தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் “ திறனாய்வுச் செம்மல் “ விருது ( 2021) பெற்ற பேராசிரியர் க. பஞ்சாங்கம் விருது பெற்றவரின் ஏற்புரை

மாண்புமிகு துணைவேந்தர் அவர்களே! மேதகு பதிவாளர்


அவர்களே! மற்றுமுள்ள நிர்வாகத் துறைப் பெருமக்களே! மதிப்பிற்குரிய பல்துறை சார்ந்த பேராசிரியர் நண்பர்களே! பெரிதும் போற்றத் தக்க முறையில் இலக்கியத் திறனாய்விற்கு என்றே ஒரு விருதினைத் தருவதற்கென்று பேரா. ந.சுப்புரெட்டியார் கல்வி அறக்கட்டளை நிறுவியுள்ள அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பேருள்ளம் கொண்டவர்களே! மாணவச் செல்வங்களே! கூடியிருக்கும் சான்றோர் பெருமக்களே! உங்கள் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். முதலில் திறனாய்வுச் செம்மல் விருதிற்கு என்னைத் தேர்ந்தெடுத்த துணைவேந்தர்க்கும் தேர்வுக் குழுவில் இருந்த அறிஞர்களுக்கும் எனது அன்பான நன்றியை உரித்தாக்குகிறேன்.

இலக்கியத் திறனாய்விற்கென்று தனியாக ஒரு விருது


வழங்குவது தமிழகத்தில் பெரிதும் அரிது; எனக்குத் தெரிய “மேலும் விருது” என்று தான் நடத்திய சிறுபத்திரிகை பெயரில் பேராசிரியர் சிவசு அவர்கள் ஆண்டுதோறும் ஒரு திறனாய்வாளருக்கு விருது வழங்கி வருகிறார். (ரூ. 25,000) அது போலவே புதுச்சேரியில் என்னுடைய பெயரில் “பஞ்சு பரிசில்” என்று பிரான்சில் வாழும் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் திறனாய்வாளருக்கு விருது வழங்கிக் கொண்டு இருக்கிறார். (ரூ.10000). பல்கலைக்கழக அளவில் “திறனாய்வுச் செம்மல்” என்ற பெயரில் வழங்கப்படுவது இதுவே முதன்முறை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமைப்படத் தக்க ஒன்று என்று இதை நான் கருதுகிறேன்.

ஏனென்றால் இலக்கியப் படைப்பு என்பது அது ஒரு பிரதியாக (Text) இருக்கும் வரை ஊமையாகத்தான் கிடக்கிறது; அது குறித்த பல்வேறு கோணத்தில், வகை வகையான கோட்பாட்டு நோக்கில் திறனாய்வாளர்கள் உரையாடும்போதுதான் ஒரு படைப்புப் பேசத் தொடங்குகிறது. எனவே, இலக்கியப் படைப்பிற்கு வாயாக அமைந்து அதை வளர்த்தெடுத்தவர்கள் திறனாய்வாளர்கள்தான். ஒரு பிரதியைக் குறித்துப் பல்வேறு பிரதிகளை உற்பத்தி செய்வது விரிவுபடுத்துபவர்கள் இவர்கள்தான். ஆனால், இலக்கிய வெளியில் அவர்களுக்கான முக்கியத்துவம் இல்லை என்பது எவ்வளவு பெரிய நகைமுரண். மொழிபெயர்ப்பாளருக்கும் இதே கதைதான்.

இலக்கியக் கல்வி என்பது இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, இலக்கியக் கோட்பாடு, இலக்கிய வரலாறு ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்தது.  தமிழின் தொடக்க காலத்திலேயே இந்த உண்மை நன்றாக உணரப்பட்டிருக்கிறது என்பதற்குத் தொல்காப்பியமே நம்முன் சான்றாக நிற்கிறது. “முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணித் திறனாய்வு செய்ததில் இருந்து கிடைத்த விடைகளைக் கோட்பாடாக்கித் தருவதும், பிறகு அந்தக் கோட்பாட்டு அடிப்படையில் இலக்கியம் படைப்பதும், இப்படி உருவான படைப்பின் வகை தொகைகளை அறிய இலக்கிய வரலாறு எழுதுவதுமென ஒன்றையொன்று சார்ந்து செயல்பட்டுள்ளன. இடைக்காலத்தில் நன்னூல் காலம் வரை தமிழ் மரபில் இது தொடர்ந்து வந்துள்ளது. அதனால்தான் பழைய பிரதிகளுக்கு அன்றை திறனாய்வு முறையான உரையெழுதும் முறையை மேன்மையான முறையில் எழுதிச் சாதித்த நச்சினார்க்கினியரை “உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர்” என்று போற்றிக் கொண்டாடியுள்ளது தமிழ் மரபு.  அப்படியொரு மரபை இன்றைக்குத் தமிழ்ப்பல்கலைக்கழகம் முன்னெடுத்து உள்ளதை நினைத்து மகிழ்கிறேன்.  இந்த விருது எனக்கான தனிப்பட்ட விருதாக நான் கருதவில்லை. தமிழ் இலக்கிய வெளியில் தான் வாசித்த இலக்கியப் பிரதிகளைக் குறித்து அதற்கிணையான பல்வேறு பிரதிகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் மேன்மையான திறனாய்வாளர்கள் அனைவர்க்கும் பல்கலைக்கழக அளவில் கிடைத்த ஓர் அங்கீகாரமாகக் கருதி நன்றியோடு வணங்குகிறேன்.

தமிழ் அறிஞர்களும் சான்றோர் பெருமக்களும் கூடியுள்ள இந்த அவையில் தமிழ்நாட்டில் நம்முடைய இலக்கியக் கல்வி என்னவாக இருக்கிறது என்பது குறித்து இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மனித வாழ்வு என்பது என்ன என்ற வினாவிற்கு மொழியினால் கட்டமைக்கப்பட்ட ஒருவகையான புனைவு எனப் பதில் கூறிவிடலாமெனப்படுகிறது. மனிதர்களுக்கு அவர்கள் உருவாக்கிக் கொண்ட மொழி அமைப்பிலிருந்து வெளியே செல்ல வெளிவாசலென ஒன்று இல்லை.  இவ்வாறு மனிதர்களைப் பிடித்தாட்டும் மொழியோடு மிகவும் அணுக்கமான உறவு கொண்ட ஒன்றுதான் இலக்கியம். இந்த இலக்கியம் மொழியோடு ஆனமட்டும் கொஞ்சுகிறது. குலாவுகிறது.  சிரிக்கிறது.  சீறுகிறது.  விளையாடுகிறது. மொழியையே மீறுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை வடித்தெடுத்த மொழியையே மாற்றி வளர்த்தெடுக்கும் மாபெரும் பணியிலும் ஈடுபட்டுக் கொண்டே வருகிறது. இப்படி இலக்கியம் மொழியின் மேல் வினைபுரிவதன் மூலம் அந்த மொழியினால் அமைந்த மனித சமூகத்தின் மேலும் வினைபுரிவதாக முடிகிறது. எனவேதான் இலக்கியம் அந்த மொழி பேசும் மக்களின் கையடக்கக் கணினியாகச் செயல்படுகிறது.  தட்டத் தெரிந்து தட்டினால் மனிதம் சார்ந்த எதையும் அதிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். கணினி போலவே இலக்கியமும் முழுக்க முழுக்கக் குறிகளாலான மொழியினால் வார்க்கப்படுவதால் மொழியின் பதியமாகக் கிடக்கும் மனித மனத்திற்கு இதமானதாகவும் நெருக்கமானதாகவும் ஆகிவிடுகிறது. அதனால்தான் மனிதர்களாக அடையாளப்படுத்தப்படும் அனைவருக்கும் தவிர்க்கவே முடியாத ஒரு பொருளாக இலக்கியம் தொடர்கிறது.  இசைக்கலைஞர், ஓவியர், சிற்பி, நாடகக் கலைஞர், நாட்டியக் கலைஞர், நாட்டுப்புறக் கலைஞர், திரைப்படக் கலைஞர் என்ற கலையோடு தொடர்புடையவர்கள் மட்டுமல்ல,  அறிவியல் அறிஞர்கள், தத்துவமேதைகள், மதபோதகர்கள், புரட்சியாளர்கள், அரசியல் வானத்தில் நிற்க நேரமின்றிக் கிலோ மீட்டர் வேகங்களில் பறந்து திரியும் அரசியல் தலைவர்கள் உட்பட யாருக்குள்ளும் இந்த இலக்கியம் காற்றைப்போல் நுழைந்து விடுகிறது.

இத்தகைய ஆற்றல் வாய்ந்த ‘இலக்கியம்’ பற்றிய கல்வி நம்முடைய நவீன வாழ்விலும் கல்வித் திட்டத்திலும் எந்த நிலையில் – தரத்தில் – இருந்து கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் பெருமைப்படத்தக்கதாக இல்லை; இலக்கியம் மற்றும் மொழிப்பாடத்திற்கான நேரத்தைக் குறைத்துக் கொண்டுபோவதே இன்றைய பாணியாக மாறி இருக்கிறது. இதைவிட அவலம் சமூகத்திற்கு வேறென்ன வேண்டும். மேலும் நம்முடைய கல்வி நிலையங்களில் இலக்கியத்தைக் கற்பிக்கும் முறை இன்றைக்கும் செய்யுள் என்றால் பொழிப்புரை, இலக்கணக் குறிப்பு சொல்வதோடு முடிந்து விடுகிறது; கூடினால் நயவுரை என்ற முறையில் உவமைகளை விளக்குவதோடு அமைந்து விடுகிறது. நவீன இலக்கிய வடிவமான நாவல், சிறுகதை என்றால், கதைச்சுருக்கம் செல்வதோடு சரி! அதையும் சில இடங்களில் கற்பிக்கும் ஆசிரியர் கூடச் சொல்லாமல், நன்றாகப் படிக்கும் ஒரு மாணவர் கதையைச் சொல்லி முடித்துவிடுகிறார். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும்  மேலே சொன்னதுபோல ஓர் இலக்கியப் பிரதி பெறும் மகத்தான இடத்தை உணர்ந்து உள்வாங்காத் தன்மைதான். ஒரு பிரதிக்குள் வினைபுரிய வேண்டுமென்றால், திறனாய்வுப் புலமை வேண்டும். திறனாய்வுப் புலமை வேண்டும் என்றால் இலக்கியக் கோட்பாட்டறிவும் வரலாற்றறிவும் வேண்டும்; இந்தப் பற்றாக்குறை நமது இலக்கியக் கல்விப்புலத்தில் நீக்கமற எங்கும் நிறைந்து கிடக்கிறது; வளமான திறனாய்வு இல்லாத இடத்தில் மேன்மையான இலக்கியமும் இல்லை.  வாழ்வும் இல்லை என்ற புரிதல் நிகழ்ந்தாக வேண்டும். இப்படியான ஒரு புரிதலை நோக்கித் தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் ஓர் அற்புதமான முயற்சியாகத்தான் நான் இந்தத்திறனாய்வுச் செம்மல் விருது’ என்ற நிகழ்வைப் பார்க்கிறேன். ஓர் இலக்கியப் பிரதியை நடத்தும் ஆசிரியர் வகுப்பிற்குள், அந்த இலக்கியத்தைப் படைத்த படைப்பாளி, அந்த இலக்கியத்தைத் திறனாய்வு செய்த திறனாய்வாளர், இலக்கிய வரலாற்றாசிரியர், இலக்கியக் கோட்பாட்டாளர் என நால்வரும் வந்து போக வேண்டும்.  அப்படியொரு தளத்தில் இலக்கியத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் பெருமக்களை உருவாக்கும் முயற்சியில் தமிழ்ப்பல்கலைக்கழகம் இந்தப் பரிசு மூலம் முன்னெடுத்துள்ளது. பாராட்டுகிறேன்; வணங்குகிறேன்.

திறனாய்வுச் செம்மல்’ எனப் புகழ்பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகம் விருது வழங்கும் இந்த நேரத்தில் கல்விப் புலத்தில் இருந்து ஒரு நல்ல ‘விமர்சகர்’ உருவாகி வருகிறார் என முதன் முதலில் 80 களிலேயே என்னை அடையாளப்படுத்திய ஊடகவியலாளர் திரு. மாலன் அவர்களையும் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களையும் முதன்முதலில் பாரதியார் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் திறனாய்வுக் கட்டுரை (பாரதியும் வால்ட் விட்மனும்) வாசிக்க வாய்ப்பளித்த கவிஞர் சிற்பி அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

மேலும் “இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும்” என்ற என்னுடைய நூலுக்குக் கம்பன் புகழ்ப் பரிசு வழங்கிய புதுச்சேரி அரசுக்கும், “பெண் – மொழி - புனைவு” என்ற நூலுக்குப் பரிசு வழங்கிய திருப்பூர் தமிழ்ச் சங்கத்திற்கும், “சிறந்த திறனாய்வாளர்” என்று பேரா.கா.சிவத்தம்பி விருது வழங்கிய கணையாழி ஆசிரியர் இப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் திரு.ம.இராசேந்திரன் அவர்களுக்கும், மேலும் இதழ் ஆசிரியர் பேரா. சிவசு அவர்களுக்கும் என் திறனாய்வுச் செயல்பாடுகளுக்காக ‘விளக்கு’ விருது வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்களும் நன்றி கூறுவது என் கடமை. மேலும் என் நெறியாளர், இப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேரா. ஒளவை நடராசன் அவர்களை நன்றியோடு இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன். அன்றியும் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் என் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் மிக்க நன்றி.

 தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் இந்த விருது மூலம் என்னை ஊக்கப்படுத்தியுள்ளமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

---0---

No comments: