ஏன் பெண்ணென்று... குறுநாவல் (1/6) கே.எஸ்.சுதாகர்

அதிகாரம் 1

1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. வடபகுதிக் கிராமங்களில் அமைதி


நிலவிக்கொண்டிருந்த காலம். இல்லாவிடில் வீட்டு வேலியைப் பிரித்து, வீதியை ஆக்கிரமித்து ஒரு விழா நடத்த முடியுமா?

 வீட்டு வளவிற்குள் மேடை போடப்பட்டிருந்தது. வளவிற்கும் வீதிக்கும் இடையே இருந்த கிடுகுவேலி நீக்கபட்டிருந்தது. வீதிக்குக் குறுக்காக வாங்குகள் வரிசை வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஆண்டாண்டு காலங்களாக வாழையடி வாழையாகப் படிந்திருக்கும் அழுக்கு, வாங்குகளுக்கு அழகு கூட்டியது. வீதியில் எப்போதாவது வாகனங்கள் வருவதுண்டு. அதுவும் யாராவது கனவான்கள் கோவிலுக்கென்று வந்தால்தான். வீதி இவர்கள் குடியிருப்புக்கு அப்பாலும் இருபது இருபத்தைந்து குடிமனைகளைத் தாண்டி அம்பாள் கோவிலில் போய் முடியும்.

 வாங்குகளில் இருந்தவர்கள் சுருட்டுப் பிடித்தும், பாக்கு வெற்றிலை போட்டபடியும் கன்னாபின்னாவென்று கதையளந்தபடி இருந்தார்கள். குடித்து முடித்த தேநீர்க்கோப்பைகள் வாங்குகளின் கீழே நடனமாடின. அவற்றின் மீது எறும்புக்கூட்டங்கள் வரிசை கட்டி ஏறின. முன்வரிசையில் சில வாண்டுகள் காலாட்டியபடி ஆவலோடு மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் ரி.எம்.எஸ்ஸின் பாடலை நிறுத்தி, மைக்கைத் தட்டி சரி செய்து கொண்டிருந்தார் ஒருவர்.

 சந்திரமோகனுக்கும் பத்மினிக்கும் காலையில்தான் ஊரில் திருமணம் நடந்திருந்தது.

 சந்திரமோகனும் பத்மினியும் சினிமா நாயகர்கள் போல் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. உருவத்தில் இருவரும் குள்ளமானவர்கள். சரியாக நிமிர்ந்து நின்றார்கள் என்றால் பத்மினி சற்றே உயரம் கூட. சந்திரமோகன் நிறத்தில் சற்று வெள்ளை. எப்போதும் திருநீறு பூசி சந்தணப்பொட்டு வைத்திருப்பான். முன்பற்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். சுறுசுறுப்பானவன். பத்மினி பார்ப்பதற்கு நோஞ்சான் போல் இருப்பாள். ஆனால் சுறுசுறுப்பானவள். அவள் கதைப்பது, புதிதாக அவளைச் சந்திப்பவர்களுக்கு உளறுவது போல இருக்கும்.

 அம்பாள் அனுக்கிரகத்தில் மணவறை, மேளதாளங்களுடன் வெகு விமரிசையாக ‘கிள்ளுப்பிறாண்டி ஐயர்’ தலைமையில் அவர்கள் திருமணம் நடந்தது. ’கிள்ளுப்பிறாண்டி ஐயர்’ எடுக்கப்பட்ட போட்டோக்கள் அத்தனையிலும் முக்கால்வாசி இடத்தைப் பிடித்துவிட்டார் என்று காலையில் இருந்து படப்பிடிப்பாளர் முணுமுணுத்தபடி இருந்தார். என்ன செய்வது படத்திற்காக அவர் தன் மேனியைச் சீவி எறிந்துவிட முடியுமா என்ன?

 சந்திரமோகன் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியன். மலையகத்தில் கொட்டகலையில் படிப்பிக்கின்றான். என்னவோ தெரியவில்லை பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் எல்லாம் ‘தண்ணியில்லா காட்டுக்குப் போவது போல்’ மலையகம் நோக்கிப் போய்விடுகின்றார்கள். அதில் ஏதோ சூட்சுமம் இருக்கத்தான் வேண்டும்.

 தந்தையார் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தன் வயது முதிர்ந்த தாயார் தங்கம்மாவுடன் இருக்கின்றான். அப்படி ஒரு கதைக்குச் சொன்னாலும், தாயார் ஒன்றும் கொட்டகலையில் வசிக்கவில்லை. ஊரில் தன்னந்தனியனாகவே இருக்கின்றார். வீடு அம்பாள் கோவிலில் இருந்து மணி கேட்கும் தூரம். கோவிலே கதியென அவர் வாழ்க்கை கழிகின்றது. கூடவே மூத்தமகன் அருகில் இருக்கின்றான் என்ற தைரியம். சந்திரமோகனுக்கு இரண்டு அக்காமார்கள், ஒரு அண்ணன். எல்லாரும் மணம் முடித்துவிட்டார்கள். அண்ணாவின் வீட்டில்தான் இந்த விழா தடல் புடலாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

 பத்மினியின் அக்கா விமலா இந்தக் கலியாணத்திற்காக நைஜீரியாவில் இருந்து கணவனுடன் வந்திருந்தார். பத்மினியின் தாயார் நேசத்திற்கு சுகமில்லாததால் அவர்களே எல்லாவற்றையும் முன் நின்று நடத்தினார்கள். தந்தையார் கணபதிப்பிள்ளை பழுத்த சைவப்பழம். கன்னங்கருத்த கருங்காலி தேகத்தினன். கருங்காலி தேகத்தில் மட்டுமல்ல, மனதிலும் தான். எதற்கும் கிறுங்கமாட்டாத வைராக்கியம் கொண்டவர். எப்போதும் புன்முறுவல் பூத்த வதனம். ஆரம்பக்கல்லூரி அதிபராக இருந்த அவர் தற்போது ஓய்வு எடுத்துவிட்டார்.

 மாலையில் சந்திரமோகனுக்கு ஒரு பாராட்டுவிழா நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்தது. அவனது திருமணத்திற்காக மலையகத்தில் இருந்து ஆசிரியர்கள் பலர் வந்திருந்தார்கள். சந்திரமோகனின் புகழ் லவுஸ்பீக்கர் வழியாக அவனது ஊரிற்கும் அயலண்டைகளுக்கும் பரவியது.

 தங்கம்மா தனது கடைசி மகனுக்கும் திருமணம் நடந்துவிட்ட பூரிப்பில் மகிழ்ந்து போயிருந்தார். தன் குடும்ப அங்கத்தவர்கள் புடைசூழ பாராட்டுவிழாவில் என்ன பேசுகின்றார்கள் என்று கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.

 மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும். அந்த மங்கையை இவன் பெறவே அதைவிட தவம் செய்திருக்க வேண்டும்” என்று பத்மினியை ஒருவன் புகழ்ந்தான். கணபதிப்பிள்ளையும் நேசமும் குளிர்ந்து போனார்கள். அவள் அவர்களின் வளர்ப்பல்லவா?

காலையில் திருமணம் முடிந்தவுடன் கணபதிப்பிள்ளையும் நேசமும் தமது வீட்டிற்குக் கோப்பாய் போய்விட்டார்கள். நேசத்தினால் தொடர்ந்து ஒரு இடத்தில் இருக்க முடிவதில்லை. மாலையில் பாராட்டுவிழாவிற்காக மீண்டும் வந்திருந்தார்கள்.

 ‘சந்துறு ஊரிலை இருக்கேக்கை உப்பிடியெல்லால் பெரிய விண்ணன் எண்டு எங்களுக்குத் தெரியாதே’ என்று சிலர் அவனைப் பற்றி சிலாகித்தார்கள். கையோடு அவனது இளவயதுத் திருவிளையாடல்கள் சிலவற்றை அவிட்டுவிட்டுச் சிரித்துக் கொண்டார்கள். இத்தனை புகழுரைகளுக்குச் சொந்தக்காரனா என் கணவன் எனத் திகைத்தபடி கணவனைக் கடைக்கண்ணால் பார்த்தாள் மினி. சந்திரமோகன் சந்துறு’ ஆனால் பத்மினி ‘மினி’ ஆவதில் என்ன தவறு. மேடைப்பேச்சாளர்களையும் கணவனையும் மாறிமாறிப் பார்த்து வியந்து வெட்கித்துப் போயிருந்த பத்மினியை, தன் கையால் வேண்டுமென்றே செல்லமாக இடித்தான் சந்திரமோகன். இருவரும் இதற்கு முன்னர் ஒருவரை ஒருவர் அறிந்து பழகியவர்கள் அல்ல. இருவரும் வேறு வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். முதல் ஸ்பரிசம் மின்சார அலைகளாக அவளைத் தாக்கியது.

 ஊரில் ஒரு பாடசாலை, ஒரு கோயில், ஒரு சனசமூக நிலையம், மைதானம், தபால்கந்தோர், சந்தை என்று எல்லாமே ‘ஒரு’வில் இருப்பதால் ஊர்மக்களின் ஒற்றுமையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இருப்பினும் கல்வி, தொழில், சாதி, காதல் கீதல் போன்ற விவகாரங்கள் - தார் வீதியில் போகும் வாகனங்கள் சிலவேளைகளில் சறுக்குவது போலவும் அமைந்துவிடும். 

 சந்திரமோகனுக்கு சிறுவயது முதல் ஊரில் ஒரு காதல் இருந்தது.   சாரதா மீது பள்ளிப்பருவம் முதல் காதல் கொண்டிருந்தான். அதையெல்லாம் முறியடித்துத்தான் இன்று இந்தத் திருமணம் நடந்துள்ளது. சந்திரமோகனுக்கும் அதில் உடன்பாடுதான். அதிக சீதனமும், ஏகப்பட்ட சொத்துப்பத்துகளும், பழைய காதலைப் புளிக்கச் செய்திருந்தன. இருப்பினும் காதலியின் பக்கத்தால் ஏதாவது வில்லங்கங்கள் வரக்கூடும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் காலையில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. மாலை நடைபெறும் பாராட்டுவிழாவை குழப்பக்கூடும், கல்எறி விழக்கூடும் என எதிர்பார்த்து சில குண்டர்களை வீதிக்கு வடக்குப்புறமாக நிற்பாட்டியிருந்தார்கள். இது சம்பந்தமாக எந்தவித தகவலும் பத்மினி வீட்டாருக்குத் தெரிந்திருக்கவில்லை. காதும் காதும் வைச்சபடி கச்சிதமாக எல்லாமே நடந்து கொண்டிருந்தன.

 இரவு ஒன்பது மணியளவில் மணமக்களை பெண்வீட்டிற்குக் கூட்டிச் செல்ல மாலைகள் சோடனைகளுடன் ஆடம்பரமாக ஒரு கார் வந்தது. அப்பொழுதும் ஊர்  வெளிச்சமாகத்தான் இருந்தது. சிலர் வாங்குகளில் இருந்து கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கார் வீட்டு வாசலில் இருந்து சிறிது தூரத்தில் நின்றது.

 சிறிது நேரத்தில் மணமக்களை ஏற்றிக்கொண்டு கார் கோப்பாய் நோக்கி விரைந்தது. சத்தம் போட்டபடியே காரைக் கலைத்துச் சென்றார்கள் சிறுவர்கள். கூடவே நாய் ஒன்றும் மூச்சிரைத்தபடி ஓடியது. சந்திவரையும் கலைத்துச் சென்ற சிறுவர்கள் மேலும் போட்டி போட முடியாமல், கழிசான்கள் அவுண்டுவிழ நாக்கைத் தொங்கப் போட்டபடி திரும்பினார்கள். சந்திக்கு அப்பாலும் கலைத்துச் சென்றது அந்த நாய்தான். அது சாரதாவின் வீட்டுநாய்.

 வலதுகாலை எடுத்து வைத்து மணமக்கள் வீட்டிற்குள் சென்றார்கள். பத்மினியின் தாயாரால் நிமிர்ந்து நிற்கமுடியாது. நாரியிலே கையூன்றி, ஊன்றிய இடத்திலிருந்து நிமிர்ந்து மணமக்களைப் பார்த்தார். சந்திரமோகனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்துவிட்டது.  மரியாதை நிமிர்த்தம் அடக்கி நின்றான். இராகுகாலம் முடிவதற்குள், மணமக்களை அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் அழைத்துச் சென்றார் கணபதிப்பிள்ளை.

 ஹோட்டல் றூம் தோற்றுப் போய்விடும். உயர்ந்த கட்டில். மடிப்புக் கலையாத படுக்கை விரிப்புகள். அறை முழுவதும் முட்டி நின்று, வாசலைத் திறந்ததும் பறந்தோடிட நிற்கும் பாரிஸ் சென்றின் நறுமணம்.  மங்கிய நிலவொளி பரப்பி நிற்கும் நீலநிற `நைற் பல்ப்’.

 சம்பிரதாய உரையாடல்களில் சில நிமிட நேரம் சுகித்திருந்தனர். மினியின் மேனியைப் போர்த்திருந்த கூறை சரசரவென்று அகல, மினி நைற்றியில் நின்றாள். மினியின் அழகில் சொக்கி நின்ற சந்துறு, அவளை இழுத்துப் பறித்துக் கட்டிலில் சரித்தான். முதல் தடவையாக அவளை உற்று நோக்கினான். ஏதோ ஒன்றைக் கேட்பதற்காக எத்தனித்தான். வாய் இடறியது. இடறிய வாய் இடறியதுதான்.

 “நீ இதற்கு முன் இப்படி யாருடனாவது படுத்து இருக்கின்றாயா?”

...தொடரும்


No comments: