பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - தேன் கிண்ணம் - ச. சுந்தரதாஸ் - பகுதி 14

 .

முன்னணி நகைச்சுவை நடிகர்களாக திகழ்ந்தவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் படங்களில் கதாநாயகனாக நடிக்கவும் துணிவதுண்டு அன்றைய சந்திரபாபு முதல் இன்றைய சந்தானம் வரை இது தொடர்கிறது. அந்த வகையில் நகைச்சுவை நாயகனாக திகழ்ந்த நாகேஷ் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இன்னும் சொல்லப்போனால் நகைச்சுவை நடிகர்களுக்குள்ளேயே அதிக படங்களில் கதாநாயகனாக நடித்த பெருமை நாகேசையே சாரும் .


இந்த வகையில் அவர் கதாநாயகனாக நடித்து 1971 இல் வெளிவந்த படம் தேன்கிண்ணம். அன்றைய விவித பாரதி வானொலி நேயர் விருப்ப நிகழ்ச்சியான தேன்கிண்ணம் நிகழ்ச்சி பிரபலம் பெற்று விளங்கியது. அதனையே படத்துக்கு பெயராக வைத்து அதனை தயாரித்து இயக்கி இருந்தார் சித்திரமஹால் கிருஷ்ணமூர்த்தி. படத்தில் கதாநாயகியாக நாகேஷின் இனையாக பிரபல கவர்ச்சி நடன நடிகை விஜயலலிதா நடித்திருந்தார். தொடர்பில்லாத ஜோடிப் பொருத்தமாக அமைந்த போதும் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.


செல்வந்தரான கனகசபை ஊரில் இளம் பெண்கள் கவர்ச்சியான உடை அணிந்து நடமாடுவதால் ஆண்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கருதுகிறார். இதனை எதிர்க்கும் முகமாக ஆ. பா. ச என்ற இயக்கத்தை அதாவது ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்று தொடங்குகிறார். ஆபாசமாக உடை அணிந்து திரியும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் படி வேலையில்லாத இளைஞனான மோகனுக்கு கூறுகிறார். மோகனோ அவரின் மகள் மாலாவையே காதலிக்க நிலைமை விபரீதமாகிறது.




நகைச்சுவை படம் என்பதால் விகே ராமசாமி, எம் ஆர் ஆர் வாசு , சச்சு , தேங்காய் சீனிவாசன் என்று பலர் நடித்தனர். வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகராக இருந்த சுருளிராஜனுக்கு இப்படத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.


கதை வசனத்தை பிரபல வசனகர்த்தாவான ஐயா பிள்ளை எழுதி ரசிகர்களை சிரிக்க வைத்தார். சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் அமைந்தன படத்தில் அவ்வப்போது இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றதை அவதானிக்க முடிந்தது. இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றதனால் சித்திரமஹால் கிருஷ்ணமூர்த்தி பின்னர் தொடர்ந்து சில நகைச்சுவை படங்களை தயாரித்து இயக்கினார்.





No comments: