தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .        


   "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை" இது நாம் யாவரும் அறிந்த இது மொழி அல்லவா!. இந்த ஆன்றோர் வாக்கு ஒரு  தாய்க்கும் அவளின் குழந்தைகளுக்கும் இடையான உறவு காரணமாக எழுந்த மூதோர்  உரை எனக்  கொள்வதா அல்லது அதற்கும் மேலாக ஓர் அகண்ட கருத்தினை குறிக்கிறதா?

  மிகப் புராதன காலத்திலேயே மனித குலத்தில் பெண்களே மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்டனர்.அச் சமூகத்தை சமூக விஞ்ஞான ஆராய்ச்சி நிபுணர்கள் "பெண் ஆதிக்க சமூகம்" என குறிப்பிடுவது வழக்கம்.  மனித சமுதாயத்தின் பிறப்பும் வளர்ச்சியும், பெருக்கமும் பெண்ணில் தான் தங்கியுள்ளது.  ஏன் இன்றைய நிலையை எடுத்துக் கொண்டாலும் பெண் உடலுக்கு வெளியே விஞ்ஞான பூர்வமாக, ஆய்வு கூடத்தில் கருக்கட்ட முடியும் எனும் நிலை ஏற்படுவதற்கு முன்பெல்லாம் கருவுறும் திறன்  கொண்ட  பெண் இல்லாவிடில் புதிய சந்ததியே உருவாக முடியாதல்லவா?.

  இன்று சமூகவியல் அறிஞர்கள் மந்தைகளை வசப்படுத்தி பால் கறப்பதை முதலில் கண்டறிந்தவர் பெண்ணே  என்கின்றனர். காரணம்,  பெற்ற குழந்தைக்கு கொடுக்கும் பால் வற்றியதும் அந்த குழந்தையின் பசியைப் போக்க கண்டறிந்ததே மந்தைகளை வசப்படுத்தி பால் கறந்தமை. அதையடுத்தே மந்தை மேய்க்கும் சமுதாயம் உருவானது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு இட்டு சென்ற பின்னர்,  குடிசைக்கு உள்ளே வாழ்ந்து பெற்ற பிள்ளைகளை பராமரிப்பதும் பசியுற்ற போதும் உணவு கொடுத்து வளர்த்தாள் பெண். அதற்கு மேலும் சந்ததியை பெருக்கும் ஓர் உன்னத உழைப்பில் ஈடுபட்டிருந்தது பெண் இனம். இவ்வாறு வீட்டுக்குள்ளே வாழ தொடங்கியவர்  குடிசையை சுற்றியுள்ள நிலத்தை கல் ஆயுதத்தால் கிண்டி கிணறு நிலத்தை பண்படுத்தி பயிர் விளைச்சலில் இறங்கினாள். இன்று சமூகவியல் ஆய்வாளர்கள் விவசாயம் என்பது பெண்களை முதலில் கண்டறிந்து உணவு பற்றாக்குறையை நீக்கியவர் என்கின்றனர்.       



              


 

 ஆக தனது குழந்தைகளுக்கு மட்டும் தாயாக இராமல் பூமி தாயையும் பண்படுத்தி  அதன்மூலம் கிடைக்கும் பயிர்களையும் போஷித்து வளர்த்தனர். மானிடத் தாய்குலம் பசு, எருமை,  போன்ற கால்நடைகளின் கன்றுகளையும், குட்டிகளையும் பராமரித்து கால்நடைகளின் தாயாக விளக்கியது பெண்களும்.

   இக்காலகட்டத்தில் கணவன் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. பெண்ணே உயர்ந்தவளாக மதிக்கப்பட்டாள். அவள் தனக்கு விரும்பிய ஆணுடன் இன்புற்று வாழ்ந்து கருவுற்று பிள்ளையை பெற்றெடுப்பாள்.இங்கு தகப்பன் என்ற ஒரு நாமத்தை உணராத ஒரு சமுதாயமாகவே அது அமைந்தது. இவர்கள் வாழ்க்கை இயற்கையை தழுவியதாகவே இருந்தது. இதை  இயற்கை நெறி  காலம் என்பர்.இக்காலத்தில் தான் ஆதிக்கம் மலர்ந்தது.  யாவற்றையும் பெற்று படைப்பவள் பெண் என்ற சிந்தனையினடியாக  இப்பூமி, அண்டவெளியாவும் பெண்ணாகவே கற்பனை செய்தனர்.  இதன் அடியாக,  கடவுள் வழிபாடு என்ன ஏற்பட்டபோது இயற்கை தாயே எனக் கொண்டனர் ஆதி மக்கள்.

 கடவுள் வழிபாடு என ஏற்பட்டபோது  நமக்கு இலகுவில் புரியக்கூடிய பெண் உருவில் தான் கண்டனர்.  கடவுள் என்பது உருவில் தான் எனும் கோட்பாடு படிப்படியாக வளர்ந்தது. அதனால் தெய்வம் என்பது  பெண்தெய்வம் தான் வேறொன்றும் அல்ல என்னவாயிற்று. எம்மவர் மட்டுமல்ல மிக பழமையான நாகரீகத்தை கொண்ட எகிப்து மொசப்பட்டோனியா  போன்ற பிரதேசங்களிலும் இவ்வாறான சிந்தனையை நிலவியுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட மிகப்பழமையான பெண் தெய்வங்கள் பெரிய வயிற்றுடனும், மார்பகங்களுடனும்  காணப்படுகின்றன. இவற்றை தொல்பொருள் காட்சி கூடகங்களில் காணலா

  எமக்கு கிடைக்கும் சங்க நூல்கள் மூலம்  எம்மவரும் பெண்ணைய தெய்வமாக வணங்கியமையை அறிகிறோம். போருக்கு செல்லும் முன் கொற்றவையை  வணங்கினர். போரில் வென்றதும்  அதே இடத்தில் மாமிசம் சமைத்து கொற்றவைக்கு படைப்பதை காண்கிறோம். காலத்தின் ஓட்டத்தில் வீரத்தின் தெய்வம் காளி, துர்க்கை,  செல்வத்தின் தெய்வம் லட்சுமி, அறிவின் தெய்வம் சரஸ்வதி எனவாயிற்று. பெண் உருவில் கடவுளை கண்ட சமுதாயமே வீரலட்சுமி,பாக்கிய லட்சுமி,சந்தான லட்சுமி என்றெல்லாம் வியந்து வணங்கும் கோட்பாடுகள் தோன்றின.

 அவ்வாறெனில் ஆண் தெய்வ வழிபாடும் தோன்றுவதற்கான சமுதாய அமைப்பு எவ்வாறு ஏற்பட்டது. மிருகங்களை வேட்டையாடியும், கால் நடைகளை வளர்த்தும்  மனித சமுதாயத்தின் பசிக் கொடுமைக்கு பதில் கூறிய ஆண்கள்,  பூர்வீக விவசாயப் பாதையில் சென்று உணவை பெருக்காமல் ஒரு பாதையில் செல்ல தலைப்பட்டனர் குதிரை சவாரியை கண்டறிந்து விரைந்து பயணம் செல்வதற்கு வழி  கண்டனர்.  அத்துடன் தாமிரம் போன்ற உலோகங்களும் கண்டுபிடித்து,  அவற்றை கொண்டு ஈட்டி வாள் போன்ற ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன குதிரைப்படையும் ஆயுதங்களும் சேர்ந்து விட்டால் யாது நடைபெறும், ஆண்வர்க்கம் அகலக்கால் எடுத்து வைத்தது. தோள் வலிமையாலும் வாள் வலிமையாலும் பிரதேசங்களை கைப்பற்றினர். தம்மை எதிர்க்க முயன்ற தொழில் குடி சமூகங்களை அழித்து ஒழித்தனர்.  இக்கால கட்டம் வீர யுக காலம் என்றனர் வரலாற்று அறிஞர்கள்.  யாவரும் பொதுவாக உழுதுண்ட நிலம் பங்கு போடப்பட்டது, எனது சொத்து என்ற உரிமையும் அதற்கு வாரிசு பெற்றெடுத்த பிள்ளைகளே என்ற சிந்தனை வலுப்பட்டது.

   சமுதாய வளர்ச்சியின் ஒரு அங்கமாக அடக்கு முறை இருப்பதை நாம் அறிவோம்.  தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த அடக்குமுறை அவசியம் என்பதை ஆதிக்க வர்க்கம் கடைப்பிடிப்பது எங்கும் காணப்படுவதே. ஆகவேதான் தமது உயர்வுக்கும்,தமது ஆதிக்கத்துக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது பெண் ஆதிக்கமே என உணர்ந்தவர்கள் பெண் ஆதிக்கத்தை சிதறடிக்க தொடங்கினர்.  இந்தப் போர், காலா காலமாக நடைபெற்று வருகிறது. பெண் என்பவள் ஆணின் நிழலிலேயே என்றும் வாழ வேண்டியவள் என்ற எண்ணம் இன்றும் எம்மிடையே நிலவி வருகிறது.

  ஆண் வர்க்கத்தின் உயர்வைக் காட்டுவதற்கும் அந்த உயர்வு என்றும் நிலை பெறுதற்கும் ஏற்ற வகையிலேயே அறநூல்கள், வேதங்கள், தத்துவங்கள் யாவும் எழுதி வைக்கப்பட்டன. இதனால் படைத்தல் தொழில் பிரம்மா  எனும் தெய்வத்திற்கும், காத்தல் விஷ்ணுவிற்கும் அழித்தல் ருத்ரனிற்கும் வழங்கப்பட்டது.பெண்கள் வேதங்களைப் படிக்க அனுமதிக்கப்படவில்லை, பெண்ணுக்கு  மட்டும் கற்பு நெறி வேண்டியது என்றனர். கணவனை இழந்தால்  விதவை கோலம் பூண்டு வதைபட வேண்டும் என்றனர். சமுதாய மாற்றத்தால் பெண் இனத்தின் நிலை மாற்றத்தை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் கண்டோம்.

 விஞ்ஞான யுகத்தில் வாழும் நாம் எல்லோரும் புதிய படைப்புகளாலும், நவீன கண்டுபிடிப்புகளாலும்,  புதிய சிந்தனைகளையும் அறிவு  வளர்ச்சிகளையும் பெற்று முன்னேறுகிறோம். மறுபுறத்தில் எமது பூர்வீகத்தின் வேர்களை தேடுவதும் வேண்டியதொன்றே. அவற்றை எமது வாரிசுகள் முறையாக புரிந்து கொள்ளல் வேண்டும்.

 இவற்றில் ஒன்றுதான் தாய் கடவுள் அடியாக உருவான சக்தி வழிபாடு எல்லாம் வல்ல சக்தியை நினைவு கொள்ளும் நாட்களாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி முதல் நாள் நவதானியங்கள் விதைக்கப்படுகின்றன.  பத்தாம் நாள் பார்க்கும் போது தானியம் முளைவிட்டு வளர்ந்து அழகாக பயிர்களின் இளசுகளாக, கொலுவில் காட்சி அளிக்கின்றன. பயிர்  விளைச்சலுக்கும் செல்வ தமிழ் செழிப்புக்கும் காரணமாகும் சக்தியை பாக்கியலட்சுமி என்கிறோம். நம்மவர் அறிவின் அவசியத்தை வலியுறுத்தும் வகையாக, அறிவுக்கான சக்தியை கலைமகள் என்றனர். வீரத்தை பேணுவதற்காக ஒரு தாய் கடவுளாக காளி ரூபத்தை உருவாக்கினர் பழந்தமிழர்.

                                 "பாதகம் செய்வோரை கண்டால்

                                          மோதி மிதித்துவிடு பாப்பா,

                                        முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா"

 

என எக்காளம் கொட்டினான் பாரதி. பாதகர்களை மோதி மிதிப்பதற்குத்தான் காளி எனும் தெய்வம் உருவாக்கப்பட்டது.

 ஆகவே நவராத்திரி என்பது தாய்மையை போற்றும் தினங்கள் எனக் கொள்ள வேண்டும். இந்த ஒன்பது இரவுகளில் மட்டும் லட்சுமியை பிரார்த்தித்து,சரஸ்வதியை வழிபட்டு, துர்க்கையை அல்லது காளியை போற்றி துதித்து வந்தால்,செல்வமும்,கல்வியும்,வீரமும் வந்துசேரும் எனக்கூறி எமது சிறார்களை திசை திருப்பாமல் எமது முன்னோரின் உன்னத சிந்தனைதான் இது என சமூக வரலாற்று ரீதியாக விளக்குவது மேல் என எண்ணுகிறேன்.

 

                             


No comments: