எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 61 இன்ப அதிர்ச்சியூட்டிய பொன். ராஜகோபால் ! தேர்முட்டியுடன் வீரகேசரியில் நகர்ந்த எனது சிறுகதை இலக்கியம் ! ! முருகபூபதி


இந்த 61 ஆவது அங்கத்தை ஒரு சிறுகதையுடன் ஆரம்பிக்கின்றேன்.

1972 முதல் நான் சிறுகதைகள் எழுதத்  தொடங்கியிருந்தாலும் வீரகேசரியில்  ஒரு சிறுகதையும் வெளிவரவில்லை.  1985 வரையில் சுமார் 13 வருடங்கள் வெளியான எனது அனைத்து சிறுகதைகளும் மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம், மாணிக்கம் முதலான சிற்றிதழ்களில்தான் வெளியாகின.

அவற்றுள் தேர்ந்தெடுத்த பத்து சிறுகதைகளை தொகுத்து சுமையின் பங்காளிகள் நூலையும்  1975 இல் வெளியிட்டு, அதற்கு 1976 இல் தேசிய சாகித்திய விருதும் பெற்றபின்னர்தான், வீரகேசரிக்குள் பணியாற்ற வந்தேன்.

எனக்கு விருது கிடைத்த செய்திதான் வீரகேசரியின் முன்பக்கத்தில் வந்ததே தவிர,  எனது கதைகள் வெளியாகவில்லை.

அந்த மனக்குறை 13 வருடகாலமாக இருந்தது. நீர்கொழும்பு மீனவ மக்களின் பிரதேச மொழியில் தொடர்ந்து கதைகள் எழுதியமையால்,  வாரவெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால், அந்த மொழிவழக்கு வாசகர்களுக்கு புரியாது என்பதனாலோ என்னவோ,   நான் அவரிடம் கொடுத்த கதைகளை நிராகரித்தார். அவர் நிராகரித்த கதைகள் மல்லிகையில் வந்தன.

ஒரு சிறுகதை ( நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன )  நண்பர் வி. என். மதியழகனின் சங்கநாதம் வானொலி நிகழ்ச்சியில் நாடகமாக ஒலிபரப்பாகியது.

வானொலி நேயர்கள் ரசித்த கதையைக்கூட வீரகேசரி ஏற்கவில்லையே என்ற மனக்குறையும் இருந்தது.

1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தையடுத்து யாழ்ப்பாணம்


அரியாலையில்  கண்டிவீதியில் நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவிலுக்கு முன்பாக செல்லும் செம்மணி வீதியில் ஒரு வீட்டை  வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தற்காலிகமாக தங்கியிருந்தேன்.

அந்தக்  கோவில் வளாகத்திலிருந்த தேர்முட்டியிலிருந்து இளைஞர்கள் கார்ட்ஸ் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.  எனக்கு அந்த விளையாட்டு இன்றளவும் தெரியாது.

எனக்கும் பொழுதுபோகவேண்டும் என்பதற்காக அங்கு சென்று வேடிக்கை பார்ப்பேன். அக்காலப்பகுதியில் வசதியுள்ளவர்கள்  வெளிநாட்டுக்கு பறந்துகொண்டிருந்தனர். வசதியற்றவர்கள் கூட  காணி, நகைகளை ஈடுவைத்து தமது மகன்மாரை வெளியே அனுப்பினர். சில பெண்கள் பார்சல் பெண்களாக தாலியை கழுத்தில் ஏந்திக்கொண்டும் சென்றனர்.

சில இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய இயக்கங்களில் இணைந்தனர். வீடுகளுக்குச்சொல்லாமல் காணாமல்போனார்கள்.

சிலர் விமானம் ஏறினர். அவர்களில் சிலரை நானே விமானம் ஏற்றியிருக்கின்றேன். எங்கள் நீர்கொழும்பு வீடு அக்காலப்பகுதியில்    “ ட்ரான்ஸிட்  “ டாகவே இயங்கியது.

அரியாலையில் நான் கண்ட தரிசனங்களை தேர்முட்டி என்ற பெயரில் சிறுகதையாக எழுதி, வாரவெளியீட்டு ஆசிரியர் ராஜகோபாலிடம் கொடுத்தேன்.

அவர் வழக்கம்போல், ஒரு கோவையில் வைத்தார்.

அந்தக்கதையாவது  பிரசுரமாகுமா…?  என்ற சந்தேகம்தான் வந்தது. அதில் எங்கள் ஊர் பிரதேச மொழி வழக்கு இல்லை.

சரி.. பார்க்கலாம் என்று அமைதி காத்தேன்.

அக்காலப்பகுதியில் இலங்கையில் வருடத்தில் சுமார் 300


தமிழ்ச்சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தன.  அதனை கணித்து ஒரு விரிவான கட்டுரையை எழுதினேன். அக்கட்டுரையை அவர் வௌியிட்டார்

அது வெளிவந்தவேளையில் எனக்கு எதிர்பாராதவிதமாக சோவியத் ஒன்றியத்தின் அழைப்பு வந்தது.  மாஸ்கோவுக்கு புறப்பட்டேன்.  அந்த மாதம் 1985 ஜூலை .

அங்கே நடந்த சர்வதேச மாநாட்டில் கலந்து ஊர்சுற்றிப்பார்த்துவிட்டு நாடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அங்கிருந்த இலங்கைத் தூதுவராலயத்தில் இலங்கைப்பிரதிநிதிகள் நூறுபேருக்கும் தூதுவர் இராப்போசன விருந்தளித்தார்.

அங்கிருந்த நூலகத்தை பார்க்கச்சென்றேன். அங்கே இலங்கையிலிருந்து வெளியாகும் மும்மொழிப்பத்திரிகைகளும் இருந்தன.

அந்த வாரம் வெளியான வீரகேசரி வாரவெளியீட்டை புரட்டிப்பார்த்தேன்.

எனது கண்கள் வியப்பால் விரிந்தன.

சிறுகதை வெளியாகும் பக்கத்தில் எனது தேர்முட்டி சிறுகதை வெளியாகியிருந்தது. ஓவியர் மொராயஸ் அதற்கு படம் வரைந்திருந்தார்

1972 ஜூலை மாதம் முதல் கதை மல்லிகையிலும் 13 வருடங்கள் கழித்து,  வீரகேசரியில் முதல் கதை ஜூலை மாதத்திலும் வெளியானது ஆச்சரியமாகவிருந்தது.

இனி தேர்முட்டிக்கு வாருங்கள்

 தேர்முட்டி ( சிறுகதை )

பரீட்சை முடிவுகள் வரும்வரையில் எனக்கு ஆஸ்தான மண்டபம் இந்த தேர்முட்டிதான்.

யார் யாரோ வந்து சொல்லிப்பார்த்துவிட்டார்கள்.  “ அதில் இருந்து கார்ட்ஸ் விளையாடவேண்டாம்  “ என்று.

மாலையானால் எமக்கு குதூகலம்தான்.

நான், நிர்மலன், குலேந்திரன், நெட்டையன் நெடுஞ்செழியன் – இது நாம் அவனுக்குச் சூட்டிய பட்டப்பெயர். வீட்டில் அவன் தர்மன்.  தர்மராஜா என்று எப்போதாவது  அபூர்வமாகத்தான் அவனை அழைப்பார்கள்.

தர்மன் கார்ட்ஸ் விளையாட்டில் மகாசூரன். ஐம்பத்து நான்கில் குறைந்தது, நாற்பதாவது விளையாடி தேர்ச்சி பெற்றவன்.

யாரிடம் கற்றான்..? அது அவனுக்கே வெளிச்சம் !

குலேந்திரன் வந்தால் கலகலப்புக்கு குறைவிருக்காது. கோயிலுக்குப்பக்கத்தில் உள்ள  ஒழுங்கையில் இருக்கும் வீடுகளின் உள் விவகாரங்கள் முதல் உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் வரை அலசிக்கொண்டேயிருப்பான்.

நிர்மலன் – இந்த இளம்வயதிலும் பழைய பஞ்சாங்கம்தான். கோயில் மணி அடித்தால் பிள்ளையாரின் அனைத்துப்பெயர்களையும் தன்னையறியாமல் வாயில் வரவழைப்பான். நெற்றியில் எப்போதும் நீறு துலங்கும்.

வவுனியாவுக்கு அப்பால் செல்லநேர்ந்தால் சிலவேளை அழித்துவிடுவானாக்கும் !

ஆனால், அப்படி ஒரு சந்தர்ப்பம் அவனுக்கு இன்னமும் வரவில்லை.

நான் – என்னைப்பற்றி சக நண்பர்களின் அபிப்பிராயம்  “பயந்தாங்கொள்ளி 

அப்பாவுக்கு, அண்ணாவுக்கு, அக்காவுக்கு , மச்சானுக்கு, குஞ்சியம்மாவுக்கு, குஞ்சியய்யாமாருக்கு,  இன்னும் இருக்கும் உறவினர்களுக்கெல்லாம் நான் பயந்தவனாம்.

நல்லவேளை அம்மா உயிரோடு இல்லையாம். இருந்திருந்தால் நான் அவவுக்கும் பயந்துகொண்டிருந்திருப்பேனாம்.

அதனால்தான் அவ முன்பே செத்துப்போனாவோ..?

அம்மா – நான் பிறந்து மூன்றாம் மாதமே போய்விட்டா.  அப்பா, அக்கா, அண்ணா அனைவருக்கும் நான் செல்லப்பிள்ளையானதால்தான் பயந்த பிள்ளையாக மாறிவிட்டேனா…?

 “ அவனுக்கென்ன… கொண்ணர் பிரான்ஸில… கொக்காவும் மச்சானும் வார மாசம் போகப்போயினம். அடுத்த ஃபிளைட்டில இவன்தானே போறான். அதுவரைக்கும் ஆசைதீர வந்து கார்ட்ஸ் விளையாடட்டுமேன்.  “ ஊர் துலவாரம் பேசும் குலேந்திரன் சொல்கிறான்.

 “ தேர்முட்டியில இருந்து கார்ட்ஸ் விளையாட வேண்டாமாம். வீட்டில எனக்கு எந்தநாளும் ஏச்சும் பேச்சும் திட்டும்தான். இங்க இருந்து விளையாடினால்  படிப்பு வராதாம்…. அக்கா சொல்றா…. அதுதான் நான் நேற்று வரயில்லை.  “ என்னை எதிர்பார்த்துக்காத்திருந்த நண்பர்களுக்குச் சொல்கின்றேன்.

என் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் அட்டகாசமாகச் சிரித்தனர்.  

கோயில் கிணற்றுக்கு தண்ணீர் அள்ளவந்த யாரோ உரத்துப்பேசுவது கேட்கிறது.

 “ கலி முத்திப்போச்சுது… தேர்முட்டியில அது என்ன பெரீய்ய


சிரிப்பு…? கேட்கப்  பார்க்க ஆளில்லாத ஊராய்ப்போச்சுது. 

இங்கே சிரிப்பு டப்பென அடங்கியது.

நிர்மலன் எழுந்தான். கிணற்றடியில் யார் நிற்பதென்று  பார்ப்பதற்கு.

 “ குந்தடா… பூசைக்கு மணி அடிக்க நேரமிருக்கு… ஏன் பொக்கட்டுக்குள்ள விபூதியை கொண்டு திரியேன்.   “ நெட்டையன் நெடுஞ்செழியன் நிர்மலனின் சேர்டில் பிடித்து அமர்த்தினான்.

 “ இல்ல… யார் எண்டு பார்த்தனான்….. “

 “ பார்த்திட்டியே… யார்…? 

 “ எங்கட சபாபதியார்தான். “    
 “  உவன்ட மாமா."- என்னைக் காட்டிச் சொல்கிறான் நிர்மலன்.

கார்ட்ஸ்களை பிரித்துக் கொண்டிருக்கிறான் குலேந்திரன். அதில் அவனுக்குக் கவனமிருந்தபோதிலும் வாய் ஓயவில்லை.

“ சபாபதியார் சொல்லுவார்தானே. இப்ப கலி முத்தித் தான் போச்சுது. அவர்ட பாஷையில். என்ர அம்மப்பாவ கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார். சபாபதியார்ட கொப்பர்தானே முந்தி இந்த கோயில் கிணத்துக் கட்டில்ல நின்று தண்ணி அள்ளி வாத்து விடுறவர். எங்கட சனம் எல்லாம் குடங்களை வரிசையா வைச்சுக் கொண்டு தவம் கிடக்குமாம்.  இப்ப… கோயில்ல  திருவிழா வந்தால் சாமி தூக்கிறதுக்கும் ஆளில்லாமல் கிழக்கில இருந்தும் எங்கட பெடியல்தான் வாரான்கள். இப்ப அதுக்கெல்லாம் எதிர்ப்பில்லாட்டியும் கருவிக் கொண்டு திரியிற ஆட்களைத் தெரியும் “எனக்கும் புரிகிறது குலேந்திரன் எங்கு நின்று அடிக்கிறான் என்று.

 அவன் பாவம். நல்லவன். "எங்கட பரம்பரைகள் அயல் சனத்துக்கு முந்தி செய்த அட்டூழியத்திற்குத்தான் இப்ப அனுபவிக்கிறம்   என்று அடுத்த வீட்டு பாக்கியம் ஆச்சி சொன்னது நினைவில் பட்டுத் தெறிக்கிறது.

 கார்ட்ஸ் கூட்டம் கலைந்து, சேர்ந்து, இணைந்து தர்மனே ஜெயித்துக் கொண்டிருக்கிறான்.

 " மகா பாரதத்தில் வரும் தர்மன் சூதாட்டத்தில் தோற்றாலும். . . எங்கட தர்மன் என்றைக்குமே தோற்க மாட்டான் இல்லையா நெடுஞ்செழியா..?'- இது நிர்மலன்.

 தர்மனை சீண்டிய நிர்மலன் என்னையும் வம்புக்கிழுக்கிறான்.

 “ டேய். . . ஒரு காலத்தில இங்க கார்ட்ஸ் விளையாடினவங்கள் இப்ப…. இங்க டாக்குத்தர்மாராயும் இஞ்சினியர்களாயும் இருக்கிறது உன்ர கொக்காவுக்குத் தெரியாதே...?"

   அதற்காக... நாங்களும் அப்படி வந்து விடுவோமா என்ன...” நானும் விடவில்லை.

 " படிக்கிற பிள்ளை… எங்க இருந்தாலும் படிக்கும். இது உன்ர கொக்காவுக்கு தெரியாதே."

   ஏனடா…. இப்ப.….அக்காவை இழுக்கிறாய்...?

பேக்கதை கதைக்கிறதை விட்டிட்டு சும்மா இருங்கோடா... “ தர்மன் விளையாட்டில் தீவிரத்தை ஏற்படுத்தப் பார்க்கிறானோ…?

 இப்போது மெளனம் நீண்டு கொண்டிருக்கிறது


. ஆறுமணியாகிவிட்டதை கோயில் மணியோசை சொல்லித் தான் அறிகிறோம்.

 விளையாட்டு முடியவில்லை.  தொடருகிறது. நிறுத்த முடியாத நிலை.

 நிர்மலன் எங்கள் மூவரையும் பார்க்கிறான். அந்தப் பார்வை என்னவோ செய்கிறது. வழக்கமான  வெற்றி தோல்வியை உணரத் துடிக்கும் பார்வையல்ல.

 " பஞ்சாங்கம் எழும்பாத. எழும்பாத ...”   என் வசமிருக்கும் கார்ட்ஸ்களைப் பார்த்துக் கொண்டு சொல்கிறேன்.

   அந்தா…. உன்ர கொக்கா வாரா..."

பதறியடித்துக்கொண்டு எழும்பிய என்னைப் பார்த்து மூவரும் அட்டகாசமாகச் சிரிக்கின்றனர். நிர்மலனின் தலையில் ஓங்கி அடிக்க வேண்டும்.

 அக்காவைக் காட்டியே என்னை இப்படிப் பயமுறுத்தி விடுவான்கள்.

   ராஸ்கல் 

 அதற்குள் அவன் எழுந்து விட்டான். விளையாட்டு கார்ட்ஸ்களைப் போன்று குலைந்தது. இனி நாளைக்குத் தான்.

 குடங்கள், கேன்களுடன் கிணற்றடியில் நின்றவர்கள் கோயில் வாசலில் 'அரோஹரா' சொல்வது கேட்கிறது.

 அப்பாவின் வழமையான புராண படனத்துடன் வீட்டின் இரவுப் பொழுது ஆரம்பிக்கிறது.

   மாட்டுக்குத் தண்ணி வைக்காமல் ஊர் சுத்திட்டு வாரீரோ….? “ கேட்டடியில் சண்டிக் கட்டுடன் நிற்கும் அப்பாவின் வரவேற்பு.

நான் தலையைக் குனிந்துகொண்டே வீட்டுக்குள் பிரவேசிக்கிறேன்.

 கெதியா பிரான்ஸுக்குப் போய்ச் சேர்ந்திடவேணும், அங்கேபோனால் மாட்டுக்குத் தீனி வைக்கத் தேவையில்லை. இங்குபோல் அங்கே  ஏச்சும் பேச்சும் கேட்கத் தேவையில்லை.

 அக்கா இரவுச் சாப்பாட்டுக்கு ஆயத்தப்படுத்துறா, அக்காவின் பிள்ளைகள் இரண்டும் கொப்பி பென்ஸில், புத்தகம் எண்டு பிடுங்குப்படுதுகள். இதுவும் அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்று.

 அக்கா குசினியிலிருந்து கத்துறா.

 “ தம்பி டேய்….அங்க என்னவென்று பாரடா நான் வந்த னெண்டால்…..என்ன நடக்கும் தெரியுமே..?”

 அக்கா… இப்படித்தான் எந்த நாளும் சொல்கிறா. ஆனால்,  ஒன்றும் நடப்பதில்லை.

 சின்னப்பிள்ளைகளாக இருந்தபோது அவவும் அண்ணாவும் சண்டை பிடித்திருப்பினம்தானே….அக்கா இப்ப அதை யெல்லாம் மறந்திருப்பா.  தேர்முட்டியில கார்ட்ஸ்                 விளையாடினவங்க இப்ப இங்கே இஞ்சினியராயும் டாக்குத்தராயும் இருப்பதையும் அவ மறந்திட்டா.  ஏன்..?  அண்ணாவும் ஒரு காலத்தில் அங்கே கார்ட்ஸ் விளையாடினவர்தானே? கெட்டா போனார்? இப்ப…பிரான்ஸ்ல நல்லா உழைக்கிறார்.

 அவர்ட உழைப்புத்தான் இப்ப அக்கா இருக்கிற சீதன வீடு , வளவு. அண்ணரிட உழைப்பைப் பார்த்துத்தானே சபாபதியார் தன்ர மகளைக் கொடுக்க முன்வந்தார்.

 டொனேஷனையும் சீதனத்தையும் அப்பா வாங்கிக் கொண்டு பொம்பிளைய அனுப்பி வைச்சினம், ஹோல் சுவரில் அண்ணாவும் மச்சாளும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர் வர்ணப்படமாக.

 அது பிரான்ஸ் கல்யாணம்.

ஓ. எல். லில் குண்டு போட்டவன்களும் "குதிரை ஓடின" வங்களும் பிரான்ஸ், ஜெர்மனியில என்னதான் செய்யிறான் களோ…?

 பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, யு. கே., நோர்வே, அவுஸ்திரேலியா.  இதுதான் இப்ப எங்கட ஊர் சனங்களிடம் அடிபடும் வார்த்தைகள்.

 யாரைச் சொல்லியும் குற்றமில்லை. ஆண் பிள்ளைகளை பெற்றதுகள், அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்குதுகள், அதை எப்ப இறக்கி வைக்கலாம் என்பதுதான் பிரச்சினை.

 காணியை கொடியை அடவு வைத்தாவது இந்த இளந் தாரிகளை வெளியில் அனுப்பத் துடிக்குதுகள்.

 அப்படி அடவு பிடித்துச் சேர்த்த பணத்தைத்தான் சபாபதியார் தன்ர மகளுக்கு-சீதனம் என்றும் டொனேஷன் என்றும் கொடுத்திருக்க வேண்டும்.

 சபாபதியார் பெரிய சுழியன்தான், காதோடு காது வைத்த மாதிரி காரியத்தை ஒப்பேத்திப் போட்டார். அப்பாவும் அந்த நோட்டுக்களைக் கண்டு, அம்மாவின் அண்ணன் வீட்டுக்கும் ஒரு வார்த்தை சொல்லாமல் அலுவல் பார்த்தார். இல்லையெண்டால் அப்பாவின்ர பாஷையில் அந்த குசேலர் கூட்டத்தையா அண்ணாவின்ர தலையில கட்டுறது.

இருந்தாலும் பாவம்.  இப்பத்தானே குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டுமென்று பிரசாரம்.  சுவரெங்கும் போஸ்டர்கள். முன்பு  இல்லையே..? கேட்டால்…. கடவுள் தாராரென்று சமாதானம் சொல்லுவினம்.

    என்னடா மாட்டுக்குத் தண்ணியை வைச்சிட்டு யோசிக்கிற?”   அக்கா அருகில் வந்து நின்று கத்தும்வரையில் அவ வந்ததும் தெரியாது.

   ஓம்….என்ன…..? குடிச்சு முடியுமட்டும் நிற்கிறன்."

 " புண்ணாக்கு அடியில் நிற்குது.  நல்லா கலக்கிவிடு “   என்ற அக்கா மீண்டும் குசினிக்குள் போய்விட்டா.

 இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தாவாக்கும்.

   கெதியா காலை முகத்தை கழுவிப்போட்டுவா.  நான் ஒருக்கா சபாபதி மாமா வீட்ட போகவேணும்."

 குசினிக்குள் போயும் அக்கா ஓயவில்லை.

மீண்டும் வந்து மெதுவாக சொல்கிறா,    டேய் அந்த ஆளிட்ட கொஞ்சம் காசு கேட்டிருந்தனான். ஃபிளைட் அநேகமாக இந்த மாதம்  மிடில்ல கிடைக்கும் எண்டு மச்சான் கொழும்பில இருந்து கடிதம் போட்டிருக்கிறார். காசுக்கும் ஒழுங்கு பண்ணட்டாம். “

 அக்கா இது விசயத்தில் சபாபதியார் வீட்டு வாசற் படியை மிதிப்பது எனக்குக் கொஞ்சமும் பிடித்தமில்லை.

இருந்தும் சொல்லிப் பார்ப்போம்.

   அது முறையில்ல அக்கா.  பெண் எடுத்த வீட்டில. எதுக்கெடுத்தாலும் கை வைக்கிறதே."

   பொத்தடா வாயை….பெரிய கிழவனாட்டம் பறயத் தொடங்கிட்டார்.”

 " அப்படி நான் சொல்லயில்லை அக்கா.  பாக்கியம் ஆச்சி சொன்னாலும் சொல்லுவா. “   என் தலையைக் காப்பாற்ற ஆச்சி தலையில் போடுகிறேன், பாவம் ஆச்சி.

 " ஏன்….? அவவுக்கும் போய் சொல்லிட்டியே….?  வெளியில போற விசயம் இன்னும் அப்பாவுக்கும் தெரியாது."

 " ஏன் அக்கா மறைக்க வேணும்? இன்னும் நீங்க சொல்ல இல்லையே….? “ 

    டேய் எது நடந்தாலும் நாலு சுவருக்குள்ளதான் இருக்க வேணும். பிறகு இந்தச் சனங்கள் நாவூறுப்படுங்

களடா… சொன்னால்…..பாக்கியம் ஆச்சிக்குத் தெரிந்தால்…..

பிறகு அது பேப்ரில போட்ட மாதிரித்தான். எல்லாம் ஃபிக்ஸ்ட் பண்ணி டிக்கட்டும் ஒ. கே. ஆனபிறகு சொல்லிட்டுப் போறதுதானே…? அதற்கு முன்பே பறைதட்டச் சொல்லுறியே…?“

 அக்கா அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை.

சபாபதி மாமா வீட்டுக்குப் போக வேண்டுமென்ற அவசரத்தை அவவின் செயல்கள் உணர்த்தின.

 சபாபதி மாமா அப்பாவிடம் அண்ணாவுக்காகக் கொடுத்த டொனேஷன் அப்படியே வங்கியில் தூங்குகிறது. வரும் வட்டி அப்பாவின் தேவைகளைக் கவனிக்கிறது.

இந்தச் சமூகமே இப்படித்தான்.

 குலேந்திரன் அதுபற்றி அடிக்கடி சொல்வான். தந்தையானாலும் பிள்ளையானாலும் ஏதேனும் முதலை அடிப்படையாகக் கொண்ட உறவுதான் இங்கு வளர்ந்திருக்கிறது. ஆண்பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்டால்,  அவனை நல்ல விலைக்கு விற்று விடலாம் என்ற நப்பாசை.

 எவளையும் காதலித்து சீதனம் வாங்காமல் அழைத்துக் கொண்டு ஓடிவிட்டால், " சாவிலும் முழிக்காதே    என்ற சாபம். எல்லாமே தேவைகளைப் பொறுத்துத்தான்.

 அக்கா பணத்திற்கு அடிபோடுறா.  மச்சான்ட உழைப்பு போதாதாம். அண்ணாவின் பிரான்ஸ்  உழைப்பு அவவ இந்த நிலைக்கு மாற்றிவிட்டது. மச்சானையும் இழுத்துக் கொண்டு பிரான்ஸுக்குப் போய்விட்டால்,  தானும் அவரும் சேர்ந்து மேலும் உழைக்கலாமாம். வளர்ந்து வரும் அவட பெண் பிள்ளைக்கு இப்பவே சீதனம் சேர்க்க அத்திவாரம் போடப்போறா.  அதுக்காக அண்ணாவுக்கு சீதனம் கொடுத்த சபாபதி மாமாவிட்ட போய் கையேந்த வேணுமா?

 இதையெல்லாம் என்னால் நினைக்க மட்டும் தானே முடிகிறது. யாரிடம் போய் சொல்வது? சொன்னால் குலேந்திரனுடன் சேர்ந்து கெட்டுப்போய்விட்டதாகச் சொல்வார்கள்.

 அக்கா வீட்டில் இல்லையென்ற துணிவில் அவவின் புத்திர பாக்கியங்கள் இரண்டும் அடுத்த வீட்டுக்கு ரி. வி. பார்க்கப் போயிட்டுதுகள்.

 அப்பா,  செல்லன் வீட்டுக்கு தாகசாந்திக்காகப் போய் விட்டார்.

கேட் திறக்கும் சத்தம் கேட்கிறது. போய்ப் பார்க்கிறேன். அக்கா வாரா.

 என்ன கெதியா வந்திட்டா . சபாபதி மாமா இல்லையோ…? முகம் வாடியிருக்கிறதே.

 'பளார்'-  அப்படியொரு அறை என் வாழ்வில் கிடைத்ததே இல்லை. அக்கா ஏற்கனவே நல்ல சிவப்பு. இப்போது முகத்தில் குங்குமத்தைக் கொட்டியது போல்.

   என்னக்கா…? "நான் உரத்தே கேட்கிறேன்.

   டேய் சேரக் கூடாததுகளோட சேர்ந்து கார்ட்ஸ் விளையாடப் போறது. போறதோடு நிற்கிறதில்லை. கோயிலடி எண்டும் பார்க்காமல் கூத்தடிக்கிறது. மாமா முதல்ல உன்னைத் திருத்தட்டாம். அதன் பிறகு காசு கேட்டு வரலாம் என்கிறார். பாரடா உன்னால் கிடைக்க இருந்த காசும் கிடைக்கயில்லை. “

 அக்கா வெடித்துச் சிதறிய விம்மலுடன் உள்ளே போனா,

'சேரக் கூடாததுகள்.' அக்கா யாரைச் சொல்றா. குலேந்திரனையா..?

 முகம் அறியாத அம்மாவைத்தான் இப்போது என்னால் நினைக்க முடிகிறது. அம்மா….  அவ சுவாமி அறையில் கடவுளாகி படமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறா.

 

 பொங்கும் பூம்புனல் துயிலெழுப்புகிறது. அங்கர் பாலுக்கும் கிருமிநாசனிக்கும் மாறிமாறி விளம்பரம். என்ன அற்புதமான விளம்பரம்,

 இரவு அக்கா கன்னத்தில் அறைந்தது இன்னமும் லேசாக வலிப்பது போன்ற உணர்வு.

 வெளியே பூவரசுகளின் சல்லாபம் காற்றுடன், அந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும்போல் ஒரு திடீர் ஆசை. பிரான்ஸில் இப்படியொரு இதமான காற்று வீசுமா…?  பூவரசுகளின் சரசரப்பு கேட்குமா.  அந்த கோயில் மணியின் நாதம்.  இதெல்லாம் அங்கே கேட்கவா போகிறது?

 வெளியே நாய் குரைக்கும் சத்தம். யாரோ கேட்டடியில் நிற்கிறார்களாக்கும்.  எழுந்து போய் பார்க்கிறேன். நெட்டையன் நெடுஞ்செழியன் சைக்கிளுடன் தயங்கி நிற்கிறான்.

 “ லக்கி. உள்ளே போ….ம்…..உள்ளே போ.                                                         என்னடாப்பா…? .காலையிலேயே வந்திட்டாய்?"

   டேய் இங்க வாடா. எங்கட குலேந்திரனைக் காணயில்லை. தாய் அழுது ஒப்பாரி வைச்சுக் கொண்டிருக்கிறா. காலையில கேள்விப்பட்டுப் போய்ப் பார்த்திட்டு நேரே உன்னிட்டத்தான் வாரன்."

 " குலேந்திரனுக்கு என்னடா நடந்திருக்கும்?" "அதைத்தான் நானும் கேட்கிறன்?' நான் அவனது முகத்தையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

 அவனது கண்கள் கலங்கியிருக்கின்றன. கோயில் மணி மீண்டும் நாதமெழுப்புகிறது. இன்று மாலை தேர்முட்டி வெறிச்சோடிப் போயிருக்கும்.

 

( வீரகேசரி ஜூலை 1985 )

 

-----0----

( தொடரும் )

 

letchumananm@gmail.com

 

 

 

 

No comments: