"உன் கடவுளிடம் போ" (தெய்வீகன்) சிறுகதைத் தொகுப்பு பற்றிய சிறு குறிப்புகள் (கன்பரா யோகன்)

 "உன் கடவுளிடம் போ" என்ற சிறுகதைத் தொகுப்பை கடந்த 2021 ஆம்


ஆண்டு அக்டோபர் மாதம் தெய்வீகன் வெளியிட்டிருக்கிறார். இதிலுள்ள சில கதைகளை சில சஞ்சிகைகளிலும் அவரது முகநூலிலும் படித்திருந்தபோதிலும் இந்தத் தொகுப்பு  கைக்கு வந்த பின்னரே முழுக் கதைகளையும் படிக்க முடிந்தது. 

தெய்வீகன் முற்றிலும் புதிய களங்களில் கதைகளை நகர்த்த விரும்புபவர். அதே வேளை நிகழ்வுகளின் அல்லது பாத்திரங்களின் பொதுமைக்காக இரண்டு களங்களை- ஒன்று புதிய களம், மற்றையது பரிச்சயமான களம் - என்று இவற்றை இணைப்பது என்ற உத்தியில் எழுதப்பட்ட பல கதைகளையும் இங்கே எழுதியிருக்கிறார்.  அவரது சொற்தெரிவுகளும், வாக்கிய அமைப்பும்  எழுத்து நடையை செழுமைப்படுத்துவதுடன் ஆர்வமூட்டும் வாசிப்பனுபவத்தை தருகின்றது.

 'இருள்களி' கதையில் அவரது  சொல்லும் முறையில் ஊடுபாவாக நகைச்சுவையை  கொண்டு வந்திருந்தபோதிலும் ஈழப் போர்க்களத்தை இலாவகமாக விவரிப்பதற்கு கைகொடுப்பது அவருள் உறைந்திருக்கும் அனுபவ வெளிப்பாடுதான் என்று தெரிகிறது.  இறுதியில் வரும் அவுஸ்திரேலிய அன்சாக் தின நிகழ்வின் மூலம் இரு வேறு காலங்களில் , நாடுகளில் இழப்பை அனுபவித்த இருவரின் பொதுத் துயரம் காட்டப்படுகிறது.

 'அவனை எனக்குத் தெரியாது' என்ற கதையில்  இந்தோனேஷியக் களத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை.  அவுஸ்திரேலியாவில் தொடங்கி, இந்தோனேசியாவில் முடியும் கதை, இடையே தாயகப் போர்க்களத்தையும் தொட்டு வருவதுடன் துல்லியமான விவரணங்களும்  கனதியான மனநிலையிலேயே வாசகரை வைத்திருக்கிறது.

போர்க்களத்தில் எதிரியைக் குறி பார்க்கத் துப்பாக்கியைத் தூக்கிய அவனே பிறகு வாழ்வின் வேறொரு கட்டத்தில், தொழிலுக்காகத் தூக்கிய துப்பாக்கியில் தமிழன் ஒருவன் பலியாகும் அவலம் கதையின் மையம்.

 ‘மகள்’ என்ற கதையில் வரும் பௌத்த தபோவனம் பற்றிய சித்தரிப்புகள்  ஆர்வத்துடன் வாசிக்க வைத்தன. பால் நிலவின் ஒளியும் அதை மறைக்கும் முகிலின் இருளும் மாறி மாறி வருவது போல நிஜமும், கனவும் போன்ற சம்பவங்களின் வரிசை பட படப்பை தூவிச் செல்கிறது.

முடிச்சை இறுதியில் அவிழ்க்காமல் முன்பாகவே அவிழ்த்திருக்கிறாரோ என்று முதலில்  எண்ணத் தோன்றியது. ஆனால் இறுதியில் இன்னொரு முடிச்சை போடுகிறார்.  புத்த பிக்குவினால் வஞ்சிக்கபட்ட சோமபாலாவின் மகளும்  இராவணுவத்தினால் சிதைக்கப்படட ஒரு தாயின் மகனும் கடலில், அகதிப்  படகில் தங்களுக்குள் காதல் முடிச்சிட்டுக் கொள்கின்றனர். 

 ‘உறக்கமில்லாக் குருதி’ -  தொலைந்து போன தனது ஊரின் வயற்கரைப்  பிள்ளையார் சிலையை மெல்பேர்ன் அருங்காட்சியகத்தில்  கண்ட கார்த்திகேசு அடையும்  புளகாங்கிதம். அதன் பின்னணியிலுள்ள சம்பவங்களுக்குள்ளே கற்பனையை விரிப்பதற்கு தனக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றிக்கொண்டு புனைவுகளாய் எழுதுவது என்ற வகைக்குள் இந்தக் கதையை நகர்த்தியிருக்கிறார்.

 'கறை நதி' யதார்த்தச் செறிவுடன் சொல்ல முற்பட்ட கதைகளில் ஒன்று. அந்நிய நாட்டுக்கு வந்த தொடக்க வாழ்வில் அயலவர், நண்பர், வேலைக்களம், அவ்வப்போது ஊரிலிருந்து பெற்றோரின் ஊடாட்டம்  இவற்றை வைத்து தான் கண்ட கலாச்சாரத்  திகைப்பையும் கலந்து ஆர்வமூட்டும்  நிகழ்வுக் கோர்வைகளுடன் எழுதிய கதை. அவரது திகைப்புக்கு உகந்த ஓர் உதாரணமாக இந்த வரிகளை சொல்லலாம்.

"ஆஸ்திரேலியா ஜனநாயக நாடுதான், அதற்காக முதல் மனைவிக்கு தனது வேலைத்தளத்திலேயே ஒருவன் வேலை போட்டுக் கொடுக்குமளவுக்கு தாராள குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டுமா?" இதில் ஒரு கிண்டலும் தொனிக்கிறது. 

 'தராசு' அர்த்தமற்ற ஆதாரங்களைச் சோடித்து வழக்காடுவதற்கு வழிவிடும் முன்னர் சொன்ன தாராள ஜனநாயகத்தை நையாண்டி செய்வதற்கென்றே எழுதப்பட்ட சிறுகதை. ஈழத்தில் தொடங்கிய கதையின் பிரதான பாத்திரத்துக்கு அவரின் மூன்றாம் தலைமுறை வாரிசு ஒன்று பாலியல் துஷ்பிரயோக நியாயம் கேட்டு வழக்காடியதை கேலி செய்கிறது கதை. கதையை உற்றுப் படித்தால் இதில் தெரிவது வெறும் கிண்டல் அல்ல என்பதும்  இந்த சிறுபிள்ளைத்தனத்துக்கு  எதிரான சினம்தான் என்பதும் புரிகிறது.

 ‘புலரியில் மறைந்த மஞ்சல் ஆறு’  மொழியில் அதீதமான வேலைப்பாடுகள் கொண்ட நடையில் எழுதப்பட்டுள்ளது. மயானத்தை சூழ்ந்துள்ள  மஞ்சட் பூப்பூத்த கடுகு வயல்  பிறகு  கனவில் மஞ்சல் கடலாக உருமாறி வருகிறது. அதிரடியான   நட்பொன்றுடன்  பழகியிருந்த ஜப்பானியக் கிழவி இறந்ததும் அவள் முன்னாள் விபச்சாரி என்றறிந்தம்  அதிர்ச்சியில் ஏதோ துரத்தும் நினைவுகளால் அலைக்கழிந்து ஓடுவது போன்ற முடிவும் கதையை முடிவில்லாததாக்குகிறது. இது தனியே அவுஸ்திரேலியக் களத்துக்கு உரிய கதை  மட்டுமா? அல்லது இதன் உள்ளீடாக  அவர் மனதை நெருடிச் செல்லும் இன்னொரு கதைக்குச் சமாந்தரம் வரைய முற்பட்டுள்ளாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

 ‘பொதுச்சுடர்’  புலம் பெயர் நாடுகளிலுள்ள சில ஈழப் போராட்டப் போலிகளை நோக்கி எய்தப்பட்ட அம்பு.  ஆனால் மரத்தில் தைத்தபடி நிற்கும் அம்பு போல மனதில் தைத்து நிற்கும் இதன் வலி எமக்கும் வேதனையளிக்கிறது. இத்தொகுப்பிலுள்ள சிறந்த கதைகளில் இது ஒன்று.

 ‘மார்டினா’ -  அணுசக்திப்  பரிசோதனைக்காக  அவுஸ்திரேலிய பூர்விக குடிகளை நிலத்தை விட்டுப் பிரித்து, பலரை கொன்றழித்து  அவர்களின் சுவாசத்தில் புற்று நோயையும் புதைத்து விரட்டியடிக்கப்பட்டதை ஆவேசத்துடன் அறைகூவ எண்ணிய ஒருத்தி. இறுதியில் சித்தப் பிரமை பிடித்த நிலையில் முதியோர் இல்லமொன்றில் இருக்கும் அவளை அவுஸ்திரேலிய குடியுரிமையற்ற தமிழ்ப்பெண்ணொருத்தி பராமரிக்கிறாள்.   தனது மூதாதையர்கள் வாழ்ந்தொழிந்த நாட்டுக்கு தமிழ்ப்பெண்ணை பிரசையாக்கும்  கனவுடன் கண்ணை மூடுகிறாள்.

  'ஆழியாள்' கதை அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளுக்கு வெள்ளையர்களால் இழைக்கப்பட்ட பல்வேறு அநீதிகளுள்  இன்னொன்றை  அதிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட சூறையாடலை சொல்ல வருகிறது. இறுதியில் படகில் வந்த ஈழத்து அகதிச் சிறுவன் ஒருவனுடன் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த ஆதிவாசிச் சிறுமியொருத்திக்கு ஏற்படும் தொடர்பாடலுடன் ஆழ்கடலுக்கும் இருவருக்கும் உள்ள ஒரு பரம்பரை இணைப்பின் உண்மை புலப்படுகிறது.

 தெய்வீகன் முன்னர் ‘அமீலா’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். இதை விட சில கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

 

 

 

 

 

 

 


No comments: