிடக்கும் புத்தகத்தின் மீது தப்பித்தவறி கால் பட்டுவிட்டாலும் அதனை எடுத்து தொட்டு வணங்கும் பண்பாட்டினை எமது முன்னோர்கள் சொல்லித்தந்துள்ளனர்.

ஆனால், புத்தகங்களை எரிக்கும் பண்பாட்டினை யார் சொல்லிக்கொடுத்தார்கள்…?

புத்தகங்களை எரிக்கும் தற்குறிகள் தம்மைத்தாமே தகனம் செய்துகொண்டவர்தான் ! அத்தகையோருக்கு விமோசனமே இல்லை.

அன்று 1981 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அபிவிருத்திச்சபைத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து அன்றைய ஜே.ஆரின் அரசினால் அனுப்பிவைக்கப்பட்ட பொலிஸாரே யாழ். பொது நூலகத்தையும் யாழ். ஈழநாடு அலுவலகம், பூபாலசிங்கம் புத்தகசாலை மற்றும் யாழ். எம்.பி. யோகேஸ்வரன் இல்லம் உட்பட பெருந்தொகையான சொத்துக்களை எரியூட்டி அழித்தனர்.  அப்போது கல்வி அமைச்சராகவிருந்தவர் ரணில் விக்கிரமசிங்கா.

அதன்பின்னர் ஜே.ஆர். யாழ். பொது நூலகத்திற்கு நட்ட ஈடு வழங்கினார். நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டார்.  அதற்கெல்லாம் தேவைப்பட்ட பணம் அந்த பொலிஸாரின் பொக்கட்டிலிருந்து வரவில்லை.  அரசுப்பணம்தான் வந்தது. அது மக்களின் பணம்!

தற்போது ரணில் விக்கிரமசிங்காவின் இல்லமும் அங்கிருந்த புத்தகங்களும் எரிக்கப்பட்டுள்ளன.  அதற்கான நட்ட ஈட்டினை அவர் அரசிடமிருந்து நிச்சயம் பெறுவார். இதுவும் மக்களின் பணம்தான்.

இதுபற்றியெல்லாம்  இந்த எரியூட்டும் தற்குறிகளுக்குத்  தெரியாதா..?

காலிமுகத்திடலில் கோத்தா கோ போராட்டத்தை தொடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் 1981 ஆம் ஆண்டிற்குப்பின்னர் பிறந்த இளம் தலைமுறையினர். அவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் இடம்பெற்றனர்.

காலிமுகத்திடல் போரட்டத்தின்போதுதான் ஜூன் மாதமும் வந்தது. யாழ். பொது நூலக எரிப்பும் நினைவுகூரப்பட்டது.  பேராசிரியர் நுஃமான் எழுதிய பிரபல்யம்பெற்ற கவிதையும் மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது.  காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் புத்தகங்களும் சேகரித்தனர்.

அந்த ஆர்ப்பாட்டக்குழுவினர் சிலர் யாழ்ப்பாணம் சென்று அவற்றை யாழ். பொது நூலகத்திடமும் சேர்ப்பித்தனர். இந்தப்பின்னணிகளுடன்,  மக்கள் இந்தச் செய்திகளை மறப்பதற்கு முன்னரே, கொழும்பில் ரணில் விக்கிரமசிங்காவின் இல்லமும் அங்கிருந்த பெறுமதியான புத்தகங்களும் ஓவியங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

அவற்றில்  போர்த்துகேயர் – ஒல்லாந்தர்  காலத்து  புத்தகங்களும் அடக்கம் எனவும், அவற்றை  பேராதனைப் பல்கலைக்கழகம், ரோயல் கல்லூரி  உட்பட பல இடங்களுக்கும்  அன்பளிப்பாக வழங்குவதற்கு தானும் தனது மனைவியும் தீர்மானித்திருந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்கா கண்ணீர் மல்க  தெரிவித்தார்.

நாடெங்கும் அரச மரங்களை காணும் இடத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு எத்தனிக்கும் சிங்கள பேரினவாதம், புத்தகங்களை எரிக்கும் தற்குறிகளை அடையாளம் கண்டு தண்டிக்காத வரையில், இங்கே பௌத்தம் தழைக்கப்போவதில்லை.

கௌதம புத்தர் சிலையாக மௌனத் தவமியற்றினாலும், நடமாடித்திரியும் காவி உடை தரித்த பிக்குகளின் கண்களுக்கு புத்தகங்கள் எரிவது தெரியும்தானே..?

அவர்களாவது இந்த தற்குறிகளை திருத்துவதற்கு  விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

---0---

 



No comments: