பாரதி தரிசனம் – அங்கம் 04 அவுஸ்திரேலியாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அக்கினிக்குஞ்சு இதழ் ! அக்கினிக்குஞ்சு : உறைபொருளும் மறைபொருளும் ! ! முருகபூபதி


“ இனிய தமிழ் அன்ப, புலம்பெயர்ந்து உலகின்  பல நடுகளிலும் பரந்து வாழும் தமிழர் மத்தியிலே, இன்று கலை – இலக்கிய இதழ்கள் பல வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலே பல ஃபோட்டோ காப்பி எந்திரத்தின் உதவியுடன் வெளிவருகின்றன. அவை அனைத்தும் வட்டார நோக்குகளையும் – இலக்குகளையும் தாங்கி வெளிவருகின்றன.

இருப்பினும், அவை அனைத்துமே தமிழ் நேசிப்பின் வெளிப்பாடு. எனவே உவகைக்குரியன. பத்தோடு பதினொன்றாக   அக்கினிக்குஞ்சுவை நாம் வெளியிடவில்லை என்பதை முதலாவது இதழே இனங்காட்டும் என்று நம்புகிறோம்.

வட்டார நலன்களை விட்டு, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலே உலகார்ந்த தமிழ் கலை இலக்கியச் சஞ்சிகை ஒன்று வெளிவருதல் வேண்டும் என்கிற ஆசை தமிழ் நேசிப்புச்சுரக்கும் நெஞ்சங்கள் பலவற்றிலே நீண்ட நாள்களாக கனன்றது. இந்த அத்தியந்த ஆசையைப் பூர்த்தி செய்யும் பூபாளமாக  ‘ அக்கினிக்குஞ்சு  ‘ வை வெளியிடுவதில் உண்மையிலேயே பூரிப்பு அடைகின்றோம்.   

இந்த வரிகளுடன் தொடங்கிய  “மனம் விட்டுப்பேசுவோம்  “ என்ற ஆசிரியத்தலையங்கத்துடன் மெல்பனிலிருந்து அக்கினிக்குஞ்சு மாத இதழ் 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளிவந்தது.

அதன் ஆசிரியர்தான், தற்போது அதே பெயரில் இணைய இதழை நடத்திவரும் எழுத்தாளர் யாழ். பாஸ்கர்.

இவர் 1989 ஆம் ஆண்டளவில் மெல்பனுக்கு வருகை தந்திருந்த


காலப்பகுதியில்தான் எனது இரண்டாவது கதைத் தொகுதி சமாந்தரங்கள் வெளிவந்திருந்தது.

தமிழ் நாடு தமிழ்ப்புத்தகாலயம் வெளியீடாக அந்த நூல் வரவான வேளையில் 1989 ஜூன் மாதம் 25 ஆம் திகதி அதற்கு மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் வெளியீட்டு விழாவை நடத்தினேன்.  அக்காலப்பகுதியில் சிட்னியில் தனது மூத்த புதல்வர் மருத்துவர் அநுராவிடம் வந்து சேர்ந்திருந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையை அழைத்து பேசவைத்தேன்.

அவர் வருகை தந்து என்னுடன் தங்கினார்.  அவரை அவரது நீண்ட கால நண்பரும் பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளருமான கலாநிதி காசிநாதரிடம் அழைத்துச்சென்றேன்.  இவர்தான் எனது நூல் வெளியீட்டுக்கும் தலைமை தாங்கினார்.

காசிநாதரின் துணைவியார் நளினி, கிழக்கிலங்கையில் கல்குடா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உணவு அமைச்சருமான ( அமரர் ) நல்லையாவின் மகள்.

இந்தத் தம்பதியரை எஸ். பொ. நன்கு அறிவார்.


எஸ்.பொ. மெல்பன் வந்ததும், என்னிடம் யாழ். பாஸ்கர் பற்றி விசாரித்தார். அப்போது அவரும் எனது நண்பராக எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருந்தார்.

அவருக்கு கலை, இலக்கிய ஆர்வம் தீவிரமாக இருந்தது.  மெல்பனில் மொராபின் என்ற இடத்தில் நண்பர்களுடன் வசித்துவந்த அவர், மெல்பன் தமிழ்க்கலை மன்றம்  நடத்திய கலைமகள் விழாவில் மேடையேற்றப்பட்ட கலையும் கண்ணீரும் வரலாற்று நாடகத்தில் சிற்பியாக நடித்து பாராட்டுப் பெற்றவர்.

யாழ். பாஸ்கருக்கும் ஒரு இலக்கிய இதழை நடத்தவேண்டும் என்ற கனவு நீண்டநாட்களாக இருந்தமையால்,  தமிழ்நாட்டில் அத்தகைய ஓர் இதழை அச்சிடுவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இவரது மைத்துனர் தருமகுலசிங்கம் டென்மார்க்கில் மொழிபெயர்ப்பாளராகவும் அரசியல் சமூகப்பணியாளராகவும் இயங்கி வருபவர். எஸ்.பொ.வின் நண்பர்.

அதனால், எஸ். பொ., 1989 இல் முதல் தடவையாக மெல்பன் வந்திறங்கியதும், விசாரித்த பெயர்தான் யாழ். பாஸ்கர்.

அக்காலப்பகுதியில் மெல்பனிலிருந்து விமல் . அரவிந்தனின் மரபு இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. அதற்கும் அந்தப்பெயரைச் சூட்டியவர் எஸ். பொ. அவர்கள்தான்.

எமது அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பின்னர் 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் பார்க்வில்  பல்கலைக்கழக உயர்தரக் கல்லூரியில் பாரதி விழாவை நடத்தியது. இதுபற்றி பாரதி தரிசனம் தொடரின் முதல் அங்கத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.

குறிப்பிட்ட இந்த பாரதிவிழாவுக்கும் எஸ்.பொ.வை அழைத்திருந்தோம்.  தமிழர் ஒன்றியத்தினால் நாம் நடத்திய


நாவன்மைப்போட்டியில்  முதல் பரிசுபெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் சூட்டினோம்.

அதில் மேற்பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் பிரகாஷ் அந்தோனிப் பிள்ளைக்குரிய தங்கப்பதக்கத்தை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நான் வழங்கியதுடன், அதனை குறிப்பிட்ட வெற்றியாளருக்கு அணிவிக்குமாறு எஸ்.பொ. வை அழைத்தேன்.

இவ்வாறு நான் செய்யப்போகின்றேன் என்பதை தொலைபேசி ஊடாகவும் கடிதம் மூலமாகவும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனுக்கும் சங்கத்தின் சர்வதேச செயலாளர் ராஜஶ்ரீகாந்தனுக்கும் தெரிவித்து அனுமதியும் பெற்றிருந்தேன்.

எஸ். பொன்னுத்துரை நீண்டகாலமாக எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தையும் அதில் இணைந்திருந்த பேராசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தவர். அவர் மேடைப்பேச்சுக்களில் மட்டுமன்றி தனது பதிவுகளிலும் பல தடவை எழுதிவந்திருப்பவர்.

அவ்வாறு ஒரு எதிரியாகவே நடந்துவந்திருக்கும் எஸ்.பொ. வை


,  முருகபூபதி எவ்வாறு ஏற்றுக்கொண்டு தானும் இணைந்திருக்கும் மெல்பன் பாரதிவிழாவில், சங்கத்தின் சார்பில் அளிக்கவிருக்கும் தங்கப்பதக்கத்தை வழங்கி அணிவிக்கச்செய்கிறார் என்ற விமர்சனங்களும் இலங்கையிலிருந்து வந்தது.

அதற்கு நான் மகாகவி  பாரதியிடமிருந்தே பதில்களை வழங்கினேன்.  பாரதி விழா நடத்துகின்றோம்.  மாற்றுக்கருத்திருந்தாலும் எஸ்.பொ. வும் படைப்பாளுமை மிக்கவர். அவரது கரத்தினால் குறிப்பிட்ட தங்கப்பதக்கத்தை சூட்டினால், அது தமிழுக்கும் பெருமை சேர்க்கும் என்றேன்.

பாரதியின் பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே கவிதையை இங்கே பார்க்கலாம்.

மாற்றுக்கருத்துக்கொண்டவர்கள் உடன்படக்கூடிய புள்ளிகளில் சந்திக்கமுடியும் என்பதை பாரதியார் சொல்லாமல் சொல்லிச்சென்றவர். 

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!

பகைவனுக் கருள்வாய்!

புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே!

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே!

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே!

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!

 

குறிப்பிட்ட மெல்பன்  பாரதி விழாவுக்கு முதல்நாள் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு எனது இரண்டு அறைகள் கொண்ட தொடர்மாடி வாடகைக்குடியிருப்பில் எஸ்.பொ. வுக்கும் அவரது நண்பர்களுக்கும் இராப்போசன விருந்து வழங்கினேன். அதில் காசிநாதர் தம்பதியர், மரபு ஆசிரியர் விமல் அரவிந்தன், யாழ். பாஸ்கர்,  மாவை நித்தியானந்தன், அருண். விஜயராணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அச்சமயம் யாழ். பாஸ்கர் எமக்கு தாம் வெளியிடவிருக்கும் அக்கினிக்குஞ்சு முதலாவது இதழை காண்பித்தார்.

அந்தச்  சந்திப்பு இனிமையானது. மரபு ஆசிரியர் விமல். அரவிந்தன் – அவுஸ்திரேலிய முரசு ஆசிரியர் அருண். விஜயராணி ஆகியோருடன் அக்கினிக்குஞ்சு ஆசிரியர் யாழ். பாஸ்கரும் இணைந்திருந்த இலக்கிய சந்திப்பு.  இதற்கு வழிசமைத்தவர் பாரதியார்தான்.

மாவை நித்தியானந்தன் அதன்பின்னர் மெல்பனில் பாரதி பள்ளி என்ற பாடசாலையையும் தொடங்கினார். பாப்பா பாரதி என்ற சிறுவர்களுக்கான இறுவட்டும் மூன்று பாகங்களில் வெளியிட்டார்.

எமது பாரதி விழா முடிந்து மறுநாள்  17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பன் மொராபின் நகர மண்டபத்தில் அக்கினிக்குஞ்சு முதல் இதழின் வெளியீட்டு அரங்கு கலாநிதி காசிநாதர் தலைமையில் நடந்தது.

அந்த நிகழ்வில் அச்சமயம் விக்ரோரியா தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவிருந்த மருத்துவர் இராஜன் இராசையா, சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், மாவை நித்தியானந்தன், அருண். விஜயராணி ஆகியோருடன் நானும் உரையாற்றினேன்.

அக்கினிக்குஞ்சு இதழில் எஸ்.பொ, கொண்டோடி சுப்பர், அபிமன்யூ முதலான புனைபெயர்களிலும் எழுதினார்.

பாரதியார் தமது   அக்கினிக்குஞ்சு கவிதையில் இவ்வாறு  எழுதுகிறார்:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

இக்கவிதையை  பல கோணங்களில் நாம்  பார்க்கமுடியும். அதன் உறைபொருளையும் மறை பொருளையும் எவ்வாறும் எடுத்துக்கொள்ள முடியும்.

இணையத்தில் இக்கவிதை வரிகளுக்கு விடுதலை வேட்கை சார்ந்தும், ஆன்மீகம் சார்ந்தும் இருவேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டிருப்பதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


(விடுதலை வேட்கையை / சமுதாயத்தை உத்தேசித்து)

பிற நாட்டினரின் ஆதிக்கத்தால், நம் இந்திய நாடு வனம் போலக் காட்சியளித்தது. இந்நாட்டில் வாழும் மனிதர்கள் அடிமைத்தனத்தில் ஆட்பட்டு உணர்வற்று மரம்போல் இருந்தனர். அவர்தம் மனம் எனும் பொந்தில் விடுதலை எனும் தீப்பொறியை ஏற்றி வைத்தேன். அதன் தாக்கத்தால் அனைவரது மனங்களிலும் படர்ந்திருந்த அடிமைத்தனம் எனும் காடு அழிந்தது. அடிமைத்தனக் கொடுமையில் ஆட்பட்டு அதிலிருந்து மீள முயல்வோர்க்கு சிறு பொறியளவிலான விடுதலை வேட்கையே போதுமானது. அச்சிறு பொறி பல்கிப்பெருகி அதன் தாக்கத்தால் அடிமைத் தளை நீங்கும். இவ்வாறான சிந்தனையில் இப்பாடல் பாடப்பட்டிருக்கலாம்.

மற்றொரு கருத்து;

(ஆன்மீகம் / வாழ்வின் தன்மையை உத்தேசித்து)


மனம் ஒரு காடு, அழுக்காறுகள் அதில் உள்ள மரங்கள், இதில் ஒரு மரத்தின் பொந்தில் ஞானத்தீயின் ஒரு சிறுபொறியை வைத்தேன்.  அந்நெருப்புப் பொறியின் தாக்கத்தால் அம்மரங்கள் அடர்ந்த அக்காடு அழிந்தது. அதாவது மன அழுக்குகள் அனைத்தும் அழிந்து ஒழிந்தது. ஞானவேட்கையில் ஆட்பட்டு தெளிவுபெற முனைவோர்க்கு சிறு பொறியளவிலான ஞானமே போதும். அதன் தாக்கத்தால் மனசஞ்சலம் அனைத்தும் தீரும்.

இது இவ்விதமிருக்க, ஞானசேகரன் இயக்கத்தில் வெளியான பாரதி திரைப்படத்தில், இந்தக்கவிதை இசையோடு பாடலாக வரும்போது,  பாரதியார் கனகலிங்கம் என்ற அடிநிலை மைந்தனுக்கு பூநூல் அணிவிக்கும் சடங்கு இடம்பெறும் காட்சி வருகிறது.

அதனையடுத்து அக்கினிக்குஞ்சு கவிதை அவரது நாவில் பாடலாக உதிர்கிறது.

அப்போது அவரது மனைவி செல்லம்மாவாக வரும் நடிகை தேவயானியின் முகத்தில் தோன்றும் மாற்றங்கள் உருக்கமாகவிருக்கும்.

கண்ணீரோடு பாரதியின் செயற்பாடுகளையும் தர்மாவேசத்தையும் சகித்துக்கொண்டு மனதிற்குள் அக்கினிக்குஞ்சை சுமந்தவாறு அந்தப்பெண் படும் பாட்டை  இயக்குநர் திரையில் காண்பித்திருப்பார்.

பாரதியை எந்தச்சிமிழுக்குள்ளும்  அடக்கமுடியாது என்பதற்கு அவரது அக்கினிக்குஞ்சு கவிதையும் ஒரு முக்கிய சான்று.

அந்தப்பெயரில் அவுஸ்திரேலியாவிலிருந்து இலக்கிய இதழ் வெளியாகியிருப்பதுடன், தற்போது, அவ்விதழ் இணைய இதழாக உலகெங்கும் பரவியிருக்கிறது.

அதில் இந்த பாரதி தரிசனமும் நனவிடை தோய்தலாக வெளியாகின்றது.

( தொடரும் )

----0---

letchumananm@gmail.com

 

 

 

 

No comments: