எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன் “ என்னும் பன்முக ஆளுமை ! குமுதம், தினமணிக்கதிர், இந்தியா டுடே, புதிய தலைமுறை இதழ்களின் முன்னாள் ஆசிரியர் ! ! முருகபூபதி


“ என் ஜன்னலுக்கு வெளியே நெடிதுயர்ந்து நிற்கும் வேம்பு, கடந்து போகும் காற்றின் சிலிர்ப்பில் பூக்களை உதிர்க்கிறது. வானின்று இறங்கும் நட்சத்திரங்களைப் போல அந்த வெண்பனிப்பூக்கள் காற்றில் சுழன்று சுழன்று தரையிறங்குகின்றன. வாசல் கோலத்தில் சில  வந்தமர்கின்றன. இன்னும் சில, கோலமிடும் முன் தெளிக்கக் கொணர்ந்து, மீந்து , விசிறியயடிக்கப்பட்டு சிறு திட்டாகத் தேங்கியிருக்கும் நீரில் விழுந்து நீந்துகின்றன. ஒரு குழந்தையின் குதூகலத்தோடு ஓடித்தண்ணீரில் விழுந்த அந்தப்பூக்களைக் கூர்ந்து நோக்கக் குனிகின்றேன். என்னைப்போன்ற ஆர்வத்தோடே அந்த வானத்து முகிலும் முகம் பார்க்கக் குனிந்திருக்கவேண்டும். பூக்களுடே அதுவும் ஒரு பூவாய் அதன்  நிழலும் மிதக்கிறது நீரில் “

இந்த வரிகள் ஒரு சிறுதையிலோ, அல்லது நாவலிலோ இடம்பெறவில்லை.  புனைவு சாரா பத்தி எழுத்திலும் அழகியலும் அர்த்தமும் கொண்ட  இந்த வரிகள் வரவில்லை.

ஆனால், வந்திருப்பது புலம் பெயர்ந்தவர்களின் சில கவிதைகளை தேர்வுசெய்து தொகுத்து அதற்கு புவியெங்கும் தமிழ்க்கவிதை எனத்தலைப்பிட்டுள்ள ஒருவரிடமிருந்து.

      அவர்தான்  தமிழ்  கலை, இலக்கிய, இதழியல்  சூழலில் நன்கு அறியப்பட்ட , கவனத்திற்குள்ளான எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமைகொண்ட மாலன்.

கொமன் வெல்த் நாடுகளில் வதியும் இலக்கியவாதிகளை ஒன்றிணைத்து தமிழுக்கும் இலக்கியத்திற்கும் ஏதாவது ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்று நெடுநாட்களாக சிந்தித்து வருபவர்.

2019 ஆம் ஆண்டு இந்திய சாகித்திய அகாதெமிக்காக மாலன்


தொகுத்து வழங்கியிருக்கும் புவி எங்கும் தமிழ்க்கவிதை என்ற அரிய தொகுப்பு நூலில் கவிதைகளுக்கு முன்னால் சில சொற்கள் என்ற தலைப்பில் மாலன்  எட்டுப்பக்கங்களில் எழுதியிருக்கும் நீண்ட முன்னுரையின் தொடக்கத்தில்தான் இங்கு இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் வரிகள்.

மாலனின் எழுத்துக்கள்,  அவரது ஜனகண மன நாவலின் ஊடாகவே எனக்கு 1990 களில் முதலில் அறிமுகமானது.  தமிழகம் சென்றிருந்த அக்காலப்பகுதியில் அதனை சென்னையில் வாங்கி வந்து ,  விமானப்பயணத்திலேயே   ஒரு மணிநேரத்தில் படித்து முடித்துவிட்டேன். அவ்வளவு சிறிய நாவல். ஆனால், அதன் உள்ளடக்கம் கனதியானது.   மகாத்மா காந்தியையும், அவரைச்சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயையும் மறுவிசாரணைக்கும் மீள் வாசிப்புக்கும் உட்படுத்துகிறது.

மெல்பன் வந்து சேர்ந்ததும், படித்தோம் சொல்கிறோம் என்ற பத்தியின் தலைப்பினை  முதலில் தீர்மானித்து,  நான் எனது வாசிப்பு அனுபவத்தை எழுதிய முதல் நூல் மாலனின் குறிப்பிட்ட ஜன கண மன நாவல்தான்.

அந்தப் பத்தி,  பாரிஸ் ஈழநாடு இதழில் வெளியானது. ஆனால், காலம் கடந்துதான் மாலன் அந்தத் தகவலையும் அறிந்தார். அதன் பத்திரிகை நறுக்கையும் கண்டுகொண்டார்.

தமிழக   எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், கி. வா. ஜகந்நாதன், அகிலன்,


தொ. மு.சி. ரகுநாதன், சுந்தர ராமசாமி,  கோவை ஞானி,  தி. க. சிவசங்கரன், இந்திரா பார்த்தசாரதி, கி. ராஜநாராயணன், சுஜாதா,  அசோகமித்திரன்,  ராஜம் கிருஷ்ணன்,  தமிழச்சி சுமதி தங்கபாண்டியன், சிட்டி சுந்தரராஜன், கு. சின்னப்ப பாரதி,  பாலகுமாரன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சித்தன்,  மற்றும்  கலைஞர்கள் குணசேகரன், பரீக்‌ஷா ஞாநி, பாலு மகேந்திரா முதலானோர் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும், இந்தப்பட்டியலில் மாலன் எப்படியே தவறவிடப்பட்டிருந்தாலும்,  அவரது நாவல் ஜன கண மன பற்றி இங்கு சொல்லப்பட்டவர்கள்   தொடர்பாகவெல்லாம்  எழுதுவதற்கு முன்பே பதிவுசெய்துவிட்டிருக்கும் திருப்தியுடன் தற்போது,  நான்  முன்னர் எழுதத்தவறிய குறிப்புகளுக்குள் வருகின்றேன்.

பின்னாளில் திரைப்பட இயக்குநராகவும் மிளிர்ந்த வசந்த், மற்றும்  ஜனரஞ்சக எழுத்தாளரும் நாயகன், குணா, ஜென்டில் மென் உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவருமான பாலகுமாரன் ஆகியோருடன் சாவி நடத்திய  வார இதழில் பணியாற்றியிருக்கும் மாலன்  மாத்திரம் தொடர்ந்தும் இதழியல் துறையில்  சாதனைகளை நிகழ்த்தியவர்.

ஏனைய இருவரில்   பாலகுமாரன்,  இயக்குநர் பாலச்சந்தர்,  பாக்கியராஜ் ஆகியோருடன் பணியாற்றிவிட்டு, சினிமா பக்கத்தை விட்டு ஒதுங்கி வந்து உடையார் என்ற பெரிய நாவலை எழுதினார்.

வசந்த் இதழியலிலிருந்து ஒதுங்கி,  முழுநேர திரைப்பட இயக்குநரானார்.

எனினும், மாலன் சினிமாத்துறைக்குள் செல்லாமல், தொடர்ந்தும் இதழியலில் ஈடுபட்டார். அதற்கு   அவரிடமிருந்த  உள்ளார்ந்த  படைப்பிலக்கிய ஈடுபாடும்  ஊடகத்துறை மீதிருந்த ஆர்வமும்தான் அடிப்படைக்காரணம் எனலாம்.

1965 களில் சி. சு. செல்லப்பா வெளியிட்ட எழுத்து இதழில் தனது 


பாடசாலைப் பருவத்திலேயே கதைகள், கவிதைகள் எழுதி வளர்ந்திருக்கும் மாலனுக்கு இந்த ஆண்டு ( 2021) செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி 71 வயது பிறந்த தினம்.

அவரை வாழ்த்தியவாறு இந்தப்பதிவை தொடருகின்றேன்.  தனது முழுக்கவனத்தையும் மாலன் இதழியல் துறையில் செலுத்தியமையால், இந்தத்துறையில் படித்து பட்டமும் பெற்றார்.

இந்தியா டுடே ( தமிழ் ) தினமணிக்கதிர், குமுதம், குங்குமம், புதிய தலைமுறை முதலான இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். அத்துடன் புதிய தலைமுறை, சன் முதலான தொலைக்காட்சிகளிலும் செய்தி ஆசிரியராக பங்களித்திருப்பவர். கணையாழி இலக்கிய சிற்றேட்டின் ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தவர்.

திசைகள் என்ற இணையவழி இதழையும் நடத்தியவர். இதில்தான் ஜெர்மனியில் வதியும் எழுத்தாளர் கருணாகரமூர்த்தியின் பெர்லின் இரவுகள் தொடரும் வெளியானது.

ஈழ அரசியல், ஈழ இலக்கியம், உட்பட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் தொடர்பாக கூடுதல் கவனத்தையும் கொண்டிருக்கும் மாலன்,  இந்திய சாகித்திய அகடமியிலும் அங்கம் வகிக்கின்றார்.

அமெரிக்காவில் புளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றிருக்கும் மாலன்,  அக்காலப்பகுதியில்  கனடாவுக்கும் சென்று அங்கு வாழும் எமது ஈழத்து எழுத்தாளர்களையும் சந்தித்துவிட்டு, அவுஸ்திரேலியாவுக்கும் வந்து சென்றார்.

சிட்னியில் எஸ். பொன்னுத்துரை, மாத்தளை சோமு ஆகியோர் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்விலும் பங்குபற்றி உரையாற்றியவர்.

அந்தப்பயணத்தில் மாலன் மெல்பன் வந்தசமயம், இங்கு மருத்துவர் பொன். சத்தியநாதன் நடத்திய தமிழ் உலகம் – Tamil World ஆசிரியர் குழுவிலிருந்த எழுத்தாளர் பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசா, மாலனைச்சந்தித்து  தமிழக அரசியல் நிலைவரங்களை நேர்காணலாக எழுதினார்.

அத்துடன் நானும் நண்பர் அக்கினிக்குஞ்சு ஆசிரியர் யாழ். பாஸ்கரும், இலக்கிய சகோதரி அருண். விஜயராணியும் மாலனைச்சந்தித்து உரையாடினோம்.

அருண். விஜயராணி கடந்த 2015 இல் திடீரென மறைந்த செய்தி அறிந்த மாலன், தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருந்தார்.

புலம்பெயர்ந்தவர்களின் படைப்புகளை தொகுக்கும் பணியை இந்திய சாகித்திய அகடமியின் ஊடாக முன்னெடுத்திருக்கும் மாலன், முதலில் ஒரு கதைத் தொகுப்பினையும் பின்னர் கவிதைத் தொகுப்பினையும் தீவிர தேடலுக்கு மத்தியில் வெளியிட்டார்.

ஊடகத்துறை சார்ந்த எழுத்தாளுமைப் பண்பினால் இந்தியப் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், மற்றும் ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் ஆகியோர் வெளிநாடுகளுக்கு சென்றவேளைகளில் அவர்களுக்கான செய்தியாளர் குழுவிலும் இடம்பெற்றிருந்தவர்.

மொழிபெயர்ப்பு ஆற்றலும் மிக்க  மாலன் பற்றி தமிழ் விக்கிபீடியாவிலிருக்கும் மேலதிக தகவல்களையும் இங்கே பதிவேற்றுகின்றேன்.

இவரது சிறுகதைகள்  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்,  சமகால இலக்கியத்திற்கான நூலாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதுநிலை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இவரது படைப்புக்கள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் நான்கு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.

சிங்கப்பூர் அரசு நிறுவனமான சிங்கப்பூர் தேசியக் கலைமன்றத்தின்  ஆதரவில் நடைபெறும் எழுத்தாளர் வார நிகழ்ச்சிக்கும், தேசிய நூலக வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட்டவர்.

சாகித்ய அகாதெமி , லலித் கலா அகாதெமி ஆகியவற்றின் பொதுக் குழு உறுப்பினர். ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையின் உறுப்பினர்.  சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில்  இந்திரா காந்தியின் அவசரகால  நிலைக்கு எதிராக இவர் எழுதிய கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, டஃப்ட் பல்கலைக் கழக அமெரிக்கப் பேராசிரியர் ஆலிவர் பெரி தொகுத்த  நூலில் (Voices of Emergency) இடம் பெற்றுள்ளது.

இவரது சிறுகதைகள் சீனம், மலாய் , பிரெஞ்சு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இலஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, டெக்கான் ஹெரால்ட், இந்தியா டுடே ( மலையாளம்), மாத்ருபூமி (மலையாளம்), விபுலா (இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. 

கல்கத்தா எழுத்தாளர்கள் பயிலரங்கு (Writers Workshop) தனது ஆங்கிலத் தொகுப்பில் இவரது கதைகளை வெளியிட்டிருக்கிறது.

தமிழக அரசின் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கும்  மாலன் பற்றிய இந்தப்பதிவினை படிக்கும் வாசகர்களுக்கு மற்றும் இரண்டு தகவல்களை இங்கே தருகின்றேன். 

நீங்கள் கமல்ஹாசனின் விருமாண்டி திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா..? அதில் இறுதிக்காட்சியில்  மரணதண்டனை வழங்குவது தொடர்பாக கமலிடம் உரையாடுபவராக மாலன் தோன்றுகிறார்.

வசந்த் இயக்கிய அர்ஜுன் – மீனா – ஜோதிகா நடித்த  ரிதம் படத்தில்,  மும்பாயில்   மீனா பணியாற்றும் வங்கியில் மாலன் எழுதிய இறகுகளும் பாறைகளும் கதைத் தொகுப்பு காணப்படும்.

தமிழக எழுத்தாளர்கள் அகிலனின் பாவை விளக்கு, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் முதலான நூல்களும் தமிழ்த்திரைப்படங்களில்  முக்கிய காட்சிகளில் தோன்றியிருக்கின்றன.

மாலன் பற்றிய இந்தப்பதிவில், இந்தத் தகவல்களை கொசுறுச் செய்திகளாக பாருங்கள்.

கடந்த 02 ஆம் திகதி அவுஸ்திரேலியா  மெல்பன் – கன்பராவிலிருந்து நடத்தப்பட்ட மெய்நிகர் அரங்கில் மாலன்    இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியம்  என்னும் தலைப்பில் விரிவான உரை நிகழ்த்தினார்.

 

----0---

No comments: