உலகச் செய்திகள்

 முறைகேடு வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை

வடகொரியா புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சி சோதனை

ஈக்வடோர் சிறையில் குற்ற கும்பல்கள் இடையே மோதல்: 116 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் எரிமலைக் குழம்பு கடலில் கலந்ததினால் அச்சம்

தம்மை இறைதூதரென கூறிய பெண்ணுக்கு மரண தண்டனை

இஸ்ரேலிய இராணுவத்தால் 4 பலஸ்தீனர் சுட்டுக்கொலை


முறைகேடு வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை

முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கொலஸ் சர்கோஸிக்கு (66) அந்த நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2007 முதல் 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த சர்கோஸி, 2012இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். அப்போது, அனுமதியளிக்கப்பட்ட 2.25 கோடி யூரோவை விட அதிகமாக இரு மடங்கு தேர்தல் நிதி திரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய பாரிஸ் நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. அந்த ஓராண்டில் மின்னணு கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட கைவளையத்துடன் அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தாம் தவறு செய்யவில்லை என்று மறுத்து வரும் சார்கோஸி தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். நீதி மற்றும் உண்மையைத் தேடி, உரிமைக்காக இறுதிவரை போராடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக சர்கோஸியின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 




வடகொரியா புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சி சோதனை

வட கொரியா இந்த மாதத்தில் தனது நான்காவது ஏவுகணைச் சோதனையாக கடந்த வியாழக்கிழமை புதிய விமான எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை சோதித்ததாக குறிப்பிட்டுள்ளது.

அணு சக்தித் திறன் கொண்டதாக நம்பப்படும் புதிய அதிவேக ஏவுகணை ஒன்றை வட கொரிய சோதித்து ஒருசில நாட்களிலேயே இந்தப் புதிய ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது.

இந்த ஏவுகணைச் சோதனை பெரும் ஸ்திரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்தோனி பிளிங்கன் எச்சரித்துள்ளார். ஐ.நா பாதுகாப்புச் சபை முன்வைத்த தீர்வுகளை வட கொரியா மீண்டும் மீண்டும் மீறுவது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார். தற்பாதுகாப்புக்கு இந்த ஆயுதங்கள் தேவைப்படுவதாக வட கொரியா குறிப்பிடுவதோடு, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக குற்றம்சாட்டியது.

கடும் தடைகளுக்கு மத்தியிலும் வட கொரியா தனது ஆயுதங்களை மேற்படுத்தும் செயற்பாட்டை குறைப்பதில்லை என்பதையே இந்த புதிய சோதனைகள் காட்டுகின்றன. புதிய விமான எதிர்ப்பு ஏவுகணை பெரிய அளவிலான போர் செயற்பாடுகளை வெளிக்காட்டியதாகவும் இதில் புதிய முக்கிய தொழில்நுட்பங்கள் உள்ளடக்கப்பட்டதாகவும் வட கொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ குறிப்பிட்டுள்ளது.

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், அண்டை நாடான தென் கொரியாவுக்கு அமைதிக் கரம் நீட்டுவது போன்று, அந்த நாட்டுடனான முக்கிய அவசர தொலைபேசி இணைப்பை ஏற்படுத்த விரும்புவதாக கூறி இருக்கும் சூழலேயே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.    நன்றி தினகரன் 





ஈக்வடோர் சிறையில் குற்ற கும்பல்கள் இடையே மோதல்: 116 பேர் உயிரிழப்பு

ஈக்வடோர் சிறைச்சாலையில் போட்டி குற்ற கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது அந்நாட்டில் இடம்பெற்ற மோசமான சிறை வன்முறையாக உள்ளது.

குவாயாகுயில் என்ற நகரில் உள்ள சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட இந்த மோதல்களில் குறைந்தது ஐந்து கைதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதோடு ஏனையவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது கைதிகள் கைக்குண்டுகளையும் வீசி எறிந்திருப்பதாக பொலிஸ் கொமாண்டர் பவுஸ்டோ பியுனானோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச போதைக்கடத்தல் கும்பல்களுடன் தொடர்புபட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த சிறையின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவர முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக 400 பொலிஸார் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது ஈக்வடோரில் இயங்கி வரும் பலம் மிக்க மெக்சிகோ போதைக் கடத்தல் கும்பல்களாலேயே இந்த கலவரம் ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலைமை பயங்கரமாக இருந்ததாக ஈக்வடோர் சிறைச்சாலைகள் சேவை பணிப்பாளர் பொலிவர் கார்சோன் உள்ளூர் வானொலிக்குத் தெரிவித்துள்ளார்.

‘நேற்று பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும், கடந்த இரவிலும் துப்பாக்கிச் சூடுகள், வெடிப்புகள் இடம்பெற்றன. இன்று (புதன்கிழமை) காலை நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் நாம் உள்ளே சோதனை இட்டபோது மேலும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன’ என்று அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக போட்டி கும்பல்களுக்கு இடையே இடம்பெறும் மோதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற இது போன்ற மோதலில் 79 கைதிகள் கொல்லப்பட்டனர்.

தற்போதைய மோதல் இடம்பெற்ற லிடோரல் சிறைச்சாலை நாட்டில் உள்ள மிக அபாயகரமான சிறையாக பார்க்கப்படுகிறது.

சிறையின் ஒரு பகுதியில் இருக்கும் கைதிகள் மற்றைய பகுதிகளுக்கு துளைகள் மூலம் ஊடுருவி தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேலும் 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து ஜனாதிபதி கில்லர்மோ லசோ, சிறைச்சாலை கட்டமைப்புகளில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.   நன்றி தினகரன் 





ஸ்பெயின் எரிமலைக் குழம்பு கடலில் கலந்ததினால் அச்சம்

ஸ்பெயின் நாட்டின் ஆளுகையின் கீழ் உள்ள லா பல்மா தீவில் நடந்த எரிமலை வெடிப்பின் போது வெளியிடப்பட்ட எரிமலை குழம்புகள் அட்லாண்டிக் பெருங்கடலை சென்றடைந்துள்ளன.

இதன் காரணமாக நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படலாம் என்றும் வெடிப்புச் சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் அச்சங்கள் எழுந்துள்ளன.

ப்லாயா நூவே எனும் இடத்தில் செந்நிறத்தில் உள்ள எரிமலை குழம்பு கடலில் கலக்கும் இடத்தில் வெள்ளை நிற ஆவி மேகம் போன்று வெளியிடப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக தூண்டப்படும் இரசாயன நிகழ்வுகள் மனிதர்களின் தோல் மற்றும் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்குவதுடன் சுவாசக் கோளாறுகளையும் உண்டாக்கலாம்.

கெனரி தீவுகளில் செப்டம்பர் 19ஆம் திகதி எரிமலை வெடிப்பு நிகழ்ந்த பின்னர் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 6 ஆயிரம் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.    நன்றி தினகரன் 




தம்மை இறைதூதரென கூறிய பெண்ணுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் தம்மை இறைதூதர் என்று கூறிய பாடசாலை ஒன்றின் பெண் அதிபருக்கு லாஹூர் நகர உள்ளூர் நீதிமன்றம் ஒன்று மரண தண்டை விதித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சல்மா தன்வீர் என்ற பெண்ணுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரச தரப்பு வழக்கறிஞரால் முடிந்திருப்பதோடு அவர் குற்றச்செயலில் ஈடுபடும்போது நல்ல மனநிலையில் இருக்கவில்லை என்பதை நிரூபிக்க பிரதிவாதிகள் தவறியுள்ளனர்.

இதனை அடுத்து அவரை சாகும்வரை தூக்கிலிடுவதற்கு உத்தரவிட்டிருக்கும் நீதிபதி 50,000 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.

சல்மா 2013 ஆம் ஆண்டு தாம் இறைதூதர் என்றும் முஹமது நபி இறுதித் தூதர் என்பதை மறுத்தும் பிரசுரம் ஒன்றை எழுதி தமது பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் பொலிஸில் முறையிட்டதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   நன்றி தினகரன் 





இஸ்ரேலிய இராணுவத்தால் 4 பலஸ்தீனர் சுட்டுக்கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் மற்றும் ஜெரூசலம் பகுதிகளில் இஸ்ரேல் இராணுவம் இரவு நேரத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புச் சோதனையின்போது நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வட மேற்கு ஜெரூசலத்தின் பித்து கிராமத்தில் மூன்று பலஸ்தீனர்களும் வட மேற்கு ஜெனினில் புர்கின் என்ற கிராமத்தில் மற்றொரு பலஸ்தீனரும் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐந்தாவது ஒரு பலஸ்தீனரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானபோது அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் முஹமது ஹலில் தெரிவித்தார். இதில் மூன்று பலஸ்தீனர்களின் உடல்கள் இஸ்ரேலின் பிடியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் சுற்றிவளைப்புத் தேடுதலின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையிலேயே இந்த பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரு இஸ்ரேலிய படையினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் சுற்றிவளைப்புகள் அண்மைய மாதங்களில் நாளாந்த நிகழ்வாக மாறியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற இவ்வாறான சம்பவத்தில் இஸ்ரேல் இராணுவத்தால் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.   நன்றி தினகரன் 




No comments: