எனக்கு வயது 39 ( சிறுகதை ) முருகபூபதி


இவ்வளவுகாலமும் நான் எனது கதையை உங்களுக்குச் சொல்லவில்லை.  ஆனால், இப்போது சொல்ல நேர்ந்திருக்கிறது.

கொழும்பில் பெரியாஸ்பத்திரியில்  நான் பிறந்தபோது,  எனது அழுகுரலை அம்மாவும், அம்மாவைச் சுற்றியிருந்த தாதிமாரும் ஒரு பெண் மருத்துவரும் மாத்திரமே கேட்டதாக, பிற்காலத்தில் அம்மா சொன்னார்கள்.

இப்போது நான் எனது இந்தக் கதையை வெளிநாடு ஒன்றிலிருந்து சொல்கின்றேன். சொல்லவேண்டிய காலத்தில் நான் இருக்கின்றேன்.

இங்கு எனது சிநேகிதி தினேஷா வன்னிநாயக்காவுக்கு எனது


கதையை சொல்லநேர்ந்தது. அவளை இங்கே எனது பல்கலைக்கழக வாழ்க்கை தொடங்கப்பட்ட காலம் முதல்தான் அறிவேன்.

அவள்தான்  எனது பிறந்த தினத்தை அடிக்கடி நினைவுபடுத்துபவள்.  ஜூலை மாதம் வந்தவுடனே எனது அம்மா கலவரடைந்துவிடுவார். எனது பிறந்த நாள் ஒவ்வொருவருடமும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரும்.  ஏனைய பிள்ளைகளைப் போன்று எனது வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் எதுவும் இதுவரையில் நடைபெற்றதில்லை.

ஏன் தெரியுமா..? அன்றுதான் எனது அப்பாவும் கொல்லப்பட்ட நாள்.  அம்மாவுக்கு பிரசவ வலி வந்ததும், கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு, அப்பா தேமர்ஸ் ஃபிளாஸ்க்கில் தேநீர் வாங்கச் சென்றவர்தான், அதன் பிறகு திரும்பி வரவேயில்லை.

எனது பிறப்பின் கதையை காலம் கடந்துதான் அம்மா சொன்னார்கள்.  அவுஸ்திரேலியாவிலிருந்த அம்மாவின் அண்ணன்,  என்னையும் அம்மாவையும் ஸ்பொன்ஸர் செய்து அழைக்கும்போது எனக்கு பத்துவயதுதான் இருக்கும்.

எனக்கு தமயந்தி என்று பெயர் வைத்ததும் அம்மாதான். எனது பெயருடன் இருக்கும் இராஜசேகரன் என்ற எனது அப்பாவை நான் வீட்டிலிருக்கும் ஒரே ஒரு படத்தில்தான் பார்த்திருக்கின்றேன்.

கொழும்பில் அந்தக்கலவரத்தில் எங்கள் வீடு சூறையாடப்பட்டபோது,  அம்மா – அப்பாவின் திருமணப்படம் உட்பட பலதும் எரிந்துவிட்டதாக அம்மா சொன்னார்.

ஆஸ்பத்திரியிலிருந்து பம்பலப்பிட்டியில் அகதிமுகாமுக்கு என்னையும் தூக்கிக்கொண்டு அம்மா சென்றாராம்.

ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரும்போது,  அப்பாவின் படத்துக்கு முன்னால் அம்மா நின்று கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதை எனக்கு அறிவு தெரிந்த  நாள் முதல் பார்த்துவருகின்றேன். முன்னர்  இலங்கையில் பார்த்தேன். இப்போது அவுஸ்திரேலியாவிலிருந்தும் பார்த்துவருகின்றேன்.

அம்மாவின் அண்ணன், அதுதான் எனது மாமா சுகுணேஸ்வரன் 215
என்ற விசேட விசா திட்டத்தின் கீழ் என்னையும் அம்மாவையும் இங்கே அழைத்திருந்தார்.

அப்போதுதான் அப்பாவுக்கு என்ன நடந்தது என்பதை அம்மாவிடம் கேட்டு முழுமையாக அறியமுடிந்தது. அந்த விமானப்பயணத்தில்தான் அம்மா அந்தக்கதையை எனக்கு அரையும் குறையுமாகச் சொன்னார்.

நாட்கள் செல்லச்செல்ல நானாகவே படித்தும் -  ஆராய்ந்தும் தெரிந்துகொண்டேன். அப்பாவின் மறைவுதான் எனக்கு எனது தாயகம் பற்றி அறிந்துகொள்ளவும் பெரிதும் உதவியிருக்கவேண்டும்.

எனது சிநேகிதி , தினேஷாவுடன் நான் பழகுவதை முதலில் அம்மா விரும்பவில்லை. அதற்கு அம்மா சொன்ன காரணங்கள் அம்மாவைப் பொறுத்தவரையில் சரியாக இருக்கலாம்.

அதுபோல் தினேஷாவின் அம்மா திருமதி ரோஸி வன்னிநாயக்கவுக்கும் தனது மகள் என்னுடன் சிநேகிதமாக இருப்பது விருப்பமில்லாமல்தான் இருந்தது.

தினேஷாவின் அப்பா வன்னிநாயக்கா இராணுவத்தில் இருந்தவராம். அவரும் ஒரு கண்ணி வெடித்தாக்குதலில் கொல்லப்பட்டவராம்.

அந்தக்குடும்பமும்  எங்களைப் போலத்தான் அவுஸ்திரேலியாவுக்கு 215 விசாவில் முன்னர் வந்தவர்கள் என்பதை தினேஷா சொல்லித்தான் தெரிந்துகொண்டேன்.

 “ கெதியா வந்திடுங்க.  என்னால சரியா சிங்களமும் பேசத் தெரியாது.  இரட்ணம்ஸ் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கலாம்.   அங்கே காசு அதிகம்தான்.  பரவாயில்லை. பிள்ளை எங்கே பிறந்தாலும் சுகமாகப் பிறந்தா சரி. போங்கப்பா… கெதியா வாங்க 

அம்மா, அப்பாவிடம் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள்தான் அவை.  அதன்பிறகு அம்மா,  அப்பாவை உயிரோடு காணவில்லை.  அந்தக் கலவரத்தில் காணாமலே போய்விட்டார். 

தினேஷாவின் அண்ணன் நிமாலுக்கு என்மீது விருப்பம்.  பலதடவை அவன் என்னிடம் தனது காதலை வெளிப்படுத்த முயன்றான்.  அம்மா விரும்பமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த இனத்தின்மீதே அம்மாவுக்கு தீராத வெறுப்பு நீடித்திருக்கிறது.

ஆனால், தினேஷாவின் இயல்புகள் அம்மாவை கவர்ந்திருந்தன. ஆனால், தினேஷாவின் அம்மாதான் என்னுடன் முகம்கொடுத்துப்பேசுவதில்லை.

நிமால், எனது சம்மதத்திற்கு காத்திருந்து, கைவிட்டுவிட்டு இப்போது ஒரு இத்தாலிப் பெட்டையுடன் லிவிங்டுகெதராக வாழ்கின்றான்.

இந்த மாதம் தொடக்கத்தில் தினேஷா என்னை மெல்பனில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்தாள்.  இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டுமாம்.  அதற்காக இங்கிருக்கும் இலங்கையர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துகிறார்கள் எனச்சொல்லி என்னையும் அவள் அழைத்தாள்.

அப்போதுதான் நான் அவளிடம் எனது பிறப்பின் கதையை சொல்லநேர்ந்தது.

முப்பத்தியொன்பது வருடங்களுக்கு முன்னர் எங்கள் மக்களை விரட்டி அடித்த அதே நகரத்தில்  உங்கள் தலைவர்களை விரட்டி அடிக்க உங்கள் மக்கள் திரண்டிருக்கிறார்கள் பார்.  எங்கள் மக்களின் வீடுகள், கடைகள், சொத்துக்கள் எவ்வளவு எரிந்தன.  இன்று உங்கள் தலைவர்களின் வீடுகள் எரிகின்றன. அன்று செய்தவர்களின் அடுத்த சந்ததிதானே இப்பொழுதும்  அதே வேலையை செய்கின்றன. அது என்ன எதற்கெடுத்தாலும் தீவைத்து எரிக்கும் குணம்..? என்னைக் கண்டாலே உனது அம்மாவுக்கு பிடிப்பதில்லை.  உனது அப்பாவை நாமா கண்ணிவெடி வைத்துக் கொன்றோம்.     என்று நான் சொன்னவுடனே, தினேஷா இடைமறித்தாள்.

   தமயந்தி,  உனது அப்பாவை ஜூலை கலவரத்தில் நாமா கொன்றோம்.  அது யாரோ செய்த நாசவேலை.  நீயும் நானும் ஒரு புள்ளியில் இன்று சந்தித்திருக்கின்றோம்.  அங்கே ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.  அதற்காக நாம் இங்கே ஒன்று கூடுவோம்.  “ என்றாள் தினேஷா.

அதனைக்கேட்டதும் நான் வாய்விட்டுச்சிரித்தேன்.

 “ டீசலும் பெற்றோலும், கேஸும் இல்லையென்றும் சாமான்கள் விலையேறிவிட்டது என்றும் சொல்லித்தானே போராடுகிறார்கள்.   இவையெல்லாம் முன்பு போன்று கிடைத்திருந்தால், வெளியே வந்து போராடியிருப்பார்களா..? சொல்.  சுருக்கமாகச்சொன்னால், வயிற்றில் அடிவிழுந்த படியால்  ‘ போ போ   என்று உங்கள் தலைவர்களை கலைக்கிறார்கள்.  இல்லையென்றால்… ? அப்படியே இருந்து முகநூல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். 

உள்நாட்டு போர்க்காலத்தில் எங்கட சமூகம் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியுமா..? அவர்கள் யாரையும் போ போ என்று கலைக்கவில்லை.  தங்களுக்கான உரிமையைத்தானே  கேட்டார்கள்.  

நான் ஆக்ரோஷமாகச்சொன்னதும், தினேஷா எனது தோள்பற்றி அணைத்துக்கொண்டாள். 

   எல்லாம் கடந்து போகும் தமயந்தி.  நாம் அங்கும் இங்கும் இணையும் காலம் வந்திருக்கிறது.  இப்போது பேசிக்களைத்துவிட்டோம்.  வா போவோம்  “ தினேஷாவுடன் ஒரு  கோப்பி அருந்தும் கஃபேக்குள் சென்றேன்.

என்னாலும் அவளாலும் இங்கிருந்து என்ன செய்யமுடியும்.? யோசிக்கின்றேன்.

---0---

( ஓவியம்:  கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் )

 

 

No comments: