உலகச் செய்திகள்

புதிய உச்சத்தை தொட்டுள்ள ஐரோப்பாவின் அதீத வெப்பம்

உக்ரைன் தானிய ஏற்றுமதி: ரஷ்யாவுடன் உடன்படிக்கை

மத்திய கிழக்கில் தலையீட்டை நிறுத்துமாறு சீனா கோரிக்கை

பிரிட்டன் பிரதமருக்கான போட்டி: இறுதிச் சுற்றுக்கு ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ் தெரிவு


புதிய உச்சத்தை தொட்டுள்ள ஐரோப்பாவின் அதீத வெப்பம் 

மேற்கு ஐரோப்பாவில் கொடிய வெப்ப அலை தாக்கி வரும் நிலையில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டிருப்பதோடு தீயணைப்பு வீரர்கள் புதிய காட்டுத் தீ சம்பவங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாக மிதமான காலநிலையைக் கொண்ட பிரிட்டனில், வெப்பநிலை முதல் முறையாக 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.

ஜெர்மனியில் ஆண்டின் வெப்பமான நாள் பதிவாகி இருக்கும் அதே நேரம் கடந்த சில நாட்களாக அதீத வெப்பம் தாக்கி போர்த்துக்கலில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கண்டம் முழுவதும் காட்டுத் தீ பரவியுள்ளது. மிக மோசமான நிலையை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்று ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால் வெப்ப அலை அடிக்கடி நிகழும் ஒன்றாக மாறி இருப்பதோடு அதிக தீவிரம் கொண்டதாகவும் உள்ளது.

“எதிர்காலத்தில் இவ்வாறான வெப்ப அலைகள் சாதாரணமான ஒன்றாக இருக்கும். இதனை விடவும் கொடிய நிலையை நம்மால் பார்க்க முடியும்” என்று உலக வானிலை அமைப்பின் தலைவர் பெட்டரி டாலஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் முன்னர் காணாத கடும் வெப்பம் தவிர, அங்கு காட்டுத் தீயும் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் கடந்த திங்கட்கிழமை 64 வெவ்வேறு பகுதிகளில் வெப்பநிலை சாதனை உச்சத்தை பதிவு செய்திருந்தது.

வெப்ப அலை வடக்கு மற்றும் கிழக்கை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வரும் நிலையில் ஜெர்மனியில் தொடர்ந்து காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கலில் வெப்பநிலை கணிசமான அளவு வீழ்ச்சி கண்டபோதும், வெப்ப அலையுடன் தொடர்புபட்ட 1000க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கிரேக்கத்தில் ஏதன்ஸுக்கு அருகில் பென்டலியின் மலைப்பிராந்தியத்தில் காட்டுத் தீ கட்டுக்கடங்காது பரவி வருகிறது. இங்கு வீடுகள் சேதமடைந்திருப்பதோடு நான்கு பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத்தாலியிலும் நேற்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தொட்டிருப்பதாக கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் காட்டுத் தீ பரவி உள்ளது.   நன்றி தினகரன் 





உக்ரைன் தானிய ஏற்றுமதி: ரஷ்யாவுடன் உடன்படிக்கை

கருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவுடன் உடன்பாடு எட்டப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இது பற்றிய உடன்படிக்கை ஸ்தான்புலில் உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர் இடையே நேற்று வெள்ளிக்கிழமை கைச்சாத்தாக இருந்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர், நீண்ட 5 மாதங்களில் இருநாடுகளும் முன்னெடுக்கும் முக்கிய ஒப்பந்தம் இதுவென கூறுகின்றனர்.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடக்கம் உக்ரைனிய தானியத்திற்கு உலகளவில் பற்றாக்குறை ஏற்பட்டதோடு மில்லியன் கணக்கான மக்களின் பட்டினிக்கு காரணமானது.

இந்த படையெடுப்பு உலகளவில் உணவு விலையில் அதிகரிப்பை ஏற்படுத்திய நிலையில் உக்ரைன் துறைமுகங்களை விடுவிக்கும் இந்த உடன்படிக்கை தீர்க்கமானதாக பார்க்கப்படுகிறது. உக்ரைனிய துறைமுகங்களில் சுமார் 20 மில்லியன் தொன் தானியங்கள் சிக்கியுள்ளன.

ரஷ்யாவும் உக்ரைனும் உலகின் கோதுமை விநியோகத்தில் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. 

இந்த நிலையில், இந்த சிக்கலை நாங்கள் தீர்க்கும்போது, உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கான ஏற்றுமதிப் பாதை மட்டும் திறக்கப்படாது, ரஷ்யாவில் இருந்து தயாரிப்புகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என துருக்கி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஷ்யாவில் இருந்து தானியங்கள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அனுமதி அளித்துள்ளதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் கடல் பகுதியில் ரஷ்ய கப்பல்களை அனுமதிக்க முடியாது என உக்ரைன் தரப்பில் உறுதிப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 





மத்திய கிழக்கில் தலையீட்டை நிறுத்துமாறு சீனா கோரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்காவிடம் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங்க் யீ, சிரிய நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பைஸல் மெக்டாட்டுடன் மெய்நிகர் ஊடாக நடாத்திய சந்திப்பின் போது அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தை தொடர்ந்து சிரிய வெளிவிவகார அமைச்சருடன் சீன வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பை நடாத்தினார்.

இச்சந்திப்பு தொடர்பில் சைனா டெய்லி தெரிவித்திருப்பதாவது, தங்களது சொந்த நலன்களுக்கு ஏற்ப பிராந்தியத்தை மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் தேசிய இறையாண்மையை உண்மையாகவே மதித்து செயற்பட அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் முன்வர வேண்டும்.   நன்றி தினகரன் 





பிரிட்டன் பிரதமருக்கான போட்டி: இறுதிச் சுற்றுக்கு ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ் தெரிவு

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான இறுதிக் கட்டப் போட்டிக்கு முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுச் செயலாளர் லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் இடத்தை நிரப்பும் போட்டியாளர்களின் எண்ணிக்கை இரண்டாக குறைக்கப்பட்டது.

கொவிட்–19 பெருந்தொற்றின் பொதுமுடக்க விதிகளை மீறியது உட்பட கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் சர்ச்சைகளால் தனது கட்சியினரின் ஆதரவை இழந்ததை அடுத்தே ஜோன்சன் இந்த மாத ஆரம்பத்தில் பதவி விலகினார்.

‘இன்று என் மீது எனது சகாக்கள் வைத்த நம்பிக்கைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதும் எமது செய்தியை பரப்புவதற்கு நான் இரவு பகல் பாராது பணியாற்றுவேன்’ என்று சுனக் ட்விட்டரில் குறிப்பிட்டார்.

இந்திய வம்சாவளியான சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் அனைத்து தரப்புகளிடம் இருந்தும் வாக்குகள் கிடைத்தபோதும், ட்ரஸ் தனது ஆதரவை அதிகரித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் இறுதியாக பிரதமரை தேர்வு செய்வதற்கான கன்சர்வேட்டில் கட்சியின் 200,000 உறுப்பினர்கள் பங்கேற்கும் வாக்கெடுப்பில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரஸும் சமூக ஊடகத்தில் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு தாம் போட்டிக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் ஆரம்பத்தில் பதினொரு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் ஐந்தாம் சுற்று வாக்கெடுப்பே கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

இதில் கனிஷ்ட வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டோன்ட் வெளியேற்றப்பட்டார். இதில் சுனக் 137 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை பெற்றதோடு ட்ரஸ் 113 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். மோர்டோன்ட் 105 வாக்குகளையே பெற்றார்.

பிரிட்டன் பிரதமர் பதவிக்கு தேர்வானவர் வரும் செப்டெம்பர் 5ஆம் திகதியே அறிவிக்கப்படவுள்ளார். யார் அந்தப் பதவியை வென்றாலும் பிரிட்டன் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவு முகம்கோடுக்கு மோசமான பொருளாதார நிலையை கையாள வேண்டி உள்ளது.

நாட்டின் வருடாந்தப் பணவீக்கம் 11 வீதத்தை எட்டும் நிலையில் இருப்பதோடு பொருளாதார வளர்ச்சியும் ஸ்தம்பித்து, தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் பௌண்ட் நாணயம் டொலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியை நெருங்கியுள்ளது.

பிரதமருக்கான போட்டியாளர் இரண்டாகக் குறைந்திருக்கும் நிலையில் இவர்களில் எவர் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் முதல் வெள்ளை இனத்தவர் அல்லாத பிரதமர் அல்லது நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக பதிவாவார்.   நன்றி தினகரன் 

No comments: