இலங்கைச் செய்திகள்

புதிய ஜனாதிபதி ரணிலுக்கு இந்துமத பீடம் வாழ்த்து

பிரதமராகிறார் தினேஷ்

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் பேச்சுவார்த்தை

நாட்டில் அமைதியை பேண படையினருக்கு அழைப்பு


புதிய ஜனாதிபதி ரணிலுக்கு இந்துமத பீடம் வாழ்த்து

சிவஸ்ரீ பாபுசர்மா குருக்கள் ஆசி

புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இலங்கையின் 8ஆவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சர்வதேச இந்துமத பீடச்செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மக்கள் மன திருப்தியுடன் வாழக்கூடிய சூழ்நிலையை கையாளக்கூடிய தலைவர். இவரது தலைமையில் பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீண்டு நல்ல நிலைக்கு வருவதுடன் சர்வதேச ஆதரவுடன் இலங்கை நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு அவரிடம் சுமத்தப்பட்டுள்ளது. மக்களை உணர்ந்து மக்களின் மனதை அறிந்து செயற்பட்டு மக்களுக்கு மன நிம்மதியுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது இறைவன் அவருக்கு தந்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும் என சர்வதேச இந்துமத படத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களுடன் கூடிய ஆசி செய்தியினை தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

 பிரதமராகிறார் தினேஷ்

ஜனாதிபதி தலைமையில் புதிய அமைச்சரவையும் இன்று சத்தியப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக பாராளுமன்ற சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி தெரிவுக்கு முன்னர் இருந்த அமைச்சரவை மற்றும் அவர்கள் வகித்த அமைச்சுப் பதவிகளே மீண்டும் வழங்கப்படவுள்ளதுடன் அந்த அமைச்சர்கள் இன்று மீண்டும் புதிதாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட்டதன் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்வு கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.

அதேவேளை, பிரதமருக்கான வெற்றிடமொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் சபை முதல்வரே அந்தப் பதவிக்காக சத்தியப்பிரமாணம் செய்வது சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றுவரும் நிகழ்வு என்றும் அரசாங்கத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மறைவுக்குப் பின்னர் அப்போது பிரதமராக பதவி வகித்த டி.பி. விஜேதுங்க புதிய ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அந்த சந்தர்ப்பத்தில் அப்போது சபை முதல்வராக இருந்த ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான அவமானகரமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ராஜபக்ஷக்களின் மொட்டு அரசாங்கம், வழக்கமான மிலேச்சத்தனமான மற்றும் வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய 'ராஜபக்ஷக்களின் நிழல் அரசாங்கம்' இன்று அதிகாலை காலிமுகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது கோழைத்தனமான வன்முறைத் தாக்குதலைத் மேற்கொண்டுள்ளது. அதனை அறிக்கையிட வந்த வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான இராணுவ வீரர்களுக்கும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுக்க நேரிட்டதுடன் அது உண்மையில் கொடூரமான வன்முறையாகும்.

புதிய ஜனாதிபதி இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை ஒரு நாள் கடக்கும் முன்னரே ஆரம்பித்துள்ளார். தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை உணர்த்த முற்பட்டுள்ளாராயின், இவ்வாறான கொடுமைகளுக்கு அப்பாற்பட்ட பலம் வாய்ந்த அரசாங்கங்கள் கூட மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டும்.

அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தும் மீள வழங்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும், பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் அத்துமீறி நுழைந்து 'மேலிட உத்தரவுப்படி' இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்தினர். ராஜபக்ஷ அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்ட வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆயினும் அது அவ்வாறு இல்லை என்று நினைக்கவும் எம்மிடம் எந்த காரணமும் இல்லை.

காலி முகத்திடல் உள்ளிட்ட இந்நாட்டு மக்களின் போராட்டத்தின் பலனாகவே தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்துவதற்காக அல்லாததாக இருந்த போதிலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றுள்ளார். தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் ஆவதற்கு முன்னர் அதனை அவர் மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கும் அதேவேளை, மக்கள் போராட்டத்தால் ராஜபக்ஷ ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதனால் அவருக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம்.

நாடு ஒரு நாகரீகமான நாடாக எழுந்து நிற்பதற்கு இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் கடந்த ராஜபக்ஷ அரசாங்கம் அதனை இல்லாதொழித்தது. அதுவே தற்போதைய 'ராஜபக்ஷ நிழல் அரசாங்கத்தில்' இலும் நடக்க ஆரம்பித்துள்ளது. இது ராஜபக்ஷ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பதே அதன் வித்தியாசமாகும்.

நாடு எவ்வளவு அதல பாதாள படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த 'ராஜபக்‌ஷ நிழல் அரசாங்கம்' மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பை வெளிக்காட்டும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு உள்ள சுதந்திரத்தையும் மிகவும் மனிதாபிமானமற்ற வகையில் மீறியுள்ளது. நிராயுதபாணிகள், அங்கவீனமுற்ற படை வீரர்கள், பொதுமக்கள் மீது தமது ஆயுத பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடாத்த நடவடிக்கை எடுத்த, உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைவலுக்கும் எதிராக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், மேலும் தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக் கண்டிக்கிறோம். நம் நாட்டை பழங்குடியினருக்குள் தள்ள முயலும் "ராஜா கட்சி நிழல் அரசுக்கு" எதிராக நாடு முழுவதும் எழுந்து நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறோம்!   நன்றி தினகரன் 

கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் பேச்சுவார்த்தை

அதன் பின்னரே இறுதித் தீர்மானம்

பாராளுமன்றத் தொடரை நிறைவு செய்வது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பாராளுமன்றத் தொடர் நிறைவு செய்யப்படுவது குறுகிய காலத்திற்கு என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தொடரை குறுகிய காலத்திற்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தார். எவ்வாறாயினும் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தை புதிதாக திறப்பது வழமையாக நடைமுறையிலுள்ள சம்பிரதாயமாகும்.

(லோரன்ஸ் செல்வநாயகம்) - நன்றி தினகரன் 


நாட்டில் அமைதியை பேண படையினருக்கு அழைப்பு

அதிவிசேட வர்த்தமானி வெளியானது

மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திற்கிணங்க நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது சரத்துக்கு இணங்க ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி அமைதியை முன்னெடுப்பதற்கும் நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கும் அனைத்து இராணுவத்தினரையும் கடமைக்கு அழைக்கும் வகையில் அந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை நேற்று அதிகாலை ஜனாதிபதி செயலக சுற்றுப் பகுதியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

முப்படையினரும் நேற்று அதிகாலை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைக்கு இணங்க அது இடம்பெற்றுள்ளது.அந்த நடவடிக்கைகளில் முப்படையினர் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட செயலணியும் இணைந்து செயற்பட்டுள்ளனர். அதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஜனாதிபதி செயலக பிரதேசம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்) - நன்றி தினகரன் 


No comments: