படித்தோம் சொல்கின்றோம் ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக் ஆயுதங்கள் உலகெங்கும் உற்பத்திசெய்த அகதிகளின் கதை ! முருகபூபதி

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது “  அஸ்ஸலாமு அலைக்கும் – வஅலைக்கும் அஸ்ஸலாம்  “ எனச் சொல்லிக்கொள்வார்கள்.

பராக் ஒபாமாவும் அமெரிக்க ஜனாதிபதியானதன் பின்னர் கெய்ரோ சென்றவேளையில் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் “  அஸ்லாமு அலைக்கும்  “ என்று தொடங்கித்தான் தனது உரையை ஆரம்பித்தார்.

இதுபற்றிய  ஒரு விரிவான ஆக்கத்தை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் எழுதியிருக்கின்றேன். 

 “ அஸ்ஸலாமு அலைக்கும்  “ -  உங்கள் மீது சாந்தி உண்டாவதாக – என்று ஒருவர் கூறுவாரேயானால், அதற்கு  அழகிய முறையில் பதிலளிக்குமாயும் இஸ்லாம் கூறுகிறது. அந்தப்பதில் :  “வஅலைக்கும் அஸ்ஸலாம்  “ உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக என்பதுதான் அர்த்தம்.

ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக் பேசும் செய்திகளில் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருப்பதும் இதுதான்.  ஆதிகால மனிதன்  வேட்டையாடி சாப்பிட்டு உயிர் வாழ்வதற்காக ஆயுதங்களை கண்டுபிடித்தான். ஆனால், நவீன கால மனிதன் சகமனிதனின் உயிரைக் குடிப்பதற்காகவும்  அயல் நாடுகளை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காகவும் ஆயுதங்களை கண்டுபிடித்தவண்ணமும் உற்பத்திசெய்தவாறும் வாழ்கின்றான்.

இந்த ஆயுதங்கள் உற்பத்தி செய்தது அகதிகளைத்தான்.  அவ்வாறு உலகெங்கும் அலைந்துலழும் அகதிகளின் கதைதான் ஷோபா சக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்.

வழக்கத்துக்கு மாறான வடிவமைப்பில்  இந்த நாவலை அவர் வெளியிட்டுள்ளார்.   தமிழ்நாடு கருப்பு பிரதிகள் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

இதன் முகப்பு அட்டையின் ஒருபக்கம் நீலம் மற்றப்பக்கம்  சிவப்பு. 

நீலப்பக்கதிலிருந்து வாசிக்கத் தொடங்கினால், பின்வரும் வரிகள் எமக்கு Geneva Convention ஐ நினைவூட்டுகின்றன.

  “ ஒருவருடைய இனக்குழு, மதம், தேசிய இனம், குறிப்பிட்ட ஒரு சமூகக் குழுவின் உறுப்புரிமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் காரணமாகவோ அல்லது அவர் வெளிப்படுத்திய அரசியல் கருத்துக்களுக்காகவோ தனது நாட்டில் துன்புறுத்தப்படலாம் என்று நிரூபணமாகக் கூடிய அச்சத்தால், அவர் இன்னொரு நாட்டுக்குப் புலம்பெயர்ந்தால், அவரை ஓர் அரசியல் அகதியாகக் கருதி, அவருக்கு பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படவேண்டும்.  “

சிவப்பு பக்கத்திலிருந்து தொடங்கினால், பின்வரும் வரிகள்:   

           “ புத்தகம் என்பது வாழ்க்கையின் இறந்துபோன கருத்து நிழல். அதன் பணி உண்மைகளை ஜாடையாகச் சொல்வது. ஒரு நல்ல புத்தகத்தை காட்டிலும், ஒரு கெட்ட மனிதன் சிறந்தவன்  “         

  இதனைச் சொல்லியிருப்பவர் மாக்ஸிம் கோர்க்கி. (Maxim Gorky)

நீலப்பக்கத்தில் தொடங்கும் பகுதி  142 ஆவது பக்கத்தில் முடிகிறது. சிவப்பு பக்கத்தில் தொடங்கும் பகுதி 162 ஆவது பக்கத்தில் முடிகிறது. புத்தகத்தை மாற்றித் திருப்பி படிக்கவேண்டும்.

நாவலை கையில் எடுக்கும் எந்தவொரு வாசகனும்,  அச்சகத்தில் பைண்டிங் செய்தவர்களின் தவறோ என்றுதான் முதலில் மயக்கமுறுவர்.

ஆனால், இரண்டு பக்கங்களிலிருந்தும் தொடங்கும் நாவல் ஒரு புள்ளியில்தான் இணைகிறது. அதனால், எந்தப்பக்கத்திலிருந்து வாசித்தாலும், முழுமை பெற்ற நாவலின்  வடிவமாகவே அமைந்துள்ளது.

அந்தவகையில் படைப்பூக்கம் மிக்க ஷோபா சக்தி, இவ்வாறும் நாவல் இலக்கியம் படைக்கமுடியும் என்று நிறுவியிருக்கின்றார். எதிர்காலத்தில் இத்தகைய வடிவங்களுடன் நாவல்கள், சிறுகதைகள் பிறப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஷோபாசக்தி அதற்கு முதலடி எடுத்துக்கொடுத்துள்ளார்.

“  இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் உண்டு  “ என்று இந்த நாவலின் நாயகனான ஜெபானந்தன் என்ற கதை சொல்லி அடிக்கடி சொல்கிறான்.  இந்த வரி நாவலில் பல இடங்களில் வருகிறது.  வாசகர்களை தன்னோடு அழைத்துச்சென்று மாந்தர்களை அறிமுகப்படுத்துவதிலும் கடந்து செல்லும்    வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் நிலக்காட்சிகளை சித்திரிப்பதிலும் ஷோபாசக்தி வெகு சமர்த்தர். ஸலாம் அலைக் நாவலும் அத்தகையதே.

கதைசொல்லியோடு வரும் மாந்தர்கள் ஏராளம்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஏதோ  ஒரு கதை இருக்கிறது. 

இலங்கை வடபுலத்தில் பண்ணைப் பரவைக்கடலுக்குள் மிதக்கும் மண்டை தீவில்  ஒரு நயினாதீவு சாத்திரியாருக்கும்  வெளியுலகம் அறியாத ஒரு அப்பாவிப் பெண்ணுக்கும்  அக்கா, தங்கை என இரண்டு சகோதரிகளுக்கும் நடுவே பிறந்த  ஜெபானந்தனின் கதையே ஸலாம் அலைக்.  ஆனால், இங்கே ஜெபானந்தனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், அவன்  ஊரிலும், இடம்பெயர்ந்து உயிரைப்பாதுகாக்க ஓடி ஒளித்துத் திரியும் கிராமங்களிலும் பற்றைக்காடுகளிலும் இயக்கத்தின் தடுப்பு முகாமிலும், அங்கிருந்து தப்பிவந்து கொழும்பு ஜிந்துப்பிட்டியிலிருந்து தலை மாற்றப்பட்ட கடவுச்சீட்டு மூலம் தாய்லாந்துக்கு தப்பிச்சென்று, அங்கிருந்து பிரான்ஸுக்கு ஓடிய பதின்ம வயது இளைஞனின் அலைந்துழன்ற -  தனக்கான வாழ்வைத்தேடிக் கொள்ளமுயலும்  கதை.

ஜெபானந்தனின் அக்காவும் அம்மாவும் இராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொல்லப்படுகிறார்கள்.  அவனது தங்கையும்  கொல்லப்பட்டுவிடுகிறாள்.   ஊருக்குச்சாத்திரம் சொல்லி பலருக்கும் பலன் பார்த்த தந்தையும் அடி உதை வாங்குகிறார். இத்தனை இழப்புகள்,  தீராத சோகங்களுடன் நாட்டைவிட்டே தப்பி ஓடும் ஜெபானந்தனுக்கு புகலிட நாட்டிலாவது மகிழ்ச்சியான மனநிறைவான  வாழ்க்கை அமைகிறதா..?

விரும்பிக் கட்டிய துணையையும் விவாகரத்தில்  இழந்து,  ஓரே ஒரு மகனையும் புகலிட நாட்டின் இராணுவத்திற்கு சந்தர்ப்பவசமாக அனுப்பநேர்ந்து அவனையும் இறுதியில் இழந்து நிர்க்கதியாகவிடும் ஒரு மனிதனின் அலைந்துழன்ற கதையே ஸலாம் அலைக்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போதும்  மனம் பதறும் காட்சிகள் வந்தாலும்,  ஷோபாசக்தியின் படைப்பு மொழியில் இழையோடும் அங்கதம் எம்மை ஆசுவசப்படுத்துகிறது. சில இடங்களில் வாசகர்கள் வாய்விட்டுச் சிரிக்கலாம்.

வாசகரை நின்று நிதானித்து படிக்கவைக்கிறார்.

உதாரணத்திற்கு சில வரிகள்:

 “ மனித உயிரி மூன்று மூலகங்களால் ஆக்கப்பட்டது. அவை: ஆன்மா, உடல் மற்றும் பாஸ்போர்ட். உங்களது ஆன்மா இருண்டு போயிருக்கலாம். உடல் சிதைந்து போயிருக்கலாம். ஆனால், உங்களிடம் செல்லுபடியான பாஸ்போர்ட் ஒன்றிருந்தால் எதையும் கடந்து செல்ல முடியும்  “

கடவுச்சீட்டில் தலைமாற்றி தப்பிச் செல்லும் ஒவ்வொரு அகதிக்கும் இந்த வார்த்தைகளே பால பாடம்.  அய்ரோப்பிய, அவுஸ்திரேலிய, அமெரிக்கா மற்றும் கனடா முதலான நாடுகளுக்கு அவ்வாறு தப்பிச்சென்ற ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல,  ஏனைய இனத்து மக்களுக்கும் இந்த வரிகள் மந்திரம்தான்.

நாடுவிட்டு நாடு ஓடும் அகதிகள் எங்காவது இடைவழியில் நிற்கிறார்கள்.

அவர்கள் பற்றியும் ஷோபசக்தி இவ்வாறு கூறுகிறார்:

 “ இந்த இடைவழியில் நிற்கும் அகதிகளுக்கு, தாங்கள் சென்று சேரவேண்டிய இடம் மட்டுமே மனதில் இருக்கிறது. அதற்காக அவர்கள் எதையும் இழக்கத்தயாராக இருக்கிறார்கள். உடல், அடையாளம், உண்மை, மானம், சுயமரியாதை எதைவேண்டுமானாலும் அவர்கள் கைவிடுகிறார்கள். உயிரைக்கூட அவர்கள் இழக்கத் தயாராகிறார்கள்.  இடைவழியில் திரும்புவது என்ற எண்ணமே அவர்களின் மனதில் இருப்பதில்லை.  “

நெப்போலியன் என்ற பெயரைக்கொண்ட ஒரு தமிழ் அகதி, பெல்ஜியத்தில் பிடிபட்டு திரும்பி வருகிறார்.  அங்கே அவரது கைரேகைகளைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பதால், தனது பத்து விரல் நுனிகளையும்  அயன்பொக்ஸால் அவரே கருக்கி வைத்திருக்கிறார்.

பிடிபடும் அகதிகள் சிறைவைக்கப்படும் தடுப்பு முகாம்களில் இயற்கை வெளிச்சத்தை பார்க்க முடியாது. அவ்வளவு கூட்டத்திற்கும் ஒரே ஒரு கழிவறை. குளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.  காற்றைவிடச் சொறி சிரங்கே அங்கே அதிகமாகப் பரவும்.

இவ்வாறெல்லாம் மனதை அதிரவைக்கும் காட்சிகளுடன் செய்திகளை  நகர்த்தும் கதை சொல்லி,  அவ்வப்போது வாசகர்களை நிறுத்தி சிரிக்கவும் வைக்கிறார். 

அத்தகைய ஒரு சம்பவத்தை  ஷோபாசக்தியின் மொழிநடையிலேயே இங்கே பதிவிடுகின்றேன்.

 “ பப்பா உங்களுக்கும் பிரஞ்சு மொழி தெரியுமல்லவா, சிலவற்றை எப்படி பிரஞ்சில் சொல்வதென்று எனக்குச்சொல்லுங்கள். நான் தாளில் குறித்துக்கொள்கிறேன்  “

இதைக்கேட்டதும் ரம்லா ( பப்பா ) ஒரேயடியாக உற்சாகமாகிவிட்டார்.  வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்து, என் முன்னே குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொண்டார். அவர் சொல்லச் சொல்ல நான் தாளில் குறித்துக்கொண்டேன்.

வணக்கம் – பொன்சு

என் பெயர் – மொன் நொம்

வயது முப்பது – ஆஜ் துறோன்

வேலை – தர்வாய்

சமையல்காரர் – குசினியர்

என்ன பிரச்சினை? – கெஸ் கியா புரப்ளம் ?

பிறந்த இடம் ஶ்ரீலங்கா – முவா நே இந்து

 “ ஏன் பப்பா ஶ்ரீலங்காவுக்கு பிரஞ்சிலும் ஶ்ரீலங்கா என்றுதானே வரவேண்டும்?  “

 “ எல்லாம் தெரிந்தவன் மாதிரிப் பேசாதே மகனே. பிரெஞ்சுக்காரர்கள் எல்லவற்றையும் மாற்றிவிடுவார்கள். ஜெர்மனிக்கு அல்மான், அமெரிக்காவுக்கு எத்தசினி, உனக்குத்தான் பாரிஸ்… அவர்களுக்கு பரிய்!  “

---- 

தடுப்பு முகாமிலிருக்கும் பொலிஸாரின் கண்களில் குரோதம் வழிந்துகொண்டிருக்கிறது.   நாங்கள் ஏதாவது கேட்டால், நடுவிரலை உயர்த்திச் சாடை காட்டி விரட்டி விட்டார்கள். இது ஜெனீவா 51 சர்வதேச உடன்படிக்கையில் கண்டிப்பாக கிடையாது.

-----  

 இவ்வாறு இந்த நாவலில் பல காட்சிகளை எடுத்துக்கூறலாம். வாசகர்கள் படித்து ரசிக்கட்டும் என்பதற்காக விரிவஞ்சித் தவிர்க்கின்றேன்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்குள்தான் எத்தனைவகையான மனிதர்கள்.  கதைசொல்லி அவர்களை சித்திரிக்கும் பாங்கு யதார்த்தமானது.

 மொட்டச்சி அய்யன், காதீமா, மஞ்சுஶ்ரீ, உமையாள், ஏஜெண்ட் சிகாமணி, சிமியோன், மகாவலிராஜன், கந்தஞானி, சாவித்திரி, சேவற்கொடி, குண்டு மணி, மணியக்கா, தர்மசேன, புத்திகா, குமுதினி, மேடம் சர்லோத், மொழிபெயர்ப்பாளர் தில்லைநாதன், இராஜகோபால், பரஞ்சோதி…. இவ்வாறு இந்நாவலில் மண்டை தீவிலிருந்து  கொழும்பு - ஜிந்துப்பிட்டி தொடக்கம், தாய்லாந்து பிரான்ஸ் வரையில் ஏராளமான மனிதர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் இந்நாவல் பேசுகிறது.  செற்ப வேளையில் அவர்கள் வந்து சென்றாலும், ஷோபா சக்தியின் மொழிவளத்தினால், மனதில் தங்கிவிடுகிறார்கள். இறுதியில் அதிரூபன் என்ற பதின்ம வயது இளைஞனுடைய அகால மரணத்துடன் நாவலின் ஒரு பக்கம் முடிகிறது. அங்கும் ஷோபாசக்தி ஒரு டுவிஸ்டை இழையோடவிட்டு எம்மை உறைந்துபோகச் செய்துவிடுகிறார்.

நாவலின் நாயகனான கதைசொல்லியின் தந்தையும் சோதிடம் கணிக்கும்  சாத்திரியாராகவிருப்பதனால் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சாதகக்குறிப்பும் பேசப்படுகிறது.

ஆயுதங்கள் இன்றும் அகதிகளையே உற்பத்திசெய்துகொண்டிருக்கின்றன என்பதற்கு உக்ரேய்ன் – ரஷ்யா போரும்  எமக்கு மற்றும் ஒரு செய்தி. 

போர் நெருக்கடிகளினால், தமது உயிரைப்பாதுகாத்து எங்காவது தப்பிச்சென்று வாழத்துடிக்கும் மக்களின் வாழ்க்கை நடுக்கடலில் ஜலசமாதியாவதையும், பனிப்பாறைகளுக்குள் அமிழ்ந்துவிடுவதையும் செய்திகளாக படித்துவருகின்றோம்.

தப்பிச்சென்று தடுப்பு முகாம்களில் வதைபட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றியும் அறிகின்றோம்.  அவர்களின் எழுதித்தீராத பக்கங்களையே ஷோபா சக்திமுடிந்தவரையில் தனது  வளம்மிக்க படைப்புமொழியில் இந்நாவலில் பல்வேறு உபகதைகளுடன் முன்வைத்துள்ளார்.

இந்நாவல், ஆங்கிலம் உட்பட இதர மொழிகளிலும் பெயர்க்கப்படல் வேண்டும். ஏனென்றால், இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் உண்டு.

---0---

letchumananm@gmail.com

 

 

 

 

 

   

 

  


No comments: