இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைய சீனாவின் கடன் திட்டங்களும் ஒரு காரணம்!

 

இலங்கையில் தற்போது நிலவி வருகின்ற மோசமான பொருளாதார நெருக்கடிக்கு சீனாவும் ஒருவகையில் காரணமென்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் மற்றும் இராஜதந்திரிகள் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். இலங்கையில் முன்னர் இந்திய உயர்ஸ்தானிகராகப் பதவி வகித்த அசோக் காந்தாவும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் தொடர்பாக தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் மாத்திரமன்றி, இலங்கையின் இன்றைய தீவீர பிரச்சினைக்கு சீனா ஒரு முக்கிய காரணம் என பொருளாதார வல்லுநர்களிடமிருந்து தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. சீனாவின் கடன் வலையில் சிக்கியதே இலங்கையின் சரிவுக்கு முக்கிய காரணம் என ஒரு தரப்பு குற்றம் சாட்டி வருகின்றது.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மட்டும் அல்ல, பாகிஸ்தானும் சேர்ந்து கொண்டுள்ளது. இதன் மூலம் சீனாவின் மறைமுகத் திட்டத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல தரப்பும் தெரிவித்து வருகின்றன.

சீனா தனது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு கடனை வாரி வழங்கியுள்ளது. குறிப்பாக தெற்காசியாவில் மட்டும் சீனா வழங்கிய கடன் தொகை 3 இலட்சம் கோடி ரூபாயாக(இந்திய நாணயப் பெறுமதி) அதிகரித்துள்ளது.

சீனாவின் இந்த கடன் பிரச்சினையானது இலங்கையில் அரசியல் பிரச்சினையாகவும் உருவெடுத்தது. இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த அசோக் காந்தா, "இலங்கையில் சீனாவின் கடன் தந்திரம் மேலும் சிக்கல்களை அதிகரித்துள்ளது. 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. ஆனால் தற்போது இலங்கைக்கு உதவ சீனா முன்வரவில்லை" எனக் கூறியுள்ளார்.

இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கு முழுமையாக சீனா காரணம் இல்லை. ஆனால் பொருளாதார ரீதியாக சாத்தியமற்ற திட்டங்களை மேற்கொண்டு இலங்கையில் மேலும் அழுத்தத்தினை சீனா ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு கடனை தள்ளுபடி செய்வதற்காக சீனாவின் மெர்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், இலங்கையின் ஒரு துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இது சீனாவின் கடன் பொறி திட்டத்திற்கு ஒரு முக்கிய உதாரணம் என்று பொருளாதார நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆனால் ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணம் என மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது. தவறான பொருளாதாரக் கொள்கைகள், அரசியல் சார்பற்ற பிரச்சினைகள், தவறான நிர்வாகம் என பல காரணிகளுக்கும் மத்தியில், கொரோனா பெருந்தொற்றும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் அரசின் தவறான கொள்கை, சீனாவின் இராஜதந்திரம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டுக் கொண்டுள்ளனர்.

இலங்கையின் நிலைமை இவ்வாறிருக்கையில், சீனாவின் பொருளாதார நிலைமையும் தற்போது மந்தநிலையிலேயே உள்ளது. உலகின் உற்பத்தி இயந்திரமாக விளங்கும் சீனா கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வந்த காரணத்தால் இவ்வருடத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சீனாவில் கடுமையான லொக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் சீனாவின் உற்பத்தி மிகப் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்து மட்டும் அல்லாமல், உலக நாடுகளின் விநியோகச் சங்கிலி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. ஆனால் சீன அரசு தொடர்ந்து தனது பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாகக் கூறி வருகிறது.

ஆனால் சீனாவின் மார்ச் மாத காலாண்டு பொருளாதார வளர்ச்சியானது அளவீட்டில் இருந்து 1.4 சதவீதம் சரிந்து ஜூன் காலாண்டில் 2.6 சதவீதமாக இருந்துள்ளது. கொரோனா வைரஸ் எதிர்ப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூன் காலாண்டில் அதிகப்படியான காலம் உலகின் பரபரப்பான துறைமுகத் தளமான ஷாங்காய் மற்றும் பிற உற்பத்தி மையங்கள் முடங்கின. இதன் வாயிலாகவே உலகளாவிய வர்த்தகம் மற்றும் உற்பத்தி அளவுகள் பாதிக்கப்பட்டன.

தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் மே மாதத்தில்தான் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன, ஆனால் செயற்பாடு இயல்பு நிலைக்குத் திரும்பப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும் என்று பொருளாதார வல்லுநர்கள் ஏற்கனவே கூறியுள்ள நிலையில், உலக நாடுகளின் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் பொருளாதாரம் முதல் பாதியில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30 வருடத்தில் இல்லாத மோசமான நிலையை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் சீன நுகர்வோர் சந்தை மிகப்பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.

இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், ஆபிரிக்காவில் பல நாடுகள், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு சீனா அதிக கடன் வழங்கியுள்ளது. ஆனால் தற்போது சீனாவின் நிலைமையே மோசமாக உள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் சீன நிதிநிலையை மொத்தமாகச் சீர்குலைக்கும் வகையில் இரண்டு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதைச் சீனாவுக்குத் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பல சிறிய வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தங்களது பணத்தைத் திருப்பி அளிக்க முடியாமல் தோல்வியடைந்ததால் சீன வங்கிகள் மோசமான நிலையை எதிர்கொண்டு உள்ளன. ஹெனான் மாகாணங்களில் இருக்கும் வங்கிகளில் சுமார் 40 பில்லியன் யுவான் (அதாவது 6 பில்லியன் டொலர்கள்) சொத்துக்கள் உள்ளன. சுமார் 400,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் வங்கிகளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். தற்போது சீனாவில் மூடப்பட்ட வங்கிகள் அல்லது மக்களின் பணத்தை முடக்கியுள்ள வங்கிகளின் எண்ணிக்கை சீனாவின் நிதிய அமைப்பில் சிறிய அளவுதான் எனப் பேராசிரியர் Minxin Pei தெரிவித்துள்ளார்.

சீனாவில் பல நிதிநிறுவனங்கள் முடங்கியுள்ளன.

இந்த வங்கிகளின் மோசமான மேற்பார்வை மற்றும் ஊழல் நிறைந்த நிதி நிர்வாகம் போன்றவற்றால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உரிய வட்டியில் பணத்தை அளிக்க முடியாமல் போனது. இதற்கிடையில் தற்போது சீன நாட்டு மக்கள் People's Bank of China (PBOC)-ஐ எதிர்த்துப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 2009 முதல் சீனாவின் அதிகப்படியான கடன் சேவைகள் இந்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவின. ஆனால் இதனால் தொடர்ந்து நிலைநாட்ட முடியாது என்பதுதான் உண்மை.    நன்றி தினகரன் 

No comments: